மறுபிறப்பு உண்மையா? பகுதி 4

மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள்! – 4
(அறிவியல்,ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

Written By S Nagarajan

காந்திஜி , இயன் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த சாந்தி தேவி மர்மம்!

1926ம் ஆண்டு டெல்லியில் பிறந்த குழந்தையான சாந்தி தேவி தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தனது பெற்றோர் மதுராவில் இருப்பதாகவும் அங்கு செல்ல விரும்புவதாகவும் கூறியது. ஆனால் சாந்தி தேவியின் இந்தப் பேச்சை அவளது பெற்றோர் சட்டை செய்யவில்லை.ஆறு வயதான போது அவள் மதுராவிற்குச் செல்ல விரும்பி வீட்டை விட்டு ஓட முயன்றாள். அவளது ஆசிரியரிடமும் பள்ளித் தலைமையாசிரியரிடம் தான் குழந்தை பெற்றெடுத்த பத்தாம் நாளன்று இறந்ததாகவும் தனது உறவினர் அனைவரும் மதுராவில் இருப்பதாகவும் மீண்டும் மீண்டும் அவள் கூறினாள்.இதனால் வியப்படைந்த அவர்கள் உன் கணவன் பெயர் என்ன என்று கேட்டவுடன் கேதார்நாத் என்று உடனே பதிலளித்தாள்.

தலைமையாசிரியர் மதுராவில் மேற்கொண்ட விசாரணையில் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கேதார் நாத் என்பவரின் மனைவியான லக்டி தேவி குழந்தை பெற்றெடுத்த பத்தாம் நாளில் இறந்ததை அறிந்து வியப்படைந்தார். மஹாத்மா காந்தி இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் ஒரு கமிஷனை அமைத்து இதை ஆராயுமாறு பணித்தார். கமிஷன் சாந்தி தேவியை மதுராவிற்கு 1935ம் வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி அழைத்துச் சென்றது.அங்கே சாந்தி தேவி தனது முந்தைய ஜென்ம உறவினர்கள் அனைவரையும் அடையாளம் காட்டினாள்.

கேதார் நாத் தனக்கு மரணப் படுக்கையில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் சொல்லி அவற்றை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேட்டாள்! வாழ்நாள் முழுவதும் சாந்தி தேவி மணம் புரிந்து கொள்ளவில்லை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் அவரது புனர்ஜென்மம் பற்றி மீண்டும் ஆராயப்பட்டது. ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு பிரபல ஆய்வாளர் அவரைப் பேட்டி கண்டார்.

மறு ஜென்மம் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆய்வு நடத்தி வந்த பிரபல விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸன் 1986ல் அவரைப் பேட்டி கண்டு அவர் கூறியதெல்லாம் உண்மையே என்று உறுதி செய்தார். அவருடன் இணைந்து ஆய்வு நடத்திய கே.எஸ்,.ராவத் சாந்தி தேவி இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்னர் கூட அவரைச் சந்தித்தார். 1987 டிசம்பர் 27ம் தேதி மறைந்த சாந்தி தேவி உலகினருக்கெல்லாம் மறுஜென்மம் உண்மையே என்பதை உணர்த்திய ஒரு அதிசயப் பிறவி!

தனது ஆராய்ச்சியில் ஏராளமானோரைச் சந்தித்த இயன் ஸ்டீவன்ஸன் அதில் ஆச்சரியப்படத்தக்க (சாந்தி தேவி உள்ளிட்ட) இருபது கேஸ்களைப் பற்றி விளக்கமாக எழுதி தன் ஆய்வு முடிவை வெளியிட்டார்.

இஸ்மாயிலின் முற்பிறப்பு

1956ல் துருக்கியில் அடானா மாவட்டத்தில் பிறந்தவர் இஸ்மாயில்.அவர் சிறு குழந்தையாக இருந்த போதே தனது பெயர் அல்பெய்ட் சுசுல்மஸ் என்றும் தான் கொலை செய்யப்பட்டதாகவும் தன் பெற்றோரிடம் கூறினார். பிறப்பிலேயே அவரது தலையில் ஒரு வெட்டுக் காயக் குறி இருந்தது! தனது “பழைய” வீட்டிற்கு கூட்டிச் செல்லுமாறு பெற்றோரை அவர் வற்புறுத்தவே சுசுல்மஸ் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் அடையாளம் காட்டிய இஸ்மாயில் தனது பூர்வெ ஜென்ம மகளுடன் நெடு நேரம்பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால் சஹிதா என்பவரை மணம் புரிந்து அவர் மூலம் குழந்தைகளை அடைந்தார். ஒரு நாள் தோட்டத்தில் வேலை பார்க்க இதர நகர்களிலிருந்து வந்த பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திய போது அவர்கள் சுசுல்மஸைத் தலையில் அடித்துக் கொலை செய்தனர். இவையெல்லாம் அங்கு நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது! தனது பழைய வியாபாரத்தில் வாட்டர் மெலான் பழத்திற்குப் பணம் தராத ஒரு நண்பரிடம் பழைய சம்பவத்தை நினைவூட்டி ‘பழைய வசூலையும்’ முடித்துக் கொண்டார் இஸ்மாயில்!
அந்தணராக இருந்த கிறிஸ்தவ பாதிரி!

இதே போல கிறிஸ்தவ பாதிரியாக இருந்த ஒருவர் தான் முந்தைய ஜென்மத்தில் அஜம்கர் மாவட்டத்தில் தாமோதர் உபாத்யாய என்ற பெயருடன் அந்தணராக இருந்ததாகக் கூறி பழைய ஜென்ம நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கினார்.

எட்கர் கேஸின் ஆகாயப் பதிவுகள்!

இப்படிப்பட்ட முன் ஜென்ம நிகழ்வுகளை அக்கு வேறு ஆணி வேராக விவரமாகப் பிட்டுப் பிட்டு வைத்தவர் பிரபல அமெரிக்க சைக்கிக்கான எட்கர் கேஸ் ஆவார்.(பிறப்பு 18-3-1877 மறைவு:3-1-1945).ஆகாசத்தில் பதிந்து கிடக்கும் ‘ஆகாஷிக் ரிகார்ட்’ மூலம் யாருடைய பிறவியையும் கூறி விட முடியும் என்று அவர் கூறியதோடு ஆயிரக்கணக்கானோருக்கு அவர்களது முன் ஜென்ம விவரங்களை துல்லியமாகக் கூறினார். இன்று அவரது ஆயிரக்கணக்கான சீடர்கள் அவரைப் பற்றி பெருமையுடன் கூறுகின்றனர்; சுமார் 300 புத்தகங்கள் அவரைப் பற்றி வெளி வந்துள்ளன. 35 நாடுகளில் அவரது மையங்கள் இன்றும் உள்ளன.2500 பேர்களின் கேஸ்களை அவர் விவரித்துக் கூறியது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஒரு இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து போனதைக் குறிப்பிட்டு அவரது கல்லறை இருக்கும் இடத்தையும் எட்கர் கேஸ் கூறவே அந்த இடத்திற்குச் சென்று தன் பூர்வ ஜென்ம கல்லறையைப் பார்த்துப் பரவசமானார் ஒருவர்.

எப்படி அவரால் ஒருவரின் முன் ஜென்மத்தை உடனே கூற முடிகிறது என்று அவரைக் கேட்ட போது அவர் இந்தத் தகவல்களைத் தாம் இரண்டு விதங்களில் பெறுவதாகக் கூறி அதை விளக்கினார்! முதலாவதாக ஒவ்வொருவரின் அந்தக்கரணத்தில் அவரவர் முன் ஜென்ம விவரங்கள் உள்ளன. மிக ஆழ்ந்து புதைந்து கிடக்கும் இவற்றைத் தட்டி விட்டால் திறக்கும் கதவு போல திறந்து அனைத்தயும் தான் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். இரண்டாவதாக பிரபஞ்சம் முழுவதும் மின் ஆன்மீக அலைகள் எல்லையற்ற காலம் தொட்டு இருந்து வருகிறது.நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும் ஒலி (சப்தம்) ஒளி உள்ளிட்ட அனைத்துமே ஆகாயத்தில் பதிவாகி விடுவதால் இந்த ஆகாஷிக் ரிகார்ட் மூலம் அனைத்தையும் தான் பெறுவதாகக் கூறினார்.இதைப் பெறத் தன் அதீத சைக்கிக் சக்தி உதவுகிறது என்றும் அவர் விளக்கினார்.

சுந்தரர், அப்பர் முற்பிறப்புகள்

விவேகாநந்தர்- ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ( இருவரும் நர நாராயணர்கள்), அப்பர், சுந்தரர் உள்ளிட்ட ஏராளமான மகான்களின் பூர்வ ஜென்மங்கள் அவர்களாலேயே விளக்கப்பட்டுள்ளன; இவை சுவாரசியமானவை! தேவாரத்தில் சுந்தரர் அப்பரின் வரலாற்றைப் பரக்கக் காணலாம்!
ஷீர்டி சாயிபாபாவின் ருணானுபந்தம்!

ஷீர்டி சாயி பாபாவின் வாழ்வில் அவர் தனது பக்தர்களின் பூர்வ ஜென்மங்களைக் கூறிய விதம் மிக மிக அற்புதமானவை. தன் சீடர்களில் இருவர் பாம்பும் தவளையாகவும் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த போது இவரைப் பார்த்து வெட்கமடைந்ததை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு ஆட்டுக் குட்டியை அன்போடு அணைத்து தன் பழைய சிஷ்யனான அதற்குத் தன் அன்பைத் தெரிவித்துஆசி அருளியிருக்கிறார். எத்தனை ஜென்மமானாலும் உங்களைக் கைவிட மாட்டேன் என்று உறுதி படக் கூறி ஆறுதல் அளிக்கும் அவர் இதை ‘ருணானுபந்தம்’ (பந்தத்தினால் ஏற்பட்ட கடன்) என்கிறார்! அவரே சத்ய சாயியாக அவதரித்திருப்பதும் இனி பிரேம சாயியாக அவதரிக்க இருப்பதும் அனைத்து சாயி பக்தர்களும் நன்கு அறிந்த விஷயமே!

புராண இதிஹாஸ விஞ்ஞான ஆய்வுகள் சுருக்கமாகத் தெரிவிக்கும் ஒரு உண்மை ஒவ்வொருவருக்கும் மறு பிறவி உண்டென்பது தான்! இதைக் கர்ம பலன்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் பெறுவதாக நம் அற நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெனன மரணச் சுழலை நீக்கப் பாடுபடுவதே மனிதனின் இறுதி லட்சியம் என்றும் அவை முழங்குகின்றன.

பாஹி முராரே

இந்தச் சுழலை எப்படி நீக்கிக் கொள்வது என்பதை ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் 21ம் செய்யுளில் அற்புதமாகக் கூறுகிறார். பாடல் இதோ:-
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் இஹ சம்ஸாரே பஹ¤துஸ்தாரே ருபயா பாரே பாஹி முராரே

மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு!
கடத்தற்கரிய சம்சாரத்தில் வீழ்வது!இரக்கம் கொள்; கரை சேர் முராரி!

இறைவனைப் பணிந்தால் ஜனன மரண விஷச் சுழல் நீங்கும் என்பதே புனர் ஜென்ம ஆராய்ச்சி விளக்கும் இறுதியான ஆனால் உறுதியான முடிவு! (முற்றும்)

Written by S Nagarajan
**********************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: