அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

Photos from Face Book; Thanks.

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -8

அருணகிரிநாதரின் சொற்சிலம்பம்

திருப்புகழ் என்பது இறைவனின் புகழ் பாடும் துதிப் பாடல்கள்தான். ஆயினும் அதில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. பல இடங்களில் அருணகிரிநாதர் சொற் சிலம்பம் ஆடுகிறார். முருகனை மறந்து விட்டு தமிழின் அழகை ரசிக்கத் துவங்கிவிடுகிறோம். ஏனெனில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் துவங்கி பாரதி வரை வந்த அடியார்கள் அனைவரும் தமிழையும் தெய்வத்தையும் ஒன்றாகவே கண்டார்கள். இதோ சில எடுத்துக் காட்டுகள்:

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே

மதித்த முத்தமிழில் பெரியோனே

என்ற வரியிலிருந்து இது தெளிவாகிறது.

 

காமாரி, தீயாடி, ஆசாரி

விராலிமலை பாடலில் காமாரி, தீயாடி, ஆசாரி என்று சிவ பெருமானைப் பாடுகிறார். ஏதோ திட்டுவது போல இருக்கும்.

கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி

கயிலையாளி காபாலி            கழியோனி

கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி

கணமொடாடி காயோகி           சிவயோகி

என்று பாடுகிறார். இதன் பொருள்: யானைத் தோலை உரித்து அணிந்தவர், காமனையும் திரிபுரங்களையும் எரித்தவர், சுடலையில் ஆடுபவர், கயிலை மலையை ஆளுபவர், கபாலத்தைக் கையில் ஏந்தியவர், மூங்கில் கழியின் கீழ் பிறந்தவர்,  கையில் தீயை ஏந்தி ஆடும் ஆசார்யர் (குரு), பரசு எனும் ஆயுதத்தை உடையவர், நள்ளிரவில் ஆடுபவர், பூத கணங்களுடன் ஆடுபவர், காப்பாற்றும் யோகி, சிவயோகி என்று சிவ பெருமானைப் புகழ்கிறார்.

சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா

திருக்கழுக்குன்ற திருப்புகழில் தனா தனா, பளீர் பளீர், கலீர் கலீர், குகூ குகூ, சலா சலா, சிலீர் சிலீர், அளா அளா, சுமா சுமா, எழா எழா, குகா குகா, செவேல் செவேல் என்று ஓசை நயத்துடனும் பொருள் நயத்துடனும் பாடி இருக்கிறார். இதோ சில வரிகள் மட்டும்:

ஓலமிட்ட சுரும்பு தனாதனாவென

வேசிரத்தில் விழுங்கை பளீர் பளீரென

வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென             விரக லீலை

ஓர் மிடற்றில் எழும் புள் குகூ குகூவென…………..

 

பழமுதிர்ச் சோலையில் பாடிய சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என

என்ற பாடலும் இதே பாணியில் அமைந்துள்ளது. ஓசை நயத்துடன் அத் திருப்புகழைப் பாடுகையில் நம்மை அறியாமலே உற்சாஅகம் கொப்பளிக்கும்.

 

தகப்பன் சாமி, நடிக்கும் சாமி, ஒழிக்கும் சாமி, பொறுக்கும் சாமி

சிவ பெருமானுக்கே ஓம்காரப் பொருளை உரைத்தவன் ஆதலால் முருகனை தகப்பன் சுவாமி என்பர். ஆனால் அருணகிரி சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு எப்படிச் சிலம்பம் ஆடுகிறார் என்று பாருங்கள்:

புவிக்குன் பாத—— என்று துவங்கும் பாடலில் சாமி என்ற சொல்லை வைத்துக் கொண்டு சாமி ஆடி விடுகிறார்!!

சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்குஞ் சாமி எமதுளம்

சிறக்குஞ் சாமி சொருப மீது ஒளி காணச்

செழிக்குஞ் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவமதை

தெறிக்குஞ் சாமி முனிவர்களிடம் மேவும்

தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடிநிலை

தறிக்கும் சாமி அசுரர்கள் பொடியாகச்

சதைக்கும் சாமி எமை பணிவிதிக்கும் சாமி சரவண

தகப்பன் சாமி எனவரு பெருமாளே

சாமியையே கிண்டல் செய்வது போல சொற் பிரயோகம் இருந்தாலும் ஒவ்வொரு சொல்லும் ஆழந்த பொருள் உடையது.

எண் ஜாலம்

எண்களை வைத்துக் கொண்டு ஜால வித்தை காட்டும் திருப்புகழ் இதோ:

சுருதி மறைகள் இருநாலு திசையில் அதிபர் முனிவோர்கள்

துகளில் இருடி எழுபேர்கள்             சுடர் மூவர்

சொலவில் முடிவில்  முகியாத பகுதி புருடர் நவநாதர்

தொலைவிலுடு வினுலகோர்கள் மறையோர்கள்;

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சத கோடி

அரியும் அயனும் ஒருகோடி            இவர்கூடி

அறிய  அறிய அறியாத அடிகளறிய  அடியேனும்

அறிவு ளறியு மறிவூர அருள்வாயே

 

2,4,7,3,9 என்று சொல்லிவிட்டு கோடி, சத கோடி என்று அடுக்கியதோடு அறிய என்ற சொலை வைத்தும் சிலம்பம் ஆடுகிறார்! விஷ்ணுவும் பிரம்மனும் அறிய முயன்றும் அறியாத உன்னை எனது அறிவுக்குள் அறியும் அளவுக்கு அறிவு ஊர அருளவேண்டும் என்பது இதன் பொருள்.

 

அணிகலம் எது?

ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை

மாலுக்கு அணிகலம் தண் அம் துழாய், மயில் ஏறும் ஐயன்

காலுக்கு அணிகலம்  வானோர் முடியும் கடம்பும் கையில்

வேலுக்கு அணிகலம்  வேலையும் சூரனும், மேருவுமே

பொருள்: ஆலமர்ச் செல்வன் சிவனுக்கு அணி மண்டைஓட்டு மாலை, திருமாலுக்கு அணி துளசி மாலை, மயில் ஏறும் முருகன் காலுக்கு, தேவர்களின் முடியும் கடம்பும் அணிகலம். கையில் உள்ள வேலுக்கு அணி அதன் மூலம் துணிக்கப்பட்ட சூரனும் மலையும் கடலும் ஆகும்.

 

காணி நிலம் வேண்டும் பராசக்தி…….

பாரதி பாடிய பாடலில் காணி நிலம், மாளிகை, கிணறு, 10, 12 தென்னை மரங்கள் நிலவொளி, குயில் ஓசை ஆகியவற்றைக் கேட்டுவிட்டு அமைதியை வேண்டுகிறார். அதற்கு முன்னரே அதே பாணியில் அருணகிரி பாடிவிட்டார். பாரதியே இதைப் படித்துதான் காணி நிலம் வேண்டும் பாட்டை எழுதினாரோ !

உடுக்கத் துகில் வேணும் நீள் பசி

அவிக்கக் கன பானம் வேணும் நல்

ஒளிக்குப் புனலாடை வேணும் மெய்யுறு நோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள்

இருக்கச் சிறு நாரி வேணும் ஓர் படுக்கத்

தனி வீடு வேணும்……………… என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

(நாரி=மனைவி)

 

உருகவில்லை, அறியவில்லை, விழையவில்லை

தீர்த்தமலையில் பாடிய பாடலில் என்ன என்ன செய்யவில்லை என்பதைப் பட்டியல் போடுகிறார்:

பாட்டில் உருகிலை, கேட்டும் உருகிலை,

கூற்று வழி பார்த்தும் உருகிலை

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை       தினமானம்

பாப்பணியருள் வீட்டை விழைகிலை

நாக்கின் நுனி கொண்டு ஏத்த அறிகிலை என்று பாடுகிறார்.

 

முந்தைய ஏழு திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் கண்டு களிக்க.

swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: