மஹா சிவராத்ரி மகிமை

 

மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் 13 அல்லது 14 ஆம் இரவில் சிவராத்ரி அனுஷ்டிக்கப்படுகிறது. சிலர் இதை பங்குனி மாதம் என்றும் கணக்கிடுவர்.

விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி எப்படி முக்கியமோ அப்படி சிவ பக்தர்களுக்கு சிவராத்திரி மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி கிடந்து உபவாசம் அனுசரித்து மறுநாள்தான் சாப்பிடுவர். உலகு எங்கிலும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுதும் பூஜை பாராயணம், அபிஷேகம் ஆகியன நடைபெறும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் அன்று சிவனைத் தரிசிக்க லட்சக் கணக்கான மக்கள் கூடுவர்.

பசுபதி நாதர் கோவில் கொண்டுள்ள நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இது பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உண்மையில் சிவராத்ரி நேபாள நாட்டின் தேசியத் திருவிழாவாகும். அன்று சிவனை அந்த நாட்டின் ராஜாவாக கருதி ராஜ மரியாதைகள் செய்வர். காசி எனப்படும் வாரணாசியிலோ மக்கள் கூடம் அலை மோதும்.

சிவராத்திரி தோன்றிய கதை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. ஒருவன் அறிந்தோ அறியாமலோ சிவலிங்கத்துக்குப் பூஜை செய்தாலும் அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதே அந்த செய்தி. சிவ ராத்திரி கதை மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது கூறப்படுகிறது.

சித்ரபானு என்ற மன்னன் உபவாசம் இருந்தபோது அஷ்டவக்ரர் அங்கே வருகிறார். மன்னன் உபவாசம் இருப்பதன் காரணத்தை வினவியபோது அம் மன்னன் தனக்கு பூர்வ ஜன்மத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாகக் கூறுகிறான். முன் ஜன்மத்தில் தான் ஒரு வேடன் என்றும் காட்டில் வேட்டையாடிய போது நேரம் ஆகிவிட்டதால் இரவுப் பொழுதை ஒரு மரத்தின் மீது கழித்ததாகவும் அதன் கீழே வந்து தங்கிய மானைக் கொன்று வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இலையாகப் பறித்து மானுக்குப் போட்டதாகவும் கூறுகிறான்.

காலையில் மானுடன் வீட்டுக்குச் சென்றபோது யாரோ ஒருவர் உணவு கேட்டு வந்ததால் அதைக் கொடுத்துவிட்டதாகவும் சிறிது காலத்துக்குப் பின் இறந்துவிட்டபோது சிவ தூதர்கள் இருவர் வந்து ராஜ உபசாரம் செய்து அழைத்துக் கொண்டு போனபோதுதான் முழு விஷயமும் தெரிய வந்ததாகவும் மன்னன் கூறுகிறான். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட மரம் சிவனுக்கு மிகவும் உகந்த வில்வ மரம் என்றும் மானுக்குப் போட்ட வில்வ இலைகள் அருகில் இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்ததால் எல்லா புண்யமும் வந்து சேர்ந்ததாகவும் மன்னன் கூறுகிறான்.

இந்தக் கதை நமக்குப் புகட்டுவது என்ன?

  1. சிவனுக்குப் பூஜை செய்கிறோம் என்று தெரியாமல் வில்வத்தைப் போட்டாலும் கூட முழு புண்ணியமும் கிட்டும்..
  2. வேடனாக இருந்து செய்த பாபங்கள் கூட மன்னிக்கப் படும்.
  3. அறியாமல் செய்த புஜையானாலும் அடுத்த ஜன்மத்தில் மன்னர் பதவி கிட்டும்

இந்தப் புனித நன்னாளில் நாம் என்ன செய்யலாம்?

பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவன் கோவில்களில் இரவில் நான்கு ஜாமங்களிலும் பூஜை அபிஷேகம் நடக்கும். அதை தரிசிக்கலாம். பூ,தேங்காய் பழம் கொண்டுபோய்க் கொடுக்கலாம்.

மறு நாள் அலுவலகம் இல்லாவிட்டால் இரவு முழுதும் விழித்திருந்து ருத்ர பாராயணம் செய்யலாம். அது முடியாதவர்கள் ஓம் திரயம்பகம் எனத் துவங்கும் ம்ருஞ்ஜய மந்திரத்தை இயன்றவரை ஜபிக்கலாம். அதுவும் முடியாதவர்கள் மஹா மந்திரமான ஒம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஜெபிக்கலாம்.

பட்டினி கிடக்க முடிந்தவர்கள் ஒரு நேரமாவது சிவனை நினைந்து உபவாசம் இருக்கலாம்.

வட இந்திய காய்கறிக் கடைகளில் (குறிப்பாக லண்டனில் வெம்பிளியில்) இலவசமாக வில்வ பத்திரம் கிடைக்கும். அதை சிவன் மீது அர்ச்சிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், நாள் முழுதும் “சிவனே” என்று கிடந்தால் போதும். 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் நம சிவாய.

*****************************

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: