மகா பாரதத்தில் இல்லாதது எதுவும் இல்லை. “வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம்” என்பது பெரியோர் வாக்கு. அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப் பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) தனித் தனி கட்டுரைகள் எழுதிவிட்டேன்.
இப்பொழுது மாயன் காலண்டரில் உலக அழிவு பற்றி இருப்பதாக வதந்தி கிளம்பி இருப்பதால் எல்லோருக்கும் இதில் ஆர்வம் பிறந்திருக்கிறது. மகாபாரதம் கலியுக முடிவு பற்றி என்ன சொல்லி இருக்கிறது எனபதைச் சொல்லுகிறேன். பல இடங்களில் உலக முடிவு பற்றிப் பேசப்பட்டாலும் வன பர்வத்தில் கலியுகத்தின் இறுதிக் காலம் பற்றி விரிவாகக் காணலாம்.
நம்மைப் போலவே பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கும் இதில் ஆர்வம் இருந்திருக்கிறது. இது ஒரு அதிசயமான, ஆர்வமூட்டும் விஷயம் என்று பீடிகை போட்டுவிட்டு, மார்க்கண்டேய முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகளைக் கேட்கிறார் தர்மர்:
தர்மங்களும் நற்குணங்களும் அழிந்தபின்னர் என்ன நடக்கும்? அப்போது மனிதர்கள் என்ன உண்ணுவார்கள், எப்படிப் பொழுதைக் கழிப்பார்கள்?, அவர்கள் எந்த அளவுக்கு பலம் உடையவர்களாக இருப்பர்? கலியுகம் முடிந்த பின்னர் கிருத யுகம் துவங்குமா?
(தர்மரின் கேள்விகளை இந்தக் காலத்தில் படிக்கும்போது நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று எண்ணி வியக்க வேண்டியுள்ளது. அன்றாட உப்பு ,புளி, மிளகு பற்றிப் பேசாமல் இந்தப் பூவுலகின் தோற்றம், முன்னேற்றம், முடிவு குறித்து சிந்திப்பதை வேறு எங்கும் காண முடியாது. இந்துப் புராணங்களிலும் மகாபாரதத்திலும் மட்டுமே காண முடியும்)
மார்கண்டேய முனிவரின் பதிலில் உள்ள ‘பாயிண்டு’களை மட்டும் பார்ப்போம்:
1.கிருத (சத்திய) யுகத்தில் ஏமாற்று, மோசடி, பேராசை, பொய் கிடையாது. அப்போது தர்மம் என்னும் மாட்டுக்கு நான்கு கால்கள் இருந்தன. திரேதா யுகத்தில் பாவங்கள், ஒரு காலை வெட்டிவிட்டன. அடுத்த தூவாபர யுகத்தில் பாவங்கள் பெருகி அறம் அழியவே தர்மத்துக்கு இரண்டு கால்கள் மட்டுமே எஞ்சின. கலியுகத்திலோ இது ஒரே கால் ஆகிவிடும்.
2.ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் உடல் பலம், ஆன்ம பலம், புத்தி ஆகியன குறைந்து கொண்டே வரும். கலியுகத்தில் நான்கு வருணத்தாரும் பொய்யாக ஆசார அனுஷடானங்களைப் பின்பற்றுவர். ஒருவரை ஒருவர் ஏமாற்றுவர். போலி அறிஞர்கள் பொய்மை வாதத்தால் உண்மையை மறைப்பர். ஆயுள் குறைவால அதிகம் கற்க முடியாது. கல்விக் குறைவால் விவேகம் வராது. பேராசை, காமம், கோபம், அறியாமை ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் வஞ்சிப்பர். முதல் மூன்று ஜாதியினர் நாலாவது ஜாதி அளவுக்கு தாழ்ந்து விடுவர்.
3.மீன், ஆடு முதலிய உணவு அதிகரிக்கும். பசுமாடுகள் குறைந்துவிடும். ஆசை காரணமாக ஒருவரை ஒருவர் கொல்லுவர். மனைவியர் நண்பர்கள் போல இருப்பார்கள். திருடர்கள், நாஸ்தீகர்கள் அதிகரிப்பர். தானியங்கள் விளையாமையால் ஆறுகளிலும் ஏரிகளிலும் இறங்கி பயிர் செய்வர். அப்படியும் வறண்ட பூமியாகவே இருக்கும்
4. அப்பன் , மகன் சொத்தையும், மகன் அப்பன் சொத்தையும் அபகரிப்பன். சாஸ்திர விதிகளுக்குப் புறம்பான விஷயங்களை அனுபவிப்பர். பிராமணர்கள் வேதங்களை நிந்திப்பர்.. ஹோமம் முதலியவற்றைப் பின்பற்றார்.
5.மிலேச்சர் போன்று நடக்கத் துவங்குவர். யாக யக்ஞங்கள் நடக்காது. மகிழ்ச்சி குறையும். பலமும் அறிவும் குறையும் ஒருவர் ஒருவருடன் வாதிடுவர். காக்கும் தொழிலில் உள்ளவர்கள் தண்டனை அளிப்பதில் மட்டும் கருத்தைச் செலுத்துவர். அவர்கள் நேர்மையான மக்களையும் அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்களையும் அபகரிப்பர்.
6. மனைவிமார்கள், கணவனுக்கு பணிவிடை செய்யார். பார்லி, கோதுமை விளையும் நாடுகளை நோக்கி மக்கள் செல்லுவர். ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் மதியார். வருண வேறுபாடுகள் அகன்று எல்லோரும் ஒரே மாதிரி இருப்பர். தோட்டங்களையும் மரங்களையும் அழிப்பர்.ஐயோ போன்ற கதறல்கள் அதிகரிக்கும்.
கல்கி அவதாரம்
7. சூரியன், சந்திரன், குரு மூவரும் புஷ்ய நட்சத்திரத்துடன் ஒரே ராசியில் பிரவேசிக்கையில் புதிய கிருத யுகம் துவங்கும். (பீஷ்ம பர்வத்தில் ஓரிடத்தில் யுக முடிவில் சந்திரனை ஐந்து கிரகங்கள் பீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நிறைய கிரகங்கள் ஒரே ராசியில் சேருவது பொதுவாக நன்மை இல்லை என்பது கருத்து.)
இந்த நேரத்தில் சம்பல என்னும் ஊரில் ஒரு பிராமணர் குடும்பத்தில் கல்கி அவதரிப்பார். அவர் விஷ்ணுவின் புகழ் பாடுவார். தீயோரை அழித்து நல்லோரைக் காப்பாற்றுவார். அவர் பிறந்த பின்னர் பூமி எங்கும் மழையும் சுபிட்சமும் அமைதியும் நல்லாட்சியும் நிலைபெறும். அவர் கிருதயுகத்தைத் துவக்கிவைப்பார். அவர் துராசாரம் மிக்க மிலேச்சர்கள் அனைவரையும் ஒழிப்பார். அவர் மன்னர்களுக்கெல்லாம் மன்னராக விளங்குவார். அவர் நினைத்த மாத்திரத்தில் ஆயுதங்களும் படை பலமும் வந்து குவியும். கல்கி என்பவர் மகா பலவானாகவும், புத்திமானாகவும், குணவானாகவும், தேஜோமயமாகவும் ஜொலிப்பார். (வேறு சில புராணங்களில் அவர் வெண் புரவியில் (வெள்ளைக் குதிரை) பவனி வருவார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது).
8. உலக அழிவின்போது ஏற்படும் இயற்கைச் சீற்ற வருணணைகளைப் படிக்கையில் பூகம்பம், கடல் சீற்றம், சுனாமி, பெருந்தீ, வறட்சி, வெள்ளம், எரிமலைச் சீற்றம், விண்கல் வீச்சு —ஆகிய எல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆக முன்னோர்களும் தர்மம் குன்றும் போது இயற்கையும் மாறுபடும் என்று எதிர்பார்க்கின்றனர்.
9. இவை எதுவும் நாளையே நடைபெறப் போவதில்லை. ஆனால் சில விஷயங்கள் இப்போதே நடப்பதை மறுப்பதற்குமில்லை. இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இதே வன பர்வத்தைப் படித்து புது அர்த்தம் ஏதேனும் புலப்படுகிறதா என்பதைப் பார்ப்போம்.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவில்லை
-திரு ஞான சம்பந்தர்
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில், தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்; மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்; அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கை எழுத்தே
-அருணகிரிநாதர்
சந்தானம் சுவாமிநாதன் எழுதிய இவைகளையும் காண்க:
(1)பழமொழியில் இந்துமதம் (2) Do Hindus Believe in E.T.s and Aliens? (3)Bhishma: First Man to Practise Acupuncture (4) Great Engineers of Ancient India 5) டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியுமா?
Venkatesh Varadhachary
/ December 18, 2012இந்த கலியுகம் முடிய இன்னும் 4,28,000 approx ஆண்டுகள் இருக்கின்றன.அது வரையில் சில நிகழ்வுகள் இயற்கை அந்த முடிவிற்காக நடத்திக்கொண்டே செல்லும் .
elango
/ July 11, 2014முதல் வாக்கியத்தில் எண்களைக் குறிப்பிடும் போது நான்காயிரம், மூவாயிரம், இரண்டாயிரம், மற்றும் ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் சம்ஸ்கிருத செய்யுட்களில் என்களின் வரிசை “அங்கானாம் வாமதோ கதி” எனும் விதிக்கேற்ப 1, 2, 3, மற்றும் 4 என எழுதப்படாமல் 4, 3, 2, மற்றும் 1 என எழுதப்பட்டுள்ளது. இது கலியுகத்திற்கு 1200 சூர்ய வருடங்கள் எனும் தவறான கருத்தை ஏற்படுத்தி, கணக்கு சரியாக வராததால் சூர்ய வருடமான திவ்ய வருடம் தேவர்களின் வருடமான தைவ்ய வருடமாக கணிக்கப்பட்டு ஒரு தேவ வருடம் 360 மனித வருடங்களுக்குச் சமமானதால், 1200ஐ 360ஆல் பெருக்கி, கலியுகத்திற்கு 432,000 வருடங்கள் என கூறப்பட்டுள்ளது. நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என செய்யுட்களில் காணப்படும்போது அவை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என படிக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே கலி யுகத்திற்கு 4800 வருடங்கள் என்பதற்கு பதிலாக 432,000 வருடங்கள் என தவறாக கணக்கிடப்பட்டுள்ளது.