ஜாதகாலங்காரம் தந்த குஜராத் ஜோதிடர் கணேசர்!

ச.நாகராஜன்

கணேசரின் பிறந்த ஊரும் காலமும் 

ஜாதகாலங்காரம் என்ற புகழ் பெற்ற ஜோதிட நூலைத் தந்த கணேசர் அல்லது ஸ்ரீ கணபதியை ஜோதிடர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர். ஏழு அத்தியாயங்கள் கொண்ட சிறிய நூலில் ஏழாவது அத்தியாயத்தில் இவர் தம்மைப் பற்றி வெகு சுருக்கமாக நான்கே செய்யுள்களில் கூறுகிறார்.இந்த அத்தியாயத்தின் பெயர் வம்ச வருண அத்தியாயம். அதில் இவர் தன்னைப் பற்றிக் கூறுவதன் சுருக்கத்தைப் பார்ப்போம்.

 

“புகழ் பெற்ற இந்த உலகில் குஜராத் மன்னரின் அரசவையில் கன்ஹாஜி என்ற ஜோதிடர்களுக்குள் மகேந்திரனாக விளங்கிய பிரபல மேதை இருந்தார். அவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று புத்திரர்கள் பிறந்தனர்.மூத்தவரான சூர்யதசா மிகவும் புத்திசாலி. சிறந்த ஜோதிடருமாவார். அவருக்கு அடுத்துப் பிறந்தவர் கோபாலர்.அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர், மூன்றாமவரான ராமகிருஷ்ணர் ஜோதிடர்களிலெல்லாம் சிறந்தவராக விளங்கினார். இதில் கோபாலருக்கு மகனாகப் பிறந்தவர் கணேசர்.இவர் சாலிவாகன சகாப்தம் 1535ல் (கி.பி, 1613) பாத்ரபத மாதத்தில் ப்ரத்னபுரத்தில் இதை இயற்றினார்.” இப்படி இவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

 

ப்ரத்ன என்றால் சூர்யன் என்று பொருள். ஆகவே இவர் தாபீ நதிக்கரையில் அமைந்திருந்த சூரியபுரத்தில் இருந்து இதை எழுதினார் என்று தெரிய வருகிறது. சிவ பண்டிதர் என்னும் குஜராத் பிராமணரிடமும் ஜோதிடக் கலையை தான் கற்றதாக அவரே தெரிவிக்கிறார். அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கியவரான இவரை லாபஜி என்று அனைவரும் அன்போடு அழைத்தனராம்.

ஜாதகாலங்காரம்

இந்த நூல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அனைவராலும் படிக்கப்பட்டு போற்றப்பட்டது. காரணம் மிகவும் ரத்னச் சுருக்கமாக எளிமையாக இந்த நூல் அமைந்திருப்பதினால் தான். ஜோதிடத்தைக் கற்க விரும்பும் அனைவருக்கும் முதலில் கற்க ஏற்ற நூல் இது. சுமார் 110 சுலோகங்கள் கொண்டது இது. ஸ்ரக்தரா விருத்தத்தில் அமைந்துள்ள இந்த நூலை தமிழ். தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம். ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இன்று வாங்கிப் படிக்க முடியும்!

 

ஏழு அத்தியாயங்கள்

இந்த நூலில் உள்ள ஏழு அத்தியாயங்கள் இவை தான் 1) சம்ஜ்ஞா அத்யாயம் 2)பாவ அத்யாயம் 3) யோக அத்யாயம் 4) விஷ கன்யா அத்யாயம் 5) ஆயுர்த்தாய அத்யாயம் 6)வ்யதியய பாவ பலாத்யாயம் 7)வம்ச வருண அத்யாயம்

 

சம்ஜ்ஞா அத்தியாயத்தில் லக்னத்திலிருந்து ஒவ்வொரு பாவமாக அது எதைக் குறிக்கும் என்பதை விளக்குகிறார். லக்னத்திற்கு மூர்த்தி, அங்கம் தனு உதயம் என்று பெயர்கள் உண்டு என்பதையும் இரண்டாம் இடத்திற்கு ஸ்வ, கோச, அர்த்த,குடும்ப தன என்ற பெயர்கள் உண்டு என்பதையும் சொல்லி அதன் அர்த்தமான செல்வம்,புதையக் போன்ற சொற்களால் அதை விளக்குகிறார். இப்படிப்பட்ட விளக்கம் தான் ஜோதிடம் கற்க விரும்புவோரை இந்த நூலின் பால் கவர்கிறது. அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ராசியிலும் நிற்கும் கிரகத்திற்கான பலன்களைத் தெளிவாகச் சொல்கிறார்.இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரி வரியாக ஒவ்வொரு விஷயமாக இவர் விளக்கிச் சொல்வது கற்பவரை பரவசத்தில் ஆழ்த்தும். ஜோதிடத்தை படிப்படியாக எளிமையாகக் கற்க ஏற்ற நூல் இது.

கணபதி அல்லது கணேசர் இயற்றிய ஜாதகாலங்காரம் ஜோதிடம் கற்பதில் விக்னம் நீங்கி பிள்ளையார் சுழி போடுவதற்கான சிறந்த நூல்!

*****************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: