வீரத் தாயும் வீர மாதாவும்

 

படம்: ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி. அலாவுதீன் கில்ஜியின் கைகள் தன்மீது பட்டுவிடக் கூடாதென்பற்காக ஆயிரம் மங்கைகளுடன் தீயில் பாய்ந்த உத்தமி (இது கி.பி.1303 ஆம் ஆண்டில் நடந்தது)

English version of this article is already posted in the blog: London Swaminathan)

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்!” என்று சும்மாவா சொன்னார் பாரதி? வீரத் தாய், வீர மாதா என்ற புகழுரையை உலகிலேயே மிகப் பழமையான ரிக்வேதத்திலும் காண முடிகிறது. அதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த காளிதாசன், புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு, பாரதி பாடல்களிலும் காண முடிகிறது.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

உலகில் எந்த ஒரு பெண்ணும் கோழையைப் பெற விரும்புவதில்லை. ஆனால் அதைக் கவிதையில் வடித்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

படம்: ஜான்சி ராணி லெட்சுமிபாய், ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாள்.

போரில் இறந்தால் சொர்க்கம்

தமிழ், வட மொழி நூல்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமை போரில் இறப்பவர்கள் சொர்க்க லோகத்துக்குப் போவார்கள் என்பதாகும். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மேல் உலகம், துறக்கம், தேவர் உலகம் பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆனால் போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு “நேரடி டிக்கெட்” கிடைக்கும் என்ற செய்தி சில பாடல்களில் தெளிவாகவே உள்ளது (புறம்.26, 62, 93, 287, 341, 362 பதிற்றுப் பத்து 52):

வாடாப் பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்றனரால்; (புறம்.62)

அவ்வையார் தரும் ஒரு சுவையான செய்தி இதோ:

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என

வாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம்.93)

பொருள்: போரில் இறக்காமல் வேறு காரணங்களால் இறந்த மன்னர்களை வேதம் படித்த பிராமணர்கள் வந்து, தர்ப்பைப் புல்லைப் பரப்பி, மன்னரின் சடலத்தை அதன் மீது வைத்து, வாளால் வெட்டி போரில் இறந்தவர்கள் செல்லும் வீர சுவர்க்கத்துக்கு நீயும் போவாயாக என்று மந்திரம் சொல்லுவர். (இதைப் போரில் விழுப்புண் தாங்கி இறக்கும் தருவாயில் இருக்கும் அதியமானிடம் அவ்வையார் கூறி ‘நீ அதிர்ஷ்டசாலி அப்பா! உன்னை இப்படி வாளால் வெட்டி சுவர்க்கத்து அனுப்ப வேண்டாமல் நீயே உன் வீரத்தால் வீர மரணத்தைத் தழுவிக்கொண்டாய்’  என்று பொருள்படப் பாடுகிறார்.)

பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லுவதும் இதுதான்:

குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)

படம்: கிட்டூர் ராணி சென்னம்மா

 

ரத்த கோஷம் !!

இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் தீவிர பக்தர்கள்/ தொண்டர்கள் அந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக இரத்தத்தில் கோஷங்களை எழுதுவதைப் பார்க்கிறோம். இது ஆதிகால வழக்கம் என்னும் சுவையான செய்தியை காளிதாசன் நமக்குச் சொல்லுகிறான் (ரகு.7-65):

அஜன், ரகு ஆகிய சூரியகுல மன்னர்கள் எதிரிகளை வென்ற பின்னர் அவர்கள் நாட்டு வீரர்களை இரக்க உணர்ச்சி காரணமாக கொல்லாமல் விட்டு விடுவார்களாம். ஆனால் மன்னர்களின் தீவிர விசுவாசிகள் அம்புகளை எடுத்து அவைகளை ரத்தத்தில் தோய்த்து கொடிகளில் கோஷங்களை எழுதுவார்களாம்: “இப்பொழுது ரகுவின் புத்ரன் அஜனால் உங்கள் கீர்த்தி/ புகழ் கவரப்பட்டுவிட்டது; ஆனால் தயை காரணமாக உங்கள் உயிர் கவரப்படவில்லை” என்ற கோஷம் எழுதப்படும்!

காளிதாசன் இன்னும் ஒரு சுவையான தகவலையும் தருகிறான். ராவணனே நேருக்கு நேர் சண்டை போட வந்தவுடன் நாமனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம் (ரகு 12-89). ராவணனை மஹா பராக்ரமசாலி என்று ராமன் மதிக்கிறான். ராமனைப் போன்ற வீரர்கள் பலம் குறைந்தவர்களுடனோ, கோழைகளுடனோ சண்டை போடமாட்டார்கள்.

சங்க இலக்கியப் புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஆறு கட்டுரைகளில் எழுதினேன். இந்தத் தலைப்பின் கீழும் இதற்குப் பல உதாரணங்கள் கிடைத்தன. வீரம் பற்றி நாடு முழுதும் ஒரே கொள்கை நிலவிய காலத்தில் இப்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

*************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: