சுந்தரருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதன் கற்பனை; பதில்கள்: சுந்தரர் தேவாரத்திலிருந்து. இது போல கம்பன் முதல் கண்ணதாசன் வரை மேலும் 25 பேட்டிகள் உள்ளன. படித்து மகிழ்க)

வாழி திருநாவலூர் வன் தொண்டரே ! இறைவனே உமக்கு அடி எடுத்துக் கொடுக்க, உம் வாயிலிருந்து மலர்ந்த, பொன்னான பாடல் என்னவோ?

பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா

எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்

அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ என்று அவ்வையாரும் முடிசார்ந்த மன்னரும் பின்னர் பிடிசாம்பராய்ப் போவர் என்று பட்டினத்தாரும் கூறுகின்றனர், உங்கள் கருத்து……?

வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக் கடல் பசி நோய் செய்தபறிதான்

தாழாது அறம் செய்யின் தடங் கண்ணான் மலரோனும்

கீழ்மேலுற நின்றான் திருக் கேதார மென்னீரே.

ஆதி சைவர் குலத்து உதித்தீர். மன்னர் நரசிங்க முனையரையரால் வளர்க்கப் பெற்றீர். ருத்ர குல கணிகை பரவை, வேளாளர் குலப் பெண் சங்கிலி ஆகியோரையும் மணந்தீர். 1300 ஆண்டுக்கு முன்னரே புரட்சித் திருமணம் செய்தீர். நம்பி ஆரூரரே, சிவனைப் பாடவா இவ்வளவும்……?

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

 

சிறுவரும் புரிந்து கொள்ளும் அருமையான பாடல். ராமா நீ நாமமு ஏமி ருசிரா என்று பத்ராசலம் ராமதாஸ் பாடினார். சிவ நாமத்தின் சுவை பற்றி…

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய்

நல்ல சுவையான பாடல். சேக்கிழார் பெருமான் தமிழர்களுக்கு வழங்கிய மாபெரும் கொடை பெரிய புராணம். அதைப் பாடுவதற்கு அச்சாரம் போட்டதே உம்முடைய திருத் தொண்டர் தொகையாமே?

தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திரு நீலக் கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளயான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப் பொருளுக்கு அடியேன்

விரி பொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்

அல்லி மென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

நல்ல துவக்கம். இசையும் தமிழும் இணைந்ததோ. நீரே நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்று புகழக் காரணம்?

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்குடனாகி

மாழை ஒண்கண் பாவையைத் தந்து ஆண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆருர் இறைவனையே

குற்றம் செய்தவர்களை எல்லாம் மன்னிப்பவன் என்பதால்தான் சிவ பெருமானைத் தஞ்சம் அடைந்தீரோ?

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்

நாவினுகரையன் நாளைப்போவானும்

கற்ற சூதன் நற் சாக்கியன் சிலந்தி

கண்ணப்பன் கணம் புல்லன் என்றிவர்கள்

குற்றம் செயினும் குணம் எனக் கருதும்

கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன்

பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்

பொய்கை சூழ் திருப்புன்கூர் உளானே

உம்மைச் சிவன் படாத பாடு படுத்திவிட்டாரே. உம்மை அடிமை என்று வழக்காடு மன்றத்தில் ஆவணம் எல்லாம் காட்டி ஆட்கொண்டாரே…..

கற்பகத்தினைக் கனக மால் வரையைக்

காமகோபனைக் கண்ணுதலானைச்

சொற்பதப் பொருள் இருள் அறுத்தருளும்

தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்

அற்புதப் பழ ஆவணம் காட்டி

அடியனா வென்னை ஆளது கொண்ட

நற்பதத்தனை நள்ளாறனை அமுதை

நாயினேன் மறந்தென் நினைக்கேனே

காஞ்சியில் இழந்த பார்வையைப் பெற்றபின் பாடிய பதிகம்:

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும்

சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தையுளானை

ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாரே

“அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு” என்று இறைவனே உம்மைப் பணித்தார். உமக்கும் பசியோடு வந்த பக்தர்களுக்கும் சோறிட்டு சிவன் மறைந்தவுடன் பாடியது—-

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறர் எல்லாம்

முத்தினை மணி தன்னை மாணிக்கம் முளைதெழுந்த

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

 

முதலை வாயில் போய் மாண்ட சிறுவனையும் மீட்டுக் கொடுத்தீர்கள். சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த பொருளை உம்மிடமிருந்து வேடர் பறித்தவுடன் மீட்கப் பாடிய பாடல்——

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்

…..

எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரான் நீரே

தங்கக் கட்டிகளை ஆற்றில் போட்டுவிட்டு குளத்தில் தேடிய பெருந்தகையே.திருமுதுகுன்றில் ஆற்றில் இட்ட பொன்னைத் திருவாருர்க் குளத்தில் தேடி அதை அள்ளிக் கொண்டு போனபோது பாடிய பதிகம்

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முது குன்றமர்ந்தீர்

மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே

என்செய்த வாறடிகேள் அடியேன் இட்டளங்கெடவே..

சுந்தரத் தமிழில் பாடிய சுந்தரரே நன்றி.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: