பூமியை நோக்கி வால் நட்சத்திரம் வருகிறது
Comet Hale Bopp
2013ஆம் ஆண்டில் பெரிய செய்தியாக அடிபடப் போவது ஒரு புதிய வால் நட்சத்திரம் ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதை சூப்பர் காமெட் (super comet) என்று அவர்கள் அழைக்கின்றனர். காரணம் என்னவென்றால் இது பௌர்ணமி நிலவை விட அதிகம் வெளிச்சம் உடையதாக இருக்கும். பகல் நேரத்தில் கூட இது நிலவை விடப் ப்ரகாசமாகத் தெரியும்.
இது பூமிக்கு மிக அருகில் நவம்பர் 28ஆம் தேதி வரும். ஒரு மாத காலத்துக்கு வான வேடிக்கைகளை நடத்திவிட்டு சூரிய மண்டலத்திலிருந்து கண் காணாத தொலைவுக்குச் சென்றுவிடும். இதன் பெயர் சி/2012எஸ்1 (C/2012S1). இதைக் கண்டுபிடித்த அமைப்பின் பெயரில் இதை இசான்(ISON) அல்லது ஐசான் என்றும் அழைப்பர். இதைப் போன வருஷம்தான் முதலில் பார்த்தனர். அது முதல் இதைக் கண்காணித்து வருகின்றனர்.
ஹாலியின் (Halley’s Comet) வால் நட்சத்திரம் 76 ஆண்டுக்கு ஒரு முறை வரும். ஆனால் இது அப்படிப்பட்ட பாதையில் செல்லாமல் சுற்றி வராத பாதையில் செல்கிறது. இது ஊர்ட்(Oort Clouds) மேகப் பகுதியில் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 1997ஆம் ஆண்டில் வந்த ஹேல் பாப் (Hale Bop) வால் நட்சத்திரமும் பெரிய வாலுடன் பூமியிலுள்ளோருக்குத் தெரிந்தது. புதிய வால் நட்சத்திரமோவெனில் நிலவைப் போல பன்மடங்கு ஒளிவீசும்.
Halley’s Comet
ஆபத்து வருமா?
வால் நட்சத்திரம் தோன்றினால் தேசத்துக்கும் அதை ஆள்வோருக்கும் ஆபத்துவரும் என்ற நம்பிக்கை மஹா[பாரத காலத்தில் இருந்து நிலவி வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதே செய்தி வருகிறது. ஒரு வால் நட்சத்திரம் தோன்றிய பின்னர் ஒரு சேர மன்னன் இறப்பார் என்று புலவர் கவி பாடினார். எதிர்பார்த்தபடியே அம் மன்னன் ஏழாம் நாளில் இறந்தான். மாபாரதத்திலும் போருக்கு முன் தூமகேது தோன்றியது.
இதோ புறநானுற்றில் உள்ள பாடல்:
பாரி வள்ளளின் பெருமையைப் பாடும் கபிலன் அந்த நாட்டில் “மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,, தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்” (பொருள்: சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், தூமகேது (வால் நட்சத்திரம்) தோன்றினும், வெள்ளி கிரகம் தென் திசை நோக்கிச் சென்றாலும்) மழை பொய்க்காது என்கிறார். ஆக கபிலரும் தூமகேது தோன்றினால் கெடுதிகள் வரும் என்பதை அறிந்திருந்தார்.
புறநானுற்றில கூடலூக் கிழார் பாடிய பாடல் எண் 229ல்:
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப்பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாள்மீன் திரிய…………..
கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே………….. (புறம் 229)
அதாவது தூமகேது ஒன்று தோன்றிய ஏழாம் நாளில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் அஞ்சினார். அதன்படியே அவன் இறந்துபட்டவுடன் புலவர் பாடிய பாடல் இது. சிலர் இதை எரிகல் விழுந்தது என்பர். தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்வதால் பல அறிஞர்கள் இதை தூம கேது என்றே விளக்கியுள்ளனர்.
Comet Hale Bopp
பாரதியாரின் வால் நட்சத்திரப் பாடல்
சாதாரண வருஷத்து தூமகேது (1910) என்ற பெயரில் பாரதியார் வால் நட்சத்திரப் பாட்டு இருக்கிறது.இது ஹாலியின் வால் நட்சத்திரம் வந்தபோது எழுதிய பாடல்:
தினையின் மீது பனை நின்றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியை கேண்மை கொண்டிலங்கும்
தூமகேதுச் சுடரே வாராய்!
எண்ணில் பல் கோடி யோசனை எல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புணைந்த நின்னொடு வால் போவது என்கின்றார்
மண் அகத்தினையும் வால் கொடு தீண்டி
ஏழையர்க்கு ஏதும் இடர் செய்யாதே நீ
போதி என்கின்றார்; புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித்து அறிஞர் நிகழ்த்துகின்றனரால்.
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்து பன் நூறாண்டாயின!
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.
வாராய் சுடரே! வார்த்தை சில கேட்பேன்;
தீயர்க்கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல் புவியதனை துயர்க்கடலில் ஆழ்த்தி நீ
போவை என்கின்றார்; பொய்யோ, மெய்யோ?
ஆதித் தலைவி ஆணையின்படி நீ
சலித்திடும் தன்மையால், தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாய்ப் புனைதற்கே என
விளம்புகின்றனர், அது மெய்யோ பொய்யோ?
ஆண்டு ஓர் எழுபத்தைந்தினில் ஒரு முறை
மண்ணை நீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையும் என்கின்றார்; மெய்யோ பொய்யோ?
சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும்
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதாப்
புகலுகின்றனர்; அது பொய்யோ, மெய்யோ?
— தேசிய கவி சுப்பிரமணிய பாரதி
Comet Mc Naught
பி.பி.சி.( BBC Tamil Service) தமிழோசையில் சுவாமிநாதன் பதில்கள்
பி.பி.சி. தமிழோசை ப்ரொட்யூசராக (Producer) நான் வேலை பார்த்த காலத்தில் வினவுங்கள் விடைதருவோம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினேன். அந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் வினவுங்கள் விடைதருவோம் என்ற அதே பெயரில் புத்தகமாக வந்தது. அதில் வால் நட்சத்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில் இருந்து சில பகுதிகள்:
1.வால் நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தைச் (Solar System) சேர்ந்தவைதான். ஆனால் இவைகள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.
2.இதற்கு தலை, தலையின் நடுவே உட்கரு, வால் (Head, Nucleus and Tail) என்ற மூன்று பகுதிகள் உண்டு. சூரிய மண்டலம் உருவான காலத்தில் கிரகங்களாக உருவாகாமல் எஞ்சிய விண்துகள்களே இப்படி தூமகேது ஆயின.
3.உட்கரு என்பது தூசியாலும் பனிக்கட்டியாலும் ஆனது. அதைச் சுற்றி வாயுக்கள் இருக்கும்
4.சூரியனில் இருந்து தொலைவில் இருக்கும்போது உட்கரு மட்டுமே இருக்கும். சூரியனை நெருங்கியவுடன் அது ஆவி ஆகி வாயுக்களும் வாலும் தோன்றும்
5.சூரியனை நெருங்கும்போது வால் பிரகாசமாகத் தெரியும், தொலைவில் செல்லுகையில் மங்கி மறைந்துவிடும்
6.எட்மண்ட் ஹாலி (Edmund Halley) என்பவர் கண்டு பிடித்த ஒரு தூமகேதுவுக்கு அவர் பெயர் சூட்டபட்டது. அது 76 ஆண்டுக்கு ஒரு முறை நமக்குத் தோன்றும்.
7.பூமியில் உயிரினங்கள் தோன்றவும் நோய்க்கிருமிகள் பரவவும் வால் நட்சத்திரங்கள் காரணமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
8.மூன்றேகால் ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வரும் என்கே (Encke)யும் இரண்டரைக் கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் டெலாவ(Delavan)னும் ஆச்சரியம் நிறைந்தவை.
9.சில தூமகேதுக்கள் கிரகங்களின் ஈர்ப்புவிசையால் பிளவுபடும்
10.லட்சக் கணக்கில் இவை இருந்தாலும் அத்தனையும் பூமிக்கு அருகில் வாரா.
11.இவற்றின் தலை, வால் ஆகியன பல கோடி மைல் அகலம், நீளம் உடையவை.
12.இவற்றை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்களின் பெயரே சூட்டப்படும். ஒரே வால் நட்சத்திரத்தை மூன்று ஜப்பானியர்கள் கண்டு பிடித்துச் சொன்னதால் அதற்கு டாகோ—சாடோ—கொசாகா (Tago—Sat0—Kosaka) என்று பெயர் சூட்டினர்.
13.சேகி (Seki) என்ற ஜப்பானியர் இரண்டு வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடித்துச் சொன்னதால் இரண்டுக்கும் அவருடைய பெயரையே சூட்டினர்.
வால் நட்சத்திரம் தோன்றினால் அரசர்க்கோ நாட்டிற்கோ தீங்கு நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்பதில்லை.. நவம்பர் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஜோதிடர்களுக்கும் ஆரூடக்கார்களுக்கும் நல்ல ‘பிசினஸ்’ நடக்கும்!
For further detail contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com