மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 3

Picture is taken from another website.Thanks.

This article is the third part on Rebirth written by S NAGARAJAN

புனர்ஜென்ம உண்மைகள்! – 3

(அறிவியல், ஆன்மீக நோக்கில மறுபிறப்பு இரகசியங்கள்!)

 

தேவியின் பாதஸ்மரணை தரும் பலன்!

பதினெட்டு புராணங்களும் அத்தோடு பதினெட்டு உப புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் மற்றும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை.

எடுத்துக்காட்டாக தேவி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் பதினெட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் பிரக்த்ரதன் கதையைச் சொல்லலாம்.

பொதியமலையில் ஒர் சக்கிரவாக பக்ஷ¢ இருந்தது. அது பறந்தவாறே சென்று முக்தியை நல்கும் காசியை அடைந்தது.அங்கு அன்னபூரணி ஸ்தானத்தை விட்டு நீங்காது தினமும் பிரதக்ஷ¢ணமாகப் பறந்து கொண்டே இருந்தது.இந்தப் புண்ணியத்தால் இறப்பிற்குப் பின்னர் சுவர்க்கத்தை அடைந்து தேவரூபத்தோடு இரண்டு கற்பகாலம் வரை பல போகங்களை அனுபவித்துப் பின்னர் பிரகத்ரதன் என்ற பெயருடன் ஒரு க்ஷத்திரிய குலத்தில் பிறந்தது.அரசனாக விளங்கிய பிரகத்ரதன் சத்யவாதி. யாகங்களைச் செய்பவன்.ஜிதேந்திரியன். மூன்று காலங்களையும் அறியும் சக்தி கொண்டவன்.முன் ஜென்மம் தெரிந்தவன்.அவன் புகழ் எங்கும் பரவியது.

அவன் பூர்வ ஜென்ம ஞாபகத்தைக் கொண்டிருப்பவன் என்பதைக் கேள்விப்பட்டு முனிவர்கள் உட்பட்ட பலரும் அவனிடம் வந்தனர். அவர்கள் அவனை நோக்க,¢ ‘இப்படி திரிகால ஞானமும் பூர்வ ஜென்ம உணர்ச்சியும் உனக்கு எந்தப் புண்ணியத்தால்  வந்தது’ என்று ஆவலுடன் கேட்டனர்.

அவனோ,”பூர்வ ஜென்மத்தில் நான் சக்கரவாக பக்ஷ¢யாக இருந்தேன்.புண்ணியவசத்தால் ஞானமில்லாமலேயே அன்னபூரணியை தினம் வலம் வந்தேன்.அதனால் சுவர்க்கமடைந்து இரண்டு கற்பகாலம் சகல போகமும் அனுபவித்துப் பின் பூமியில் இந்த சரீரம் அடையப் பெற்று திரிகாலஞானமும் பூர்வஜென்ம உணர்ச்சியும் பெற்றவனாக இருக்கிறேன். ஜகதம்பிகையின் பாதஸ்மரணையின் பலத்தை யார் அறிவார்கள்! இதை நினைத்த மாத்திரத்தில் என் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்குகிறது” என்று  கூறித் தேவியைத் தொழுவதால் ஏற்படும் பலன்களை விளக்கினான்!

அனுமனே ருத்ரன்

ஆனந்த ராமாயணம் தரும் ஒரு அற்புதச் செய்தி அனும, ராம பக்தர்களையும் சிவ பக்தர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும்! ஏகாதச (பதினோரு) ருத்திரர்களே குரங்குகளாக ஜனனம் எடுத்த செய்தி தான் அது! அசுரர்களின் அழிவுக்காக விஷ்ணுவுக்கு சகாயம் செய்ய வீரபத்திரன் சுக்கிரனாகவும்,சம்பு நலனாகவும்,கிரீஸன் நீலனாகவும்,மஹாயஸன் சுஷேணனாகவும்,அஜைகபாதன் ஜாம்பவானாகவும்,அஹிர்புத்னன் அங்கதனாகவும், பினாகதாரி  ததிவக்ரனாகவும்,யுதாஜித்து தாரகனாகவும்,ஸ்தானு தாலகனாகவும்,பர்க்கன் மைந்தனாகவும்,ருத்திரன் அனுமானாகவும் பிறந்தார்கள். ஆக அனுமனை வணங்கினால் சிவனுக்கு பிரீதி; விஷ்ணுவுக்கும் பிரீதி, அனுமனுக்கும் கூட பிரீதி!

 

காசியப ரிஷியே தசரதன்!

அத்யாத்ம ராமாயணம் பாலகாண்டம் இரண்டாவது சர்க்கத்தில் (23-26 சுலோகங்களில்) பிரம்மாவிடம் விஷ்ணு கூறுவதாக  தசரதனின் முன் ஜென்மத்தை எடுத்துரைக்கிறது!

விஷ்ணு பிரம்மாவிடம், “பூர்வம் காசியப ரிஷி நம்மைப் புத்திரனாகப் பெற வேண்டித் தவம் செய்ய, நாமும் அவ்வாறே அவருக்குப் புதல்வனாகும் வரத்தைத் தந்தோம்.இப்போது அவரோ பூலோகத்தில் தசரதனாகப் பிறந்திருக்கிறார்.அவருக்கு மகனாக கௌஸல்யா தேவி கர்ப்பத்தில் நாம் அவதரிப்போம்” என்று கூறுகிறார்!

பிரம்ம புராணம் சுபத்ரை மற்றும் கௌசிகனின் முற்பிறவியை எடுத்துக் கூறுகிறது என்று ஆரம்பித்துப் பட்டியலிட ஆரம்பித்தால் புராண முற்பிறவி சம்பவங்கள் ஒரு பெரிய தொகுப்பு நூல் ஆகி ஏராளமான மர்மங்களை அவிழ்க்கும் முற்பிறவிக் களஞ்சியம் ஆகி விடும்! கர்மங்களின் விசித்திரச் சங்கிலித் தொடர்பு பற்றித் தெரிந்து கொண்டு பிரமிப்பின் உச்சிக்குச் சென்று விடுவோம்! எத்தனை கோடி மனிதர்களுக்குத் தான் எத்தனை கர்மங்கள்! அவர்களுக்குத் தான் கர்மபலனுக்கேற்ப எத்தனை கோடானு கோடி ஜென்மங்கள்! கோடானு கோடி சூப்பர் மெகா கம்ப்யூட்டர்கள் கூட இந்தக் கணக்கைத் துல்லியமாகப் போட முடியுமா, என்ன!

 

நான்கு முகம் இல்லாத பிரம்மா!

பாரதம் வியாஸருக்குத் தரும் செல்லப் பெயர் கூட ஒரு முற்பிறவித் தொடரின் காரணமாகத் தான் என்றால் வியப்பு மேலிடுகிறது, இல்லையா!

பகவானான வியாஸர் நான்கு முகம் இல்லாத பிரம்மா, இரண்டு கரங்கள் உள்ள விஷ்ணு, நெற்றிக் கண் இல்லாத சிவன்! என்று கீழ்க்கண்ட சுலோகத்தில் போற்றப்படுகிறார்:

அசதுர்வதநோ பிரம்மா; த்விபாஹ¤ரப ரோஹரி I

அபால லோ சநச் சம்பு: பகவான் பாத நாராயண: II

நான்கு முகமில்லாத பிரம்மாவாக அவர் படைப்புத் தொழிலில் ஈடுபட்ட சம்பவத்தை மஹாபாரத அநுசாஸன பர்வத்தில் காணலாம்.

அவசரமாக ஓடும் ஒரு புழுவைப் பார்த்த வியாஸர், ‘ஏன் இப்படி அவசரமாக ஓடுகிறாய்’ என்று கேட்கிறார். ‘எதிர் வரும் பார வண்டி என் மீது ஏறி என்னை அழிக்காமல் இருக்க ஓடுகிறேன்’, என்றது புழு! ‘உயிர் போனால் போகட்டுமே உடலில் என்ன சுகம்’ என்று கேட்ட வியாஸரிடம் அது, தான் முற்பிறவியில் மனிதனாக இருந்ததாகவும் செய்த பாவத்தால் புழுவாக ஆனதாகவும் செய்த புண்ணியத்தால் வியாஸருடன் பேசும் பாக்கியம் கிடைத்ததாகவும் கூறுகிறது. ‘உனக்கு முற்பிறவி பற்றிய அறிவு எப்படி உண்டானது’ என்று வியாஸர் கேட்க, ‘கிழவியான என் தாயாரைக் காப்பாற்றினேன், ஒரு ஏழை அந்தணருக்கு பூஜை செய்தேன்,ஒரு விருந்தாளியின் பசியை அகற்றிச் சந்தோஷப் படுத்தினேன் ஆதலால் எனக்கு இந்த அபூர்வ அறிவு உண்டாயிற்று’ என்று பதில் சொன்னது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாஸர் அதற்கு முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான்,பறவை, ஏழைப் பணியாளன், வணிகன். க்ஷத்திரியன், அரசன் என பல பிறவிகளை படிப்படியாகத் தந்தார். ஒவ்வொரு பிறவியிலும் அது வியாஸரை வணங்கியதால் இப்படி ஏற்றம் பெற்றது. இறுதியில் ஒரு வேதியராகப் பிறந்து புண்ய கருமங்களைச் செய்து அந்தப் புழு முக்தி பெற்றது!

இப்படிபிரம்மாவுக்குப் போட்டியாக ஒரு படைப்புத் தொழிலைச் செய்து ஒரு புழுவை முக்தி அடையச் செய்ததால் அவர் நான்கு முகம் இல்லாத பிரம்மா என்று போற்றப்படுகிறார். ஆனால், அறத்தின் மூலம் உயர் பிறவி பெற்று முக்தி அடையலாம் என்பதே  கதை சொல்லும் உண்மை ஆகும்.

 

காந்திஜி டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதம்

இனி நவீன யுகத்தில் நம் சம காலத்தில் வாழ்ந்த காந்திஜி புனர்ஜென்மம் பற்றிக் கொண்டிருந்த கொள்கைகளைப் பார்ப்போம். மகாத்மா காந்திஜி லியோ டால்ஸ்டாயின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அதனால் அவருடன் கடிதத் தொடர்பு அவருக்கு இருந்தது. ‘ஒரு ஹிந்துவுக்குக் கடிதம்’ என்ற டால்ஸ்டாயின் கட்டுரையை அவர் பிரசுரிக்க விரும்பினார்.ஆனால் அந்தக் கட்டுரையில் ஒரு பாராவில் புனர்ஜென்மத்தை மறுத்து டால்ஸ்டாய் கருத்துத் தெரிவித்திருந்தார். 1909 அக்டோபர் முதல் தேதியிட்ட கடிதத்தில் டால்ஸ்டாய்க்கு அவர் எழுதிய கடிதத்தில் புனர்ஜென்மத்திற்கு எதிரான கருத்தைத் தெரிவிக்கும் அந்த பாராவை நீக்கி வெளியிட அனுமதி கேட்டார். புனர்ஜென்மம் என்பது லட்சக்கணக்கான இந்திய சீன மக்களால் நம்பப்படும் கொள்கை என்றும் அது “அனுபவத்தின் அடிப்படையிலானது” (With many, one might almost say, it is a matter of experience) என்றும் விளக்கிய காந்திஜி தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் சிறையில் நொந்து வாடுவோருக்கு புனர்ஜென்மக் கொள்கை ஆறுதல் அளிக்கும் ஒன்று என்று எழுதினார். காந்திஜியின் வேண்டுகோளை ஏற்ற டால்ஸ்டாய் அதை நீக்கி வெளியிடத் தன் அனுமதியைத் தந்தார். உடனே காந்திஜி அவருக்கு நன்றி தெரிவித்து 11-10-1909 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். புனர்ஜென்மக் கொள்கை சத்யாக்ரகப் போராட்டத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் கர்மா கொள்கை மூலமே தேசத்தை எழுப்பி விட முடியும் என்பதையும் நன்கு அறிந்திருந்த மகாத்மா கர்மாவிற்கு ஏற்ற பலன் என்ற  அறவழிக் கொள்கையின் அடிப்படையில் தேசத்தை புனர் நிர்மாணம் செய்தார்.

இனி காந்திஜியே 1935ம் ஆண்டு ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்த சாந்திதேவியின் (பிறப்பு 11-12-1926 மறைவு 27-12-1987) புனர்ஜென்ம சம்பவத்தைப் பார்ப்போம். புனர்ஜென்மத்தை ஆராய்ந்த விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸனும் சாந்திதேவியை அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் 1986ல் தன் ஆய்வுக்காகச் சந்தித்ததும் குறிப்பிடத் தகுந்தது.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: