Written by London Swaminathan
Date: 24 August 2017
Time uploaded in London- 16-57
Post No. 4158
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.
சமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில் புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.
இதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று, அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.
மத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.
இவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்; மொழியியல் வல்லுநர்கள்! தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.
லண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.
இன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.
இந்த முறை எனது இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன் துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.
அந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் . நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.
57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.
மேலே ஏறுவதற்கு 45 நிமிடம்! இறங்குவதற்கும் 45 நிமிடம்! மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.
சிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
கோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல!! அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள் இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.
பெல கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது!
இங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.
கர்நாடகத்தில் ஒரு அதிசயம்!
நாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.
இந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.
(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)
–சுபம்–