நட்சத்திர அதிசயங்கள்- பகுதி 1

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதலிடத்தைப் பெறுவது அஸ்வினி! இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! எத்தனை ரஹஸ்யங்கள் இதற்குள் உள்ளன தெரியுமா? அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை இந்த வாரம் பார்ப்போம்!
அஸ்வினி ரஹஸ்யம்! – 1

எழுதியவர்: ச.நாகராஜன்

அதி ரஹஸ்ய அஸ்வினி

இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும் ரஹஸ்யங்களும் ஏராளம், ஏராளம்! மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா,பீடா ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்குமானால் அது அஸ்வினி தான்! அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள் ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 18 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன.

அயோதௌம்யரின் கட்டளை

அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரிதத்தை இங்கு பார்ப்போம்.இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக் காலம். அயோதௌம்யர் என்ற மஹரிஷிக்கு உபமன்யு, ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர்.தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்டவர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் தௌம்யர் உபமன்யுவை அழைத்து,” நீ என் பசுக்கூட்டத்தை ரக்ஷ¢த்துக் கொண்டு வா” எனக் கட்டளையிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு, உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே, நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார்.உபமன்யு,” குருவே! நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார், அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குருவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார்.

அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் ஒரு கவளம் கூடக் கொடுக்கவில்லையே! என்றாலும் கூட நீ உடல் வாடாமல் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார்.அதற்கு உபமன்யு, “குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார்.தௌம்யர், “உபமன்யு, நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பி¨க்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துராசை உள்ளவனென்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு “ என்ன உபமன்யு, நீ வாடாமல் கொழுத்துத் தான் இருக்கிறாய், என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு,”ஐயனே, நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார்.

உடனே தௌம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே!” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி உபமன்யு திரும்பினார். மறு நாள் மாலை ஆயிற்று.உபமன்யு வந்தார். குரு அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு,”உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா, என்ன?பாலை அருந்தவில்லையே!” என்று கேட்டார். “ஐயனே! பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்தபின்னர் கீழே விழும் நுரைத் துளிகளை அருந்தினேன்” என்றார், உடனே தௌம்யர்,” இந்தக் கன்றுக்குட்டிகள் பாலை போதிய அளவு அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் துளிகளை இனி அருந்தமாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மாடுகளை மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல் எருக்க இலைச் சாறை அருந்தினார்.காரம் நிறைந்த எருக்க இலைச் சாறின் விஷத்தினால் அவர் கண்கள் உடனே குருடாயின.

அஸ்வினி தேவர்களை நோக்கி துதி

கண் தெரியாததால் காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து உபமன்யு எங்கே என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. ‘வாருங்கள், அவனைச் சென்று தேடுவோம்’ என்று கூறிய தௌம்யர் காட்டை நோக்கிச் சென்றார். ‘உபமன்யு, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கூவிய வாறே ஒவ்வொரு பகுதியாக அவர் தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, “ குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் வீழ்ந்து கிடக்கிறேன்!” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க உபமன்யு, தான் எருக்கஞ்சாறை அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தௌம்யர், “உபமன்யு! தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை நீ ஸ்தோத்திரம் செய்! அவர்கள் உனக்கு கண்களை மீண்டும் அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது. அதன் இறுதி வாக்கியங்களில் அவர், “ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை செய்தார்.

மீண்டும் கண்பார்வை கிடைத்தது

எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் உபமன்யுவின் முன் தோன்றி.”நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ, இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு,”நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அசுவனி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார்.நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் தந்தோம்.அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமலேயே சாப்பிட்டார். ஆகவே உன் குரு முன் செய்த பிரகாரமே நீயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம்” என்று கூறினர்.

உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே! என்னை மன்னிப்பீர்களாக! இதை என் குருவுக்குக் கொடுக்காமல் நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “ உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம்.உன் குருவினுடைய பற்கள் காரிரிரும்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர்.” இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினிதேவர்கள் மறைந்தனர்.

குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார்.தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர்,”நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல §க்ஷமத்தையும் அடைவாய்! எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங்களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார்.
அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று. மேலும் அஸ்வினியைப் பற்றிப் பார்ப்போம்
-தொடரும்

*****************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: