பாரதியின் பேராசை!

old bharathi

“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

என்ன ‘பேராசை’ பாருங்கள் பாரதிக்கு!!

 

எல்லோருக்கும் ஆசை உண்டு. அது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே இருக்கும். அது சின்ன ஆசை. நாட்டைப் பற்றியும் மனித குல முன்னேற்றத்தைப் பற்றியும் சதா சர்வ காலமும் அல்லும் பகலும் அனவரதமும் ஆசைப்பட்டால் அதை என்ன என்று அழைக்கலாம்? அது பெரிய ஆசை= ‘பேராசை’ அல்லவா?

படித்துப் பாருங்களேன். நீங்களே சொல்லுவீர்கள்

பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலை இருக்குமானால் பிரம்மாவே நாசமாகப் போகட்டும் என்று சபித்தான் வள்ளுவன் (இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்.  குறள் 1062)

பாரதி என்ன வள்ளுவனுக்கு சளைத்தவனா?

“தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்கிறான். இதெல்லாம் வெட்டிப் பேச்சு, வீராப்பு என்று நினைப்பவருக்கு அவனே வழியும் சொல்லிக் கொடுக்கிறான்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில்

உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”.

உழைத்து வாழ வேண்டும். லாட்டரி பரிசு மூலமோ அரசாங்க நிதி உதவி மூலமோ பணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது.

அவனுக்கு இன்னும் ஒரு ஆசை!

செல்வம் எட்டும் எய்தி—நின்னாற்

செம்மை ஏறி வாழ்வேன்

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம். ரொம்பத்தான் ஆசை!

 

இன்னொரு இடத்தில்

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

இந்த நிலத்துக்குச் சுமையென வாழாமல் பிறருக்கு உதவி செய்து வாழ அருள்புரி என்று இறைவனிடம் மன்றாடுகிறார். அல்லும் பகலும் நம்மைப் பற்றியும் நம் குடும்பத்தையும் பற்றி சிந்திக்கும் நம்மையும் நம்ம ஊர் அரசியல் தலைவர்களையும் பாரதியுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவனிடம் இருந்து ஊற்றுணர்ச்சி பெற வேண்டும்.

 

எப்போதும் ‘பாஸிடிவ் திங்க்கிங்’ (Positive Thinking) உடையவன் பாரதி.

மனப் பெண் என்னும் பாடலில் மனதை நோக்கிச் சொல்கிறான்:

“நின்னை மேம்படுத்திடவே

முயற்சிகள் புரிவேன்; முக்தியும் தேடுவேன்

உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட

சிவமெனும் பொருளை தினமும் போற்றி

உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்”

கடந்த கால கஷ்டங்களை எண்ணிக் கவலைப் படுவோருக்கு ஒரு அறிவுரையும் வழங்குகிறான்

“இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்

தீமை எல்லாம் அழிந்து போம் திரும்பிவாரா”

. . . .. . . . .

‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடத் துவங்கியவன் திடீரென்று

“பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்பட வேண்டும்”

என்று ஆசைப்படுகிறான். பெண்கள் கல்வி கற்றால்தான் முன்னேற முடியும் என்பது அவன் துணிபு.

stamp of bharathy

 

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனி அரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை அருளாய்

குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடும் தனிப் பரம் பொருளே!

………………………

என்றும் இன்னொரு பாட்டில்

செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்

கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்

தொல்லைதரும் அகப் பேயைத் தொலைக்க வேண்டும்

துணையென்று நின்னருளைத் தொடரச்செய்தே

நல்வழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்

நமோ நம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே! என்று பாடுகிறான்.

…………..

வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ் பாட்டில்………….

“இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க

நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக ! என்று வேண்டி

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !  வாழிய பாரத் மணித்திரு நாடு என்றும் வாழ்த்துகிறான்.

…………………..

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி

மனத்திற் சலனம் இல்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்

நினைக்கும்பொழுது நின்மவுன

நிலை வந்திட நீ செயல் வேண்டும்

கனக்கும் செல்வம் நூறு வயது

இவையும் தர நீ கடவாயே!

………………….

என்றும் இன்னொரு பாட்டில்

அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்

நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்

அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்

உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்

வேண்டாதனைத்தையும் நீக்கி

வேண்டியயதனைத்தும் அருள்வது உன் கடனே”  என்பான்

…………………

ஒரு கோடி தமிழ் பாட ஆசை

விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே

தொண்டுனது அன்னை பராசக்திக்கென்றும் தொடர்ந்திடுவேன்

பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவை

தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!

…………………………..

கலியுகத்தைக் கொல்வேன்

பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே (பாரதி) என்பான்.

 

அவனுக்குள்ள பல ஆசைகளில் ஒன்று வேதத்தை தமிழில் பாடவேண்டும் என்பதாகும்:

“அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம்

அனலைப் பணிந்து  மலர் தூவுவோம்

தமிழில் பழ மறையைப் பாடுவோம்

தலைமை பெருமை புகழ் கூடுவோம்”

 

இப்போது எனக்கும் பாட வேண்டும் போல இருக்கிறது:

பேராசைக் காரனடா பாரதி—அவன்

ஏது செய்தும் தமிழை வளர்க்கப் பார்ப்பான்!

பேராசைக் காரனடா பாரதி—அவன்

ஏது செய்தும் மனித குலம் செழிக்க வைப்பான்!

வாழ்க பாரதி, வளர்க தமிழ்! செழிக்க வையகமே!

……………….

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: