காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி

உங்கள் பாடல்களில் பக்திச் சுவையும் தமிழ் சுவையும் நனி சொட்டச் சொட்ட இருக்கிறது. தமிழ் பெண்கள் அப்போது மொழிப் பயிற்சி பெற்றார்களோ?

பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்:- நிறந் திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே !

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?

நீங்கள் தினமும் இறைவனிடம் வேண்டுவது?

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க என்றார்

ஒரே பாட்டில் சங்கர நாராயணனையும் அர்த்த நாரீஸ்வரரையும் பாடி “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்று காட்டிவிட்டீர்களே!

ஒருபால் உலகளந்த மால் அவனாம்; மற்றை

ஒருபால் உமையவளாம் என்றால்- இருபாலும்

நின்னுருவமாக நிறந்தெரிய மாட்டோமால்

நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

சுவையான மாம்பழத்தைப் படைக்கப் போய், கணவரால் பக்திப் பெண்மணி என்று பயந்து கைவிடப்பட்டு, பேய் உருவை விரும்பிப் பெற்று, சிவபிரானால் “ வரும் இவர் நம்மைப் பேணும் அம்மை, காண்” என்று பார்வதிக்கு அறிமுகப்படுத்தப் பட்டீரே. உமது திரு ஆலங்காட்டில் காலால் நடக்ககூட சம்பந்தர் தயங்கினாரே உமது அன்பு பயன் கருதாப் பேரன்பு அல்லவோ!

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்

படரும் நெறி பணியாரேனும்—சுடர் உருவில்

என்பறாக் கோலத் தெரியாடுமமெம்மனார்க்கு

அன்பறாது என் நெஞ்சு அவர்க்கு.

கீதையில் கண்ணன் “பிரம்மார்ப்பணம் பிரம்மஹவிர் ப்ரம்மஹ்னௌ ப்ரம்மனாஹுதம்” என்ற ஸ்லோகத்தில் அர்ப்பணம் பிரம்மம், அர்ப்பிக்கப்படும் பொருளும் பிரம்மம் என்பது போல நீங்களும்…….

அறிவானும் தானே; அறிவிப்பான் தானே,

அறிவாய் அறிகிறான் தானே;- அறிகின்ற

மெய்ப்பொருளும் தானே; விரிசுடர் பார் ஆகாயம்

அப்பொருளும் தானே அவன்.

உங்களுக்கு இசைப் பயிற்சியும் உண்டோ? 7 பண்களும் 11 இசைக் கருவிகளும்

உங்கள் சொற்களில் நடம் புரிகின்றனவே!

துத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண்  கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன் கை மென் தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினோடாடும் எங்கள்

அப்பன் இடம் திருவாலங்காடே

பிறவிப் பெருங் கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடி சேராதார் என்று வள்ளுவன் கூறுகிறான். நீங்கள் அதை எதிரொலிப்பது போல உள்ளதே!

வினைக் கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்

கனைக் கடலை நீந்தினோம் காண்.

நீங்கள் ஆண்டாளுக்கு முந்தியவர். எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் என்று அவர் பாடியது உம்மைப் பார்த்துத் தானோ!

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்; என்றும்

அவர்க்கே நாம் அன்பாவது அல்லாமல்- பவர்ச் சடை மேல்

பாதுகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்கு

ஆகாப்போம்; எஞ்ஞான்றும் ஆள்.

வணிகர் குலத்தில் புனிதவதியாக அவதரித்து, பேய் என்று உங்களையே அழைத்துக் கொண்டீர்கள்.ஆனால் இறைவனோ உம்மை அன்பாக அம்மையே என்று அழைக்க அழியாப் புகழ் பெற்றுவிட்டீர்கள். சொற் சிலம்பம் ஆடும் பக்தர்களை வேத வாத ரதா: என்று கண்ணன் பரிகசிக்கிறாரே?

நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக !

நீலமணிமிடற்றோன் நீர்மையே-மேலுவந்தது;

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வாருக்கும்

அக்கோலத்து அவ்வுருவே ஆம்.

நீங்களும் அதையே சொல்கிறீர்கள். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை முதலிய பாடல்கள் பாடினீர்கள். இதைப் படிப்பதால் என்ன பயன்?

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்

கரைவினால் காரைக்கால் பேய் சொல்-பரவுவார்

ஆராத அன்பினோடு அண்ணலைச் சென்றேத்துவார்

பேராத காதல் பிறந்து.

தமிழர்களுக்கு என்று ஒரு கின்னஸ் சாதனை நூல் இருந்தால் 1.மண்டல முறையில் அந்தாதி பாடியது, 2.பதிகம் பாடியது, 3.கட்டளைக் கலித் துறையில் பாடல் பாடியது, 4.கயிலை மலைக்கு தலையால் நடந்து சென்றது,5. பதிகத்தில் கடைக்காப்பு வைப்பது, 6.பதிகத்தில் இயற்றியவரின் பெயரைக் கூறி முத்திரை வைப்பது 7.முதலில் இரட்டை மணி மாலை பாடியது 8. பேய் பற்றி விரிவாக வருணித்தது 9.கம்போடியாவில் சிலை உடைய தமிழ் பெண் ஆகிய ஒன்பது தலைப்புகளில் உங்கள் பெயரைப் பதிவு செய்துவிடுவார்கள்! நன்றி அம்மையாரே!

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: