ரேவதி நட்சத்திர ரஹஸ்யம்!

 

Pisces constellation that includes REVATHI star

நட்சத்திர அதிசயங்கள் 

இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் தான் விஞ்ஞானிகள் கண்டார்கள்?இதோ பார்ப்போம்!

ரேவதி ரஹஸ்யம்!

ச.நாகராஜன்

ரைவதனின் பெண் ரேவதியின் கதை!

 

வேதம் கூறும் 27 நட்சத்திரங்களில் கடைசியாக இருப்பது ரேவதி. அதி அற்புதமான அறிவியல் ரகசியத்தை அறிவிக்கும் நட்சத்திரம் இது. புராணம் கூறும் ரேவதியின் கதையே ஆச்சரியமானது.  ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதி!அவன் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிக உயரம் உடையவர்களாக இருந்தார்கள். தன் பெண் ரேவதிக்கு தகுந்த மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தான் மன்னன் ரைவதன்.அவளுக்கு ஏற்றபடி ஒருவரும் சரியாக அமையவில்லை.ரைவதன் கவலைப்பட ஆரம்பித்தான். நாளடைவில் கவலை பயமாக மாறியது. இவளுக்கு உரிய மணாளன் யார், அவனை எப்படிக் கண்டுபிடிப்பது? சிந்தித்தான். சிந்தனையின் முடிவில் ஒரு வழி தோன்றியது.

 

இவளைப் படைத்த பிரம்மனையே நேரில் சென்று கேட்டு விட்டால் என்ன? இவளுக்காக யாரைப் படைத்தீர்கள் என்று சுலபமாகக் கேட்டு விடலாமே! உடனே நேரே சத்யலோகத்துக்குத் தன் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றான்.அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கு ஒரு பெரிய வேள்வி நடந்து கொண்டிருந்தது. பிரம்மா அவனை வரவேற்று சைகையால் சற்று இருக்குமாறு சொன்னார்.ரைவதனும் காத்திருந்தான்.

 

வேள்வி முடிந்ததும் பிரம்மா ரைவதனிடம் வந்த விஷயம் என்ன என்று அன்புடன் கேட்டார். ரைவதன் தன் கவலையைச் சொன்னான். ரேவதிக்கு உரிய மணாளன் யார் எனத் தாங்கள் தான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினான்.பிரம்மா சிரித்தார்.

“ரைவதா! ஏமாந்து விட்டாயே! நீ இங்கே வந்த போது பூமியில் கிருத யுகம் நடந்து கொண்டிருந்தது. வேள்வி முடிந்து விட்ட இந்த சமயத்திலோ அங்கு கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறது!பூமியின் காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு! இனி இவளை பூமியில் உள்ள யாரும் மணம் புரிந்து கொள்ள முடியாது. அதோ, பூமியைப் பார். அங்கு அனைவரும் உயரம் குறைந்தவர்களாக இருப்பதைப் பார்,” என்றார். ரைவதன் கலங்கிப் போனான். அருள் புரிய பிரம்மனை வேண்டினான்.

பிரம்மாவும் அருள் கூர்ந்து அவனை நோக்கி, “ரைவதா, கவலைப்படாதே! பூமியில் பத்து அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். அவர் இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். இனி, கவலையை விடு” என்றார்.

பிரம்மா சொன்னபடியே பலராமனும் கலப்பையால் ரேவதியின் தலையில் ஒரு குட்டு குட்டி அவள் உயரத்தைக் குறைத்து அவளை மணம் புரிந்தார். இப்படி முடிகிறது. கதை. இதைப் பல புராணங்களிலும் படிக்க முடிகிறது.

இதில் விஞ்ஞானிகள் வியப்படைய என்ன இருக்கிறது/ அதில் தான் சுவாரசியமே இருக்கிறது! பூமிக்கும் விண்வெளியில் உள்ள லோகங்களுக்கும் உள்ள கால நிர்ணயம் வேறு என்று பிரம்மா சொல்வதை விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்து வியக்கிறார்கள். ஹிந்து மத புராணங்களில் அப்போதே எப்படி இவ்வளவு தெளிவாக ஒரு அரிய உண்மையைக் கதை மூலமாகக் கூற முடிந்தது என்பதே அவர்களின் வியப்புக்குக் காரணம். பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் போது காலத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கு டைம் டைலேஷன் (Time Dilation) என்று பெயர். பூமியிலிருந்து விண்வெளிக்குப் பயணப்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நெடுங்காலம் சுற்றித் திரிந்து விட்டு பூமிக்குத் திரும்பினால் அவர்கள் ஆயுளில் இளைஞர்களாக இருக்க பூமியில் உள்ளவர்களோ வயதானவர்களாக ஆகி இருப்பார்கள்.

 

மையர்ஸ் டேபிள் 

பூமியிலிருந்து ராக்கெட்டில் புறப்பட்ட விண்வெளி வீரர் பயணம் செய்யும் வருடமும் அப்போது பூமியில் நாம் கழிக்கும் வருடமும் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

———————————————————————————————————————அட்டவணை

விண்வெளி வீரர் பயணத்தில் கழிக்கும் ஆண்டு        பூமியில் நாம்

கழிக்கும் ஆண்டுகள்                                                                         ———————————————————————————————————————————

1                                      1

2                                      2.1

5                                      6.5

10                                    24

20                                  270

30                                3100

50                          4,20,000 (கலியுக வருடங்கள்)

 

———————————————————————————————————————

மேலே உள்ளது Meyers Handbook of Space என்ற விண்வெளி அறிவியல் கையேடு தரும் அற்புத அட்டவணையாகும். இதிலிருந்து நாம் ஊகிக்க முடிவது இது தான்: ரைவதன் 50 ஆண்டுகள் பயணத்திலும் பிரம்ம லோகத்தில் காத்திருப்பதிலும் கழித்திருந்தால் பூமியில் 4,20,000 ஆண்டுகள் கழிந்திருக்கும்! அதாவது ஒரு யுகம் கழிந்திருக்கும். கிருதயுகத்தில் பயணத்தை ஆரம்பித்த ரைவதன் பூமியில் கலியுகத்தை இதனால் தான் பார்க்க நேர்ந்தது.

பராசக்தியின் கரு 

ரேவதி 32 நட்சத்திரங்கள் கொண்ட தொகுதி. மீனைப் போலத் தோற்றமளிப்பது. வானவியில் இதை Zeta Piscum என்று குறிப்பிடுகிறது. ஜோதிட நூல்களோ ரேவதியை வெகுவாகப் புகழ்கின்றன. பராசக்தியின் கருவாகக் குறிப்பிடப்படும் இது ஆரம்பத்தையும் (ஜனனம்) முடிவையும் குறிப்பிடுகிறது. பயணத்திற்கு உகந்தது.தொலைந்து போன பொருளைத் தேட உகந்தது. ஆகவே தொலைந்த பொருள்கள் உடனே கிடைக்கும்.இசை, நடனம், நாடகம், இலக்கியம் ஆகிய அனைத்தும் இந்த நட்சத்திரக்காரர்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு. பெரும் அற்புத ரகசியங்களளை உள்ளடக்கிய இந்த நட்சத்திரத்தின் முதல் ரகசியம் விண்வெளி லோகங்களுக்கும் நமக்கும் உள்ள கால வேறுபாட்டைக் கூறுவது தான். ஆக 27 நட்சத்திரங்களில் கடைசியாக இடம் பெறும் இது அறிவியலில் உன்னத ரகசியத்தை வெளியிடுவதில் முதலாவதாகத் திகழ்கிறது.

***************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: