சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள்

காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதிதன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது.

 

காளிதாசன் உலக மகா கவிஞர்களில் ஒருவன். மிகப் பெரிய நாடகாசிரியன். அவனுடைய ஏழு நூல்கள் அவனுக்கு உலகப் உகழை ஈட்டித் தந்துள்ளன. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் அதிகமான உவமைகளை ரத்தினக் கற்கள் போல ஆங்காங்கு பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளான். சங்க இலக்கிய நூல்களில் இவனுடைய ஆயிரம் உவமைகளில் அல்லது சொற்றொடர்களில் 225 வரை அப்படியே கையாளப்பட்டுள்ளன.

 

ஜி யு போப் கண்டுபிடிப்பு

இந்திய பண்பாடு பற்றிப் பேசும் யாவரும் காளிதாசனின் காவியங்களைப் படித்திருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய அறிவு முழுமை பெற்றதாகாது. ஆங்கில இலக்கியத்துக்கு ஷேக்ஸ்பியர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இந்தியப் பண்பாட்டுப் படிப்புக்கு காளிதாசன் முக்கியம். அவனது காவியங்களும் நாடகங்களும் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் ஆங்கிலம் போன்ற முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. கபிலரின் குறிஞ்சிப் பாட்டைப் படித்த பிரபல தமிழ் அறிஞர் ஜி யு போப் அது காளிதாசன் காவியத்தின் தழுவலே என்று கூறிவிட்டார். இரண்டு நூல்களையும் படிக்கும் எவருக்கும் இது எளிதில் புலப்படும். கபிலரும் குறிஞ்சிப் பாட்டை தமிழை இகழ்ந்த பிரமதத்தனுக்குப் பாடம் புகட்டவே செய்ததால் காளிதாசன் போலவே எழுதி அவனை ஒரு வழிக்குக் கொண்டுவந்தார் என்றால் அது மிகையாகாது. பிரகதத்தனை மனம் மாற்றியதோடு அவனையும் தமிழில் கவிதை எழுத வைத்தார் கபிலர்.

 

கபிலர் ஒரு பிராமணப் புலவர். அவர் ஆரிய மன்னன் பிரகததனுக்கு சம்ஸ்கிருதம் மூலம் தான் தமிழ் கற்றுத் தர முடியும். அப்போது காளிதாசனின் உவமைகலைப் போல தமிழிலும் செய்ய முடியும் என்பதைக் காட்டியிருப்பார். சங்கத் தமிழ் கவிகளில் அதிகம் புனைந்தவர் (235 பாடல்கள்) கபிலர்தான். இவருக்கு அடுத்தபடியாகப் பெயர் பெற்றவர் பரணர். இவரும் பிராமணப் புலவரே. தமிழ் அறிஞர்கள் கபில-பரணர் என்று இரட்டையர்களாகவே எப்போதும் எழுதுவர். பரணரோவெனில் காளிதாசனின் வாசகங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளார். பரணர் வேதங்களில் கரைகண்டவராக இருக்க வேண்டும். கடல்கள் சத்தியம் தவறாது. எத்தனை ஆறுகள் எவ்வளவு தண்ணீர் கொண்டுவந்து கொட்டினாலும் கடல் எல்லை தாண்டாது, நிரம்பிவழியாது என்ற வேத வாசகத்தையும் பரணர் அப்படியே சங்கப் பாடலில் வடித்துள்ளார்.

தமிழ்ப் புலவர்கள் இமயம் வரை சென்றிருப்பது அரிதே. அவர்கள் கார், ரயில் விமானம், சாலை, நதிப் பாலங்கள் இல்லாத காலத்தில் காடுகள்  வழியே போய் வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கபிலர், பரணர் முதலிய பிராமணப் புலவர்கள் கங்கை நதி குறித்தும் இமயம் குறித்தும் சர்வ சாதாரணமாகப் பாடுகின்றனர். ஒருவேளை இமயத்திப் புலி, வில், மீன் பொறித்த மூவேந்தர்களுடன் போயிருந்தாலும் காளிதாசனின் சொற்றொடர்கள் இல்லாது வேறு விஷயங்களைக் கூறியிருப்பர்.

 

காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே.

 

ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் ரகுவின் திக் விஜயத்தை வருணிக்கையிலும் ஒவ்வோரு நாடு பற்றியும் முக்கியமான வியப்பூட்டும் குறிப்புகளைக் கொடுக்கிறார்.

இமயமலையை “தேவதாத்மா இமாலய:” என்று குமார சம்பவத்தில் அவர் கூறியதை சங்க இலக்கியத்தில் அப்படியே காண்கிறோம். பொற்கோட்டு இமயம் என்ற காஞ்சன ஸ்ருங்கத்தையும் இப்போதைய பெயர் கஞ்சன் ஜங்கா) தமிழில் காண்கிறோம். நாகரத்தினம், ஸ்வாதி நட்சத்திர மழையில் முத்து உருவாதல், முருகனுக்கும் அணங்குக்கும் உள்ள தொடர்பு, மகளிர் முருகன் கோட்டத்துக்குச் செல்ல அஞ்சுதல் (கலம் தொடா மாக்கள்), பறவைகள் குடியேற்றம், பாண்டியனுக்கும் அகத்தியனுக்கும் உள்ள தொடர்பு, பாண்டிய மன்னரின் அஸ்வமேத யாகம் (பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதியின் அவப்ருத ஸ்நானம்), ஜாவா சுமத்ராவிலிருந்து வரும் வாசனைத் திரவியங்கள், யவனர்களின் இந்திய தொடர்பு, தீப சிகா உவமை (மதுரைக் காஞ்சி)  இப்படி 225 இடங்களில் காளிதாசனின் உவமைகளையும் சொற்றொடர்களையும் சங்கத்தமிழில் காண்கிறோம். தமிழ்ப் புலவர்கள் எழுதியதை எல்லாம் காளிதாசன் படித்துக் “காப்பி” அடித்திருந்தால் அவனை உவமை மன்னன் என்று உலகம் போற்றாது. ஆனால் பல தமிழ் கவிஞர்கள் காளிதாசனைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்பற்றினார்கள் என்றால் அதை நம்ப முடியும்.

 

கோணல் பார்வை வெள்ளைக்காரர்கள், பிராக்ருத மொழியில் எழுதப்பட்ட காமச் சுவை சொட்டும் காதா சப்த சதியை காளிதாசனுக்கு முன் வைத்து பல கதைகளைக் கட்டிவிட்டிருந்தனர். ஆனால் அந்த நூலோ தமிழ் முருகனைக் கண்டுகொள்ளவே இல்லை. வினாயகர் பற்றி ஓரிடத்தில் பேசுகிறது. காளிதாசனோ பழம்தமிழ் நூல்களோ கணபதியைப் பற்றிப் பேசவே இல்லை. ஏனெனில் இரண்டும் கணபதி வழிபாடு பெரிய அளவில் பரவும் முன்னரே எழுதப்பட்டவை. (கட்டுரையின் இரண்டாம் பகுதியில் மேலும் பால சான்றுகளைத் தருவேன்).

***************************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: