வீட்டுக்கு வந்த அன்னியன்!

பார்த்ததில்ரசித்தது! படித்ததில்பிடித்தது!!

வீட்டுக்கு வந்த அன்னியன்!

.நாகராஜன்

‘வேதாந்த கேசரி’ (Vedanta Kesari) என்ற ஆன்மீகப் பத்திரிக்கையை ராமகிருஷ்ண மடம் பல காலமாக வெளியிட்டு வருவதை அனைவரும் அறிவோம். அதில் 2012 செப்டம்பர் இதழில் வெளிவந்துள்ள வீட்டுக்கு வந்த அன்னியனைப் படித்தவர் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதன் தமிழாக்கச் சுருக்கம் தான் இது!

நான் பிறந்த சில வருடங்களுக்குப் பிறகு எனது தந்தை ஒரு அன்னியனைச் சந்தித்தார். எங்கள் ஊரோ சின்ன ஊர்.அதில் அவனை அதுவரை யாரும் அங்கு பார்த்ததில்லை!

அவனைப் பார்த்த மாத்திரத்தில் என் தந்தையாருக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது! அப்படி ஒரு மாய ஜாலக்காரன் அவன்! வீட்டிற்கு அழைத்தார். அவனும் உடனே வந்து விட்டான். வந்தவன் போகவே இல்லை!

நான் வளர வளர எங்கள் வீட்டில் அவன் இருப்பதைப் பற்றி கேள்வி எதையும் நான் எழுப்பவில்லை. எனது இளம் வயதில் தனியொரு இடத்தை அவன் பிடித்து விட்டான்! எனது தந்தையும் தாயும் எனக்கு அவ்வப்பொழுது நல்லது கெட்டதை இனம் காணச் சொல்லித் தருவார்கள். அம்மா இது நல்லது இது கெட்டது என்று சுட்டிக் காட்டிச் சொல்லித் தருவாள்.தந்தையோ கீழ்ப்படிவது எப்படி என்பதைச் சொல்லித் தருவார்! ஆனால் அன்னியனோ! அவன் தான் எனக்கு எல்லாக் கதைகளையும் சொல்வான். மணிக்கணக்காக அவன் கூறும் காமடி சம்பவங்கள், மர்மக் கதைகள், சாகஸக் கதைகள் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தும்; மெய் சிலிர்க்க வைக்கும். ஆவென்று வாய் பிளந்தவாறே அவற்றைக் கேட்டு ஆனந்திப்பேன். அரசியல் நிகழ்வுகளா, வரலாறா, விஞ்ஞானமா எது வேண்டுமானாலும் கேட்கலாம்.அவனுக்கு எல்லாவற்றிற்கும் விடை தெரியும்.அவனுக்கு இறந்தகாலம் அத்துபடி. நிகழ்காலமோ கேட்கவே வேண்டாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கூட அவன் கணித்துச் சொல்வதுண்டு!

அவன் எங்களை ஒரு சமயம் புட்பால் (Foot Ball Finals) விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றான். ஒரு சமயம் அழுதேன் ஒரு சமயம் சிரித்தேன். எப்படிப்பட்ட விளையாட்டு அது! விளையாட்டு முழுவதும் ஒரே சத்தம் தான்! என் தந்தை கூட அந்தச் சத்தத்தை ரசித்தார். கண்டிக்கவே இல்லை என்னை!

ஆனால் சில சமயம் என் அம்மா மட்டும் அவன் எங்களுடன்  பேசிக்கொண்டிருக்கும் போது சமையலறைக்குள் தஞ்சம் புகுந்து விடுவாள். ஒரு வேளை அமைதி அவளுக்கு அங்கு தான் கிட்டியதோ என்னவோ! இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த அந்நியனை எப்படி விரட்டுவது என்று சமையல் அறைக்குள் அவள் யோசித்திருப்பாளோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

எனது தந்தை கட்டுப்பாடானவர். அறநெறிகளில் எதையும் யாரும் எப்போதும் மீறக் கூடாது. ஆனால் அந்த அந்நியன் மட்டும் இதைக் கேட்க மாட்டான்.அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவனுக்கு மட்டும் கிடையாது.ஆபாசமாகப் பேசுவது என்பது என் வீட்டில் முற்றிலுமாகத் தடுக்கப்பட்ட விஷயம். வெளியிலிருந்து வந்தவர்கள் கூட என் வீட்டில் கண்ணியமாகத் தான் பேச வேண்டும். ஆனால் அந்நியனோ சில சமயம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளைப் பேசி விடுவான். என் தந்தைக்கோ முகம் சிவக்கும். என் அம்மாவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்னும், என்றாலும் அந்நியனை அவர்கள் திட்டியதே இல்லை! மது பானத்தைப் பற்றியும் சிகரெட் பற்றியும் அவன் சொல்வதுண்டு! செக்ஸைப் பற்றியும் விலாவாரியாக அவன் சொல்வான்! சில சமயம் அப்பட்டமாக அவன் விஷயங்களைக் கூறி விடுவான். சில சமயம் பூடகமாக விளக்குவான். சில சமயம் அவன் சொல்வதைக் கேட்டால் மிகவும் தர்மசங்கடமாக இருக்கும்!

 

இப்போது தான் எனக்குப் புரிகிறது. எனது ஆரம்ப காலத்தில் அவனது செல்வாக்கு என் மீது அதிகப்படியாகவே இருந்திருக்கிறது என்று! காலம் செல்லச் செல்ல எனது பெற்றோர் எதையெல்லாம் நல்லவை என்று கருதினார்களோ அவற்றிற்கு எதிரான கருத்துக்களை அவன் முன் வைத்தான். ஆனாலும் கூட என் பெற்றோர் அவனை வெளியில் போ என்று சொல்ல முன்வரவில்லை!

 

என் வீட்டிற்குள் அந்நியன் வந்து சுமார் ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. எங்களில் ஒருவனாக அவன் கலந்து விட்டான் என்றாலும் கூட முன்பிருந்த கவர்ச்சி அவனிடம் இப்போது இல்லை. என் வயதான பெற்றோர் ஒடுங்கிக் கிடக்கும் அறையில் ஒரு மூலையில் இப்போதும் கூட அவனுக்கு இடம் உண்டு. அவன்பேசுவதை இப்போது கூடக் கேட்க ஆட்கள் உண்டு.

 

 

அவன் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா?

அவனை நாங்கள் டிவி (Television) என்று அழைக்கிறோம்!

அவனுக்கு இப்போது ஒரு மனைவி வேறு வந்து விட்டாள்!

அவளை நாங்கள் கணினி (Computer)  என்று அழைக்கிறோம்!

அவர்களுக்குக் குழந்தைகள் வேறு பிறந்து விட்டன.

முதல் குழந்தையின் பெயர் செல் போன் (Cell Phone)!

இரண்டாவது குழந்தையின் பெயர் ஐ பாட் (I Pod)!

மூன்றாவது குழந்தையின் பெயர் இண்டர் நெட் (Internet)!

 

படித்தது பிடித்திருந்தால் நன்றி வேதாந்த கேசரிக்கு.தமிழில் குறையிருந்தால் அது என்னுடையது (By S Nagarajan! )

*********************

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: