ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி

( கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை; பதில்கள்-பகவத் கீதையிலிருந்து )

கிருஷ்ணா உனக்கு ஒரு சவால். ஒரே நிமிடத்தில் பகவத் கீதையின் சாரத்தைப் போதிக்க வேண்டும். கீதையின் சாரம் என்ன?

கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை

புரிகிறது, கண்ணா, பலனில் பற்று வைத்து எதையும் எதிர்பார்த்துச் செய்யாதே என்கிறாய். யோகம் என்றால் என்ன?

ஸமத்வம் யோகம் உச்யதே (2-48): சம நிலைமையே யோகம்.வெற்றி தோல்விகளில் சமமாக இருந்து கொண்டு பணிகளைச் செய்.

கண்ணா, ஆத்மா எப்படிப்பட்டது?

ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:

(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது.

புரிகிறது. கிட்டத்தட்ட நான் இயற்பியலில் படித்ததுதான் Energy can neither be creataed nor destroyed. சுவாமி விவேகானந்தர் கீதையின் முக்கிய செய்தி என்று எதோ சொல்கிறாரே, அது என்ன?

க்லைப்யம் மாஸ்ம கம: ந ஏதத் த்வயீ உபபத்யதே(2-3) : பேடித்தனத்தை அடையாதே.இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது

நல்ல புத்திமதி. நீ எவ்வப்போது அவதாரம் எடுக்கிறாய்?

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி (4-7): எவ்வப்போது தர்மத்துக்குக் குறைவும், அதர்மத்துக்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்போது நான் வருவேன்.

தேவை தானப்பா, வந்து என்ன செய்வாய்?

பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (4-8) : சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.

கண்ணா, ரொம்ப கஷ்டம்பா, சொல்லிட்டேன். ஒன்றா, இரண்டா. நீ நிறைய பேரை அழிக்க வேண்டியிருக்கும்பா. மனிதன் கடவுள் ஆக முடியுமா? எங்கள் வள்ளுவர் சொல்றாரு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று.

ஆசை, பயம் கோபம் இல்லாதவர்கள், என்னைச் சரண் அடைந்தவர்கள் என் தன்மையை அடைந்திருக்கிறார்கள்(4-10).

உண்மைதனப்பா, காஞ்சி மகா சுவாமிகள், ரமணர், ராமகிருஷ்ணர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போல பலரைப் பற்றி படித்திருக்கேன். “வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” என்று தொல்காப்பியர் சொன்னதும் உன்னைப் பார்த்துதானோ?

யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத் ததேவ இதர ஜன: (3-21): பெரியவன் ஒருவன் எதைச் செய்கிறானோ அதையே ஜனங்களும் பின்பற்றுவர்.

யார் அறிவாளி?
ஆசையும் அதற்குக் காரணமான சங்கல்பமும் இல்லாமல் வினைகளை ஞானத்தீயில் யார் ஒருவன் பொசுக்குகிறானோ அவனே பண்டிதன்(4-19)

யார் யோகி?

கருமம் செய்யும் நிலையில் கரமத்தை காணாதவனே யோகி.(4-18)

சந்தேகப் பேர்வழிகளுக்கு உன் அறிவுரை?

சம்யாத்மா விநஸ்யதி(4-40) : ஞானம் இல்லாதவன் சிரத்தை இல்லாதவன் சந்தேகம் உடையவன் அழிகிறான் அவர்களுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இல்லை.

ஞானிகள் யார்?

பண்டிதா: சம தர்சின (5-18): பிராமணன்,பசு, யானை, நாய், புலையன் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவனே ஞானி

நல்லது செய்பவர்களுக்கு நீ என்ன உத்தரவாதம் தருவாய்?

ந ஹி கல்யாண க்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40) : நல்லதைச் செய்பவன் எவனும் நிச்சயமாக தீய நிலையை அடையவே மாட்டான்.

ந மே பக்த ப்ரணச்யதி (9-31): என் பக்தன் அழியவே மாட்டான்.

இது போதுமப்பா, 100 சதவிகித கியாரன்டி. உன்னை எப்படி பூஜிப்பது?

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (9-26): எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ, பூவோ, பழமோ, தீர்த்தமோ தூய்மையுடன் கொடுக்கிறானோ அதை நான் புசிக்கிறேன்.

யாருக்கு அமைதி இல்லை?

ஸ சாந்தி மாப்னோதி ந காம காமி (2-70) : ஆsaiயுள்ளவனுக்கு அமைதி இல்லை.

திருடன் யார்?

வேள்வி செய்தால் தேவர்கள் உங்களுக்கு இன்பம் தரும் பொருட்களைத் தருவார்கள். அவர்கள் கொடுத்ததை அவர்களுக்குக் கொடுக்காமல் உண்பவன் திருடனேயன்றோ?(10-12) தமக்காகவே சமைப்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள் (12-4).

கிருஷ்ணா, இது கொஞ்சம் கொஞ்சம் கடு மொழி, சுடு மொழி அப்பா. எல்லோருக்கும் நீ விடுக்கும் அறைகூவல்?

உத்திஷ்ட, யசோ லபஸ்வ (11-33): எழுந்திரு, புகழ் அடை.

யார் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்?

உத்தரேத் ஆத்மநாத்மானம்: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்(6-5).

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று எங்கள் தாயுமானவர் கூறுகிறார். நீயும் எதோ சொன்னாயாமே?

சர்வ பூத ஹிதே ரதா(12-4, 11-55): தே மாம் ஏவ ப்ராப்னுவந்தி: எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள் என்னையே வந்து அடைகிறார்கள்.

சாக்ரடீஸ் உன்னையே நீ அறிவாய் என்று சொன்னது உன்னைப் பார்த்துதானா?

ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய்

சரியப்பா, எவ்வளவோ தப்புச் செய்துவிட்டோம். எங்களுக்கு பாவ மன்னிப்பு தருவாயா?

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (18-66): எல்லா தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் அடை. நான் உன்னை எல்லா பாபங்களிலும் இருந்தும் விடுவிக்கிறேன்.

அப்பா, கண்ணா. இது ஒன்றே போதும் அப்பா. உன்னையே சரண் அடைந்தேன். என்னையும் உலகிலுள்ள அனைவரையும் காப்பற்றப்பா.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: