சங்க இலக்கிய நூல்களில் ஒன்று கலித்தொகை..எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலியில் நிறைய புராண இதிஹாசச் செய்திகளைக் காண முடிகிறது. சங்க நூல்களில் இதுவும் பரிபாடலும் என்ன வகையைச் சேர்ந்தவை என்பதை தலைப்பே காட்டிவிட்டது. அதாவது பரிபாடல், கலி என்பதெல்லாம் பாட்டின் வகைகள்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரி பாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர் –(அகத்.53)
என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
கலித்தொகையில் ஐந்து திணைகளுக்கு ஐந்து பகுதிகள் உள்ளன. இவைகளை 5 புலவர்கள் பாடியதாகக் கருதுவர். ஆனால் சி.வை தாமோதரம் பிள்ளை, பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை ஆகியோர் நல்லந்துவனார் என்ற ஒரே புலவர்தான் 5 பகுதிகளையும் இயற்றினர் என்பர்.
ஐந்து புலவர்கள் பாடியது உண்மை என்று கொண்டால் பாலைக் கலியைப் பாடியவர் பாலை பாடிய பெருங் கடுங்கோ ஆவார். அவர் ஒரு அதிசியச் செய்தியைக் கூறுகிறார். பொய் சொல்பவன் நிற்கும் மரம் வாடிவிடுமாம்! தற்காலத்தில் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க ஒரு கருவியே (Lie Detector) உள்ளது. ஒருவன் பொய் சொல்லும்போது அவனது நாடி நரம்புகளில் ஏற்படும் மற்றங்களைக் கணக்கிட்டு பொய் சொல்கிறானா உண்மை சொல்கிறானா என்று கண்டுபிடித்துவிடும். பாலை கலி அதிசயமும் ஏறத்தாழ இந்த வகையில்தான் வருகிறது. வள்ளுவர் கூட மோப்பக் குழையும் அனிச்சம் என்று கூறுவார். முகர்ந்து பார்த்தாலேயே வடிவிடுமாம் அனிச்சம் பூ.
பாலை பாடிய பெருங் கடுங்கோ கூறுகிறார்:
விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும்,
பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி,
எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ? (பாலைக் கலி 33)
பொருள்: காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! பொய் சாட்சி சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை !
ஒருவனுடைய உடலில் ,எண்ணத்தில் ஏற்படும் மாற்றங்கள் தாவரங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தமிழன் கண்டு பிடித்த விஞ்ஞான உண்மை. மாத விலக்குள்ள பெண்கள் துளசி முதலிய புனிதச் செடிகளைத் தொட மாட்டார்கள், பட்டுப் போய் விடும் என்பதால். மாத விலக்கு காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை நான் விளக்கத் தேவை இல்லை.
சிலர் செடிகளை வளர்த்தால் அவைகள் செழித்துப் பூக்கும். அவர்களுக்கு பச்சை விரல்கள் (Green Fingers) இருப்பதாக ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இதுவும் நம் எண்ணத்தின் சக்தியாக இருக்கலாம். ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
ஆதி சங்கரர் வாழ்க்கையிலும் இப்படி ஒரு செய்தி உண்டு. தெற்கில் எல்லோரையும் வாதத்தில் வென்று வடக்கே சென்றவருக்கு மண்டன மிஸ்ரர் என்ற மாமேதையை வெல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் இருவரும் புத்திசாலித்தனதில் ஈடு இணையற்றவர்கள். வாதத்தில் யார் வென்றார்கள் என்று சொல்ல நடுவர் வேண்டுமே !
மண்டன மிஸ்ரருக்கு இணையாகக் கல்வி கேள்விகளில் சிறந்தவர் அவருடைய மனைவி சரசவாணி. படிப்பில் சரஸ்வதி. வேத கால மாமேதைப் பெண்களான மைத்ரேயி, கார்க்கி போன்ற அறிஞர். சத்தியத்தில் நம்பிக்கை கொண்ட சங்கரர் அந்தப் பெண்மணியே நடுவராக இருக்கலாமே என்றார். என்ன இருந்தாலும் மண்டன மிஸ்ரர் வெற்றி பெற்றால், நாளைக்கு யாராவது மனைவி நடுவராக இருந்ததால் அவர் வெற்றி பெற்றார் என்று சொல்லிவிடலாமே.
சரசவாணி அதி மேதாவி அல்லவோ! உள்ளவியல், உயிரியல்( Psychology, Bilology) அனைத்து விஞ்ஞான பாடங்களையும் கற்றவர் போலும். அருமையான ஒரு “ஐடியா”(idea) சொன்னார்.இருவரும் மாலை போட்டுக் கொள்ளுங்கள். யார் மாலை முதலில் வாடுகிறதோ அவர்தான் தோற்றவர். இதில்தான் அறிவியல் வருகிறது. நிறைகுடம் தழும்பாது ! குறைகூடம் கூத்தாடும் ! அமைதியாக சரக்கோடு பேசுபவர்கள் ஆ, ஊ என்று கூச்சலிட மாட்டார்கள், பதட்டம் அடைய மாட்டார்கள். உடலில் வெப்பம் ஏறாது. நாடி நரம்புகள் முறுக்கேறாது. டென்சன் (Tension) இல்லாமல் கூல்(cool) ஆக இருப்பார்கள். சரக்கில்லாத ஆசாமிகள் குரலை உயர்த்துவார்கள். பதட்டத்தில் உடம்பில் உஷ்ணம் தலைக்கேறும். உடலில் போட்ட மாலையும் வாடி விடும்!
21 நாட்களுக்கு வாதப் ப்ரதிவாதங்கள் நடந்தன. மண்டன மிஸ்ரர் மாலை முதலில் வாடியது. ஆண்களுடன் நேருக்கு நேராக உட்காரக்கூடாது என்பதால் சரசவாணி திரைக்குப் பின்னால் அமர்ந்து வாதத்தைக் கேட்டாள் என்பது சங்கர விஜயம் சொல்லும் கதை.
இதைப் போலத்தான் பாலை பாடிய பெருங் கடுங் கோவும் மரம் வாடும் என்றார். அங்கே வாடியது மரம். இங்கே வாடியது மாலை.
( மண்டன மிஸ்ரர் கிராமத்தில் ஆதி சங்கரர் கேட்ட கேள்விக்கு சம்ஸ்கிருத ஸ்லோக வடிவில் பெண்கள் பதில் சொல்லியது, சரசவாணி செக்ஸ் (Sex) தொடர்பான கேள்விகளைக் கேட்டு ஆதி சங்கரரைத் திணறடித்தது, சங்கரர் சூப்பர்மேன் (Super Man) போல திவசம் நடந்த வீட்டுக்குள் மந்திர சக்தியால் மரத்தை வளைத்துக் குதித்தது, மண்டன மிஸ்ரர் வீட்டுக் கிளிகள் வேதம் பற்றி உரையாடியது ஆகியவற்றை தனிக் கட்டுரையில் தருகிறேன். நியூ சை ன் டி ஸ்ட் (New Scientist, March issue) மார்ச் பத்திரிக்கையில் வந்த பேசும் அதிசியக் கிளிகள் (Animal Einsteins) பற்றிய செய்திகளுடன் எழுதுவேன்.
You must be logged in to post a comment.