சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

 

Murugan Statue at Batu Caves, Malaysia

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை- 3

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

அருணகிரிநாதரின் திருப்புகழில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவார செல்வாக்கையும் மாணிக்கவாசகரின் திருவாசகச் செல்வாக்கையும் நன்கு காணமுடியும். இருந்தபோதிலும் அவர் சம்பந்தருக்குதான் அடிமை என்பதை அவரே திருப்புகழ் பாடல்களில் கூறுகிறார். 1300க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 149 பாடல்களில் அவர் திரு ஞான சம்பந்தப் பெருமானை நெஞ்சாரப் புகழ்கிறார், போற்றுகிறார். அவரைப் போல அமிர்த கவி இயற்ற அருள்  புரியுமாறு முருகப் பெருமானிடம் இறைஞ்சுகிறார். இந்த 149 பாடல் மேற்கோள்களையும் இங்கே கொடுத்தால் இந்தக் கட்டுரை புத்தக அளவுக்குப் பெருத்துவிடும். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில எடுத்துக் காட்டுகள்:

 

புமியதனில் ப்ரபுவான

புகலியில்வித் தகர்போல

அமிர்தகவித் தொடைபாட

அடிமைதனக் கருள்வாயே;

சமரிலெதிர்த் தசுர்மாளத்

தனியயில்விட் டருள்வோனே

நமசிவயப் பொருளானே

ரசதகிரிப் பெருமானே

 

சம்பந்தரைப் புகலி (சீர்காழி) வித்தகர் என்று புகழ்ந்து அவரது பாடல்களை அமிர்தம் போன்றவை என்றும் போற்றுகிறார்.

பொதுவாக அவர் நால்வரின் தெய்வத் தமிழ் பாடல்களை “ஆரண கீத கவிதை, உபநிடத மதுர கவிதை, ஞானத் தமிழ் நூல்தாளக் கவிதை, பக்திமிக இனிய பாடல்” எனப் பாராட்டுகிறார்.

ஞான சம்பந்தருடன் வாதம் செய்து தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏறிய மதுரை சம்பவத்தைப் பல பாடல்களில் குறிப்பிடுகிறர். எப்போதெல்லாம் சம்பந்தரைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் தமிழைப் புகழ்வதையும் காண்கிறோம். அன்று ஞான சம்பந்தர் இல்லாவிடில் தமிழே அழிந்திருக்கும் என்பது அருணகிரியின் கணிப்பு.

 

செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானமூறு

செங்கனி வாயிலோர் சொல் அருள்வாயே

பஞ்சவனீடு கூனுமொன்றிடு தாபமோடு

பஞ்சவறாதுகூறு சமண்மூகர்

பண்பறுபீலியோடு வெங்கழுவேற வோது

பண்டித ஞான நீறு தருவோனே

 

இன்னொரு பாடலில்

அழுதுலகை வாழ்வித்த கவுணியகுலாதித்த

அரிய கதிகாமத்தில் உரிய அபிராமனே—என்பார்.

சம்பந்தரின் ஊராகிய சீர்காழியில் பாடிய திருப்புகழ்களில் மறவாமல் அவரைப் பாடுகிறார்.

சேனக்குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து

சேனைச் சமணோர் கழுவின் கண்மிசையேறத்

தீரத் திருநீறு புரிந்து மீனக்கொடியோன் உடல் துன்று

தீமைப் பிணி தீர உவந்த குருநாதா

என்று அற்புதமாகப் பாடுகிறார்.

 

அதே சீர்காழியில் பாடிய வேறு ஒரு பாடலில்

சமயமும் ஒன்றிலை என்ற வரும்பறி

தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்

என்று தமிழையும் ஞான சம்பந்தரையும் ஒருங்கே புகழ்கிறார்.

 

ஒரு பாடலில் பாண்டிய மன்னனை தெற்கு நரபதி என்றும் சம்பந்தரை கவுணியர் பெருமான் என்றும் துதிக்கிறார்:

 

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி  திருநீறிடவே

புக்க அனல்வய மிகஏடுயவே உமையாள்தன்

புத்ரனென இசைபகர் நூல் மறநூ

கற்றதவமுனி பிரமாபுரம்வாழ்

பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவானே.

 

சம்பந்தரை முருகப் பெருமானின் அவதாரம் என்று போற்றுவது சைவ மரபு. அதை இந்தப் பாடல் உறுதிசெய்துவிட்டது.

சம்பந்தப் பெருமான் ஞானப் பாலருந்தியதையும் பாட மறக்கவில்லை:

உமைமுலைத் தருபாற்கொடு

உரிய மெய்த் தவமாக்கி நலுபதேசத்

தமிழ்தனை கரைகாட்டிய திறலோனே

சமணரைக் கழுவில் ஏற்றிய பெருமாளே— என்பர்.

ஞானசம்பந்தரைப் பர சமயக் கோளரி என்றும் போற்றிப்பரவுகிறார். இருபது பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சம்பந்தரையும் அவர்தம் லீலைகளையும் துதிபாடுவதால் அருணகிரியை சம்பந்தரின் அடிமை என்பதில் தவறு ஒன்றுமிலை.

 

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் வாழ்க! புகலி வித்தகன் புகழ் பாடிய அருணகிரி வாழ்க!! தெய்வத் தமிழ் வாழ்க!!!

 

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

3.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: