பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்

நமது புராணங்களோ இதிகாசங்களோ வட மொழி, தென் மொழி நூல்களோ பொய் சொல்லவில்லை என்பதற்கு அதில் எழுதப் பட்ட சில உண்மைச் சம்பவங்களே சான்று. பல நிகழ்ச்சிகளை குறிப்பாக, மரணம் பற்றிய விஷயங்களை அப்படியே எழுதி வைத்துள்ளனர்.

 

கோவலன் கொலை செய்யப்பட்டு இறந்தான். அது தவறு என்று தெரிந்த உடனே பாண்டிய மன்னனும் அவனுடைய மனைவியும் அங்கேயே இறந்தனர். ஒரு வேளை தவறே நடக்காத ஆட்சியில் தவறு நடந்ததை நிரூபித்தவுடன் அவர்கள் இருவருக்கும் மாரடைப்பு நேரிட்டிருக்கலாம் (Heart Attack). கண்ணகி புஷ்பக விமானத்தில் ஏறி மேலுலகம் போகிறாள்.

 

பாண்டிய மன்னன் மனைவி பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு தீப் பாய்ந்து (சதி என்னும் முறைப்படி,புறம். 247) இறக்கிறாள். இளம் பெரு வழுதி என்ற மன்னன் கடலில் மாய்ந்து (புறம்.182) உயிர் இழந்தார்.

பல மன்னர்களும் புலவர்களும் வடக்கிருந்து (Sitting facing North and Fasting ) உயிர் இழந்தனர் ( சேரமான் பெருஞ் சேரலாதன், கோப்பெருஞ் சோழன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, கபிலர், பிசிராந்தையார் ).

 

யார் யார் எங்கு எங்கு துஞ்சினர் (இறந்தனர்) என்றும் சங்க இலக்கிய கொளுவில் உள்ளது. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி (புறம் 51, 52); சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்; வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதி (புறம். 58), சேரமான் கோடம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பெருங் கோப்பெண்டு (புறம். 245); சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் புறம் 373, பெருந் திருமாவளவன் 58,60; இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங் கிள்ளி சேட்சென்னி 61). புலியால அடிக்கப்பட்டு (Tiger Attack) இறந்த மன்னன் பற்றி திருவிளையாடல் புராணம் பேசுகிறது.

மாணிக்கவாசகர், ஞான சம்பந்தர், ஆண்டாள், திருப்பணாழ்வார், நந்தனார் வள்ளலார், கோபால் நாயக் ஆகியோர் ஜோதியில் (Spontaneous Human Combustion) கலந்து ஐக்கியமானார்கள். (“The Mysterious disappearance of Hindu Saints”- கட்டுரையில் மேல் விவரம் காண்க).

 

அண்மைக் காலத்தில் ஸ்ரீ சத்திய சாய் பாபா திடிரென்று இறந்தது  பலருக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது. இதற்கு முன் பல சாது சந்யாசிகள் புற்று நோயால் (Cancer) இறந்தனர். ஆனால் ஞானிகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கீதையில் கண்ணன் சொன்னது போலவே (கீதை 2-22; குறள் 338, 339) நமது உடம்பெல்லாம் கிழித்த சட்டைகளுக்கு சமானம். நம் உடம்பு இறந்தாலும் ஆத்மா அழிவதில்லை. ஆகையால் இந்துக்கள் இறப்பைப் பொருட்படுத்துவது இல்லை. மரணம் என்பது ஆத்மா சட்டையை மாற்றுவது போல. வள்ளுவன் வாக்கில் கூட்டை விட்டுப் போன பறவை:

 

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு (338)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)

 

பாரதி பாடல்

நொந்த புண்ணைக் குத்துவதில் பயனொன்றில்லை

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் !

அந்தணனாம் சங்கராசர்யன் மாண்டான்

அதற்கடுத்த ராமனுஜனும் போனான்.

சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர். (பாரதி அறுபத்தாறு).

 

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என்.ராமசந்திரனின் ஆங்கில மொழிபெயர்ப்பு

——————-it cannot do good

To pierce a painful sore; the great Buddha

Died of illness; Sankara the Brahmin-sage

Also died; so too Ramnuja great.

The Christ died crucified; Kannan

Was by an arrow killed; Rama by many praised,

Had a watery grave; in this world “ I ”

Will thrive deathless, for sure………..

 

ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறைந்தார் என்றும் சர்வாரோகண பீடம் ஏறி மறைந்தார் என்றும் கூறுவர். புத்தருக்கு ஒருவர் மாமிச உணவைக் கொடுத்தபோது அது தொண்டையில் சிக்கி மரணம் ஏற்பட்டதாகவும் மாமிசமா? என்று அதிர்ச்சியுற்று இறந்தார் என்றும் கூறுவர். இந்தப் பாடலைப் பாடிய பாரதியும் யானையால் தாக்கப் பட்டு கொஞ்ச காலத்துக்குப் பின்னர் வயிற்றுக்கடுப்பு நோயால் இறந்தார்.

2000 ஆண்டுக்கு முந்திய பஞ்சதந்திரக் கதையிலிருந்து:

A lion took the life of Panini

Grammar’s most famous name;

A tusker madly crushed sage Jaimini

Of metaphysic fame;

And Pingal, metric’s boast, was slaughtered by

A sea side crocodile;

What sense for scholarly attainments high

Have beasts besotted vile?

(Panchatantra ,translated by Arthur W Ryder)

 

இலக்கணப் புகழ் பாணிணியோ

இரையானான் சிங்கத்துக்கு;

மீமாம்சக ஜைமினியோ யானை

காலில் மிதியுண்டழிந்து போனான்;

யாப்பு புகழ் பிங்களனோ கடலோர

முதலையால் கிழிக்கப்பட்டான்;

கழுதைக்குத் தெரியுமோ

கற்பூர வாசனைதான்? ( விஷ்ணு சர்மனின் பஞ்ச தந்திரக் கதைகள்)

 

இவர்கள் எல்லோரும் இறந்தாலும் பூத உடல் மறைந்த பின்னரும் புகழ் உடம்போடு இன்றும் நம்மிடையே வாழ்ந்து நம்மை எல்லோரையும் நற்பணியில் ஊக்குவிக்கின்றனர்.இவர்கள் அனைவரும் சிரஞ்ஜீவிகள்.

******************************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: