அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

 

(கேள்விகள் கற்பனை, பதில்கள் திருப்புகழ் பாடல்களிலிருந்து; —ச. சுவாமிநாதன்)

அன்பரே, வணக்கம். நீர் ஒவ்வொரு திருப்புகழிலும் முருகப் பெருமானை வெவ்வேறு விதமாக வேண்டுவது என்ன?

 

“வாராய் மனக் கவலை தீராய் நினைத் தொழுது

வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்”

“இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன்னோடி வரவேணும்”

“உன் புகழே பாடி நான் இனி

அன்புடன் ஆசார பூசை செய்து

உய்ந்திட வீணால் படாது அருள் புரிவாயே”

“அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள் ஞான இன்பமது புரிவாயே”

 

நீங்கள் இந்துஸ்தானி உருது மொழி சொற்களைக் கூட

பயன்படுத்த அஞ்சுவதில்லையாமே?

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சல் என வரவேணும்”

நீங்கள் ஒரு மருத்துவரா?அழகாக எல்லா வியாதிகள் பெயர்களையும் பாடலில் அடுக்கி விட்டீர்களே?

“ இருமலும் ரோக முயலகன் வாத

எரிகுண நாசி        விடமே நீ

நீரிழிவு விடாத தலை வலி சோகை

எழு கள மாலை         இவையோடே

பெரு வயிறு ஈளை எரி குலை சூலை

பெரு வலி வேறு உள நோய்கள்

 

சரி தேனினும் இனிய தமிழ் பற்றி என்ன பாடினீர்கள்?

இரவு பகல் பல காலும் இயல் இசை முத்தமிழ் கூறித்

திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே”

“அரு மறை தமிழ் நூல் அடைவே

தெரிந்துரைக்கும் புலவோனே”

“வளமொடு செந்தமிழ் உரை செய அன்பரும்

மகிழ வரங்களும் அருள்வாயே”

 

நான் காவி உடை அணிந்து ஒரு மடத்தில் சேரலாம் என்று யோசித்து வருகிறேன். உங்கள் அறிவுரை என்ன? –மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று வள்ளுவர் கூறுகிறாரே.

காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும்

காடுகள் புக்கும் தடுமாறிக்

காய் கனி துய்த்தும் காயம் ஒறுத்தும்

காசினி முற்றும் திரியாதே.

 

அதிசயம் அநேகமுற்ற பழனி மலை” என்று ஒரு அடை மொழி போட்டீர்கள். அங்கே என்ன அதிசயம் இருக்கிறது?

செபமாலை தந்த சற்குணநாதா

திரு ஆவினன் குடி பெருமாளே.

 

ஓஹோ, அங்குதான் முருகன் உங்கள் கையில் உமக்கு சபமாலை தந்தாரா? நீர் அதிர்ஷ்ட சாலிதான். திருப்புகழைப் பழித்தால்………..

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

 

ஒரு பாட்டில் நேர்மையில்லாதோர் யார் யார் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்?

“பஞ்ச பாதகன் பாவி மூடன் வெகு

வஞ்ச லோபியன் சூது கொலைகாரன்

பண்கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை

பங்கன் மோதியம் பாழ் நரகில் வீணின் விழ

பெண்டிர், வீடு பொன் தேடி நொடி மீதில் மறை

பஞ்ச மாமலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர்”

முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்

முறை மசக்கிகள் திருடிகள் மத வேணூல்

மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை

முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ்

கலை நெகிழ்த்திகள் இளைஞர்கள் பொருள் பறித்த மளியின் மிசை

கனி இதழ்ச் சுருள் ஒரு பாதி”

 

அப்பப்பா, திருப்புகழில் இப்படி வசை மாரி இருக்கும் என்று யாரும் எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள்.

முருகனைத் திட்டினாலும் தமிழில் திட்டினால் பலன் உண்டாமே?

தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் (கந்தர் அலங்காரம் 22)

 

திருஞான சம்பந்தரைப் பல பாடல்களில் புகழ்ந்துள்ளீர்களே?

கதிர்காம திருப்புகழில் அவரை முருகன் என்றும் கூறீனீர்களா?

“வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே”

 “புமியதனிற் ப்ரபுவான

புகலியில் வித்தகர் போல

அமிர்த கவித் தொடை பாட

அடிமைதனக்கு அருள்வாயே”

 

குழந்தைச் செல்வம் பெற ஒரு திருப்புகழ் இருக்கிறதாமே. முதல் சில அடிகளை மட்டும் சொல்லுங்களேன்

செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த

திரு மாது கெர்ப்பம் உடலூறித்

தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்

திரமாய் அளித்த பொருளாகி

 

கடைசியாக ஒரு கேள்வி. தேவியர் பெயர்களை எல்லாம் அடுக்கி ஒரு பாடல் பாடினீர்களா?

குமரி காளி வராகி மகேசுரி

கவுரி மோடி சுராரி நிராபரி

கொடிய சூலி சுடாரணி யாமளி      மகமாயி

குறளுரூப முராரி சகோதரி

உலகதாரி உதாரி பராபரி

குரு பராரி விகாரி நமோகரி         அபிராமி

சமர நீலி புராரி தனாயகி

மலை குமாரி கபாலின னாரணி

சலில மாரி  சிவாய மனோகரி    பரையோகி

சவுரி வீரி முநீர் விட போஜனி

திகிரி மேவுகை யாளி செயாளொரு

சகல வேதமுமாயினை தாய் உமை அருள் பாலா.

 

சந்தக் கவி புலவரே, நன்றி, நன்றி.

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: