5.ராமாயண வழிகாட்டி
அத்தியாயம் – 5 By ச.நாகராஜன்
உற்சாகமே உயிர்!
ராமாயணத்தில் அற்புதமான கதாபாத்திரமாக மிளிர்பவர் அனுமான்.
இறைபக்திக்கும், செயல் திறமைக்கும், மதியூகத்திற்கும், சீலத்திற்கும், அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கும் இன்ன பிற அனைத்து தெய்வீக குணங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் அனுமான். அவர் வாய் வழியே வரும் கருத்துக்கள் அனைத்துமே சிறப்பானவை.
சீதையைத் தேடச் சென்ற அனுமனின் வாயிலாக ஒரு அற்புதமான வாழ்வியல் கருத்தைச் சுந்தர காண்டத்தில் காண்கிறோம்.
இலங்கையில் சீதையை மாளிகைகளிலும் சித்திர வீடுகளிலும் பூங்கொடி வீடுகளிலும் காணாமல் அனுமான் மனம் கலங்குகிறார்.”ஆஹா, சீதையைக் காணவில்லை என்றால் அனைவரும் நிச்சயமாய் பட்டினி கிடந்து அல்லவா உயிர் துறப்பார்கள்” என்று அவர் வேதனைப் படுகிறார்.
ஆனால் நல்ல ஒரு செயல் வீரன் மனம் தளர்ந்தால், அவன் எப்படி வெற்றி பெற முடியும்? ஆகவே அவர் அற்புதமான இரண்டு ஸ்லோகங்களைக் கூறி தன்னைத் தானே ஊக்குவித்துக் கொள்கிறார்.
அனிர்வேத: ஸ்ரியோ மூல மனிர்வேத: பரம் ஸுகம் I
அனிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்த்தக: II
கரோதி ஸபலம் ஜந்தோ: கர்ம யத்தத் கரோதி ஸ: I
தஸ்மாதனிர்வேதக்ருதம் யத்னம் சேஷ்டேஹமுத்தமம் II
சுந்தரகாண்டம் பன்னிரண்டாவது ஸர்க்கம் 10,11 ஸ்லோகங்கள்
அனிர்வேத: – மனம் தளராமையே
ஸ்ரியோ – செல்வத்திற்குக்
மூலம் – காரணம்
அனிர்வேத: – மனம் தளராமையே
பரம் ஸுகம் – மேலான சுகம்
ஸததம் – எப்பொழுதும்
ஸர்வார்த்தேஷு – எல்லா விஷயங்களிலும்
ப்ரவர்த்தக: – முயலும்படி செய்வது
அனிர்வேத: ஹி – மனம் தளராமையே
ஜந்தோ: – மானிடரின்
கர்ம – காரியத்தை
ஸபலம் –பயனுடையதாக
யத் – எது
கரோதி – செய்கிறதோ
த த் – அதை
ஸ: – அது (மனம் தளராமை)
கரோதி – செய்கிறது
தஸ்மாத் – ஆகையால்
அஹம் – நான்
அனிர்வேதக்ருதம் – உற்சாகத்தினால் ஏற்பட்ட
உத்தம்ம் – உத்தம மான
யத்னம் – முயற்சியை
சேஷ்டே – மேற்கொள்கிறேன்.
அனிர்வேதம் என்ற சொல்லுக்கு உற்சாகம், மனம் தளராமை என்ற பொருள் உண்டு.அனுமான் உற்சாகம் மனிதனுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதைத் தனக்குத் தானே சொல்லி தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொள்கிறார். முயற்சியைத் தொடர்கிறார். வெற்றியும் பெறுகிறார்.
செல்வத்திற்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிக்கும் மூலம் உற்சாகமே என்ற அற்புத வெற்றி சூத்திரத்தை அனுமார் விளக்கும் இடமும் பொருத்தமாக அமைகிறது.
வால்மீகி இந்த காண்டத்தில் ஒரு அற்புதமான உண்மையைப் பொதிந்து வைத்திருக்கிறார்.
உற்சாகத்துடன் தேடும் பணியைத் தொடர்ந்த அனுமான் அதுவும் பயன்பெறாத நிலையில் பின்னர் இறைவன் அருளை வேண்டுவது தான் அது.
மனித யத்தனமும் இறை அருளும் இருந்தால் தான் ஒரு காரியம் வெற்றி பெறும் என்பதை சுந்தர காண்டம் சுட்டிக் காட்டுகிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற உன்னதமான சூத்திரத்தைச் சுட்டிக் காட்டும் சுந்தர காண்டத்திற்கு ஈடு இணை இல்லை!
(இந்தக் கட்டுரையைப் படித்தோர் ஆசிரியரின் வெற்றிக்கலை நூலில் உள்ள ‘உற்சாகமே உயிர்’ என்ற அத்தியாயத்தையும் அனுமானின் உற்சாகத்தையும் ராம பக்தியையும் விளக்கும் சுந்தரகாண்டம் பற்றிய கட்டுரையையும் படித்துப் பயன் பெறலாம்)
************