(கேள்விகள்: எனது கற்பனை, பதில்கள்: சித்தர் பாடல்களிலிருந்து)
சாமி, குருட்டுத் தனமாக ,அர்த்தம் புரியாமல் செய்யும் சடங்குகளைச் சாடுகிறீர்களாமே?
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
அம்மாடியோவ், பாட்டில் அனல் பறக்குதே! நீங்கள் எல்லோரும் எட்டு வகை சித்துக்களைச் செய்வீர்களாமே? இதனால் என்ன பயன் ?
யோகசாலை கட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப் பை சிக்கிப் பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே
அட, எட்டு சித்தி கிடைத்து அற்புதம் செய்தாலும் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. அப்ப, புண்ய நதிகளில் குளித்தால் என்ன?
எத்திசை எங்கும் எங்குமோடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலை முழுக சுத்த ஞானி ஆவரோ?
அது சரி, இப்படி எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேசுவதை எங்கள் ஊர் எதிக் கட்சித் தலைவர்களும் செய்ய முடியும். ஏதேனும் செய்ய வேண்டியதை சொல்லுங்களேன்.
தீர்த்தலிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே
உம்முளே தெளிந்து காண வல்லீரேல்
தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே
நல்ல யோசனை. சித்தர்கள் எல்லோருக்கும் ஜாதியே கிடையாதா?
சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்
பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?
யார் போட்டாலும் தங்க நகைகள் மாறாதாக்கும் சித்தர்கள் சாகாமல் இருப்பார்களா?
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
எங்களை மாதிரித்தான் நீங்களும். அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது சரியா?
நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே
நீரும் உப்பும் போல இருவரும் ஒருவரே, சரி, கடவுளை நாடுவோர் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தலாமா?
மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிற்ப்பறுத்திருப்பரே
ஆக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருப்பார்கள். தெய்வத் தமிழில் நிறைய ஆகமங்கள் துதிகள் இருக்கின்றனவே. எதைப் படிப்பது?
“நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினாலும் அது என்ன பயன்?”
“சாம நாலு வேதமும் சகல சாஸ்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்”
நீங்கள் 600 பாடல்களில் சொன்ன கருத்துக்கள்: மனதில் கடவுள் இருக்கிறான். சடங்குகளோ கோவிலோ தேவை இல்லை. தூய்மையாக இருந்தால் சாதி பேதம் இன்றி எல்லோரும் இறைவனை அடையலாம். நல்ல கருத்துக்கள் தாம், நன்றி.