ராமன் சொன்ன புறாக் கதை

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 10 by ச.நாகராஜன்

 

சரணடைந்தோரைக் காக்கும் விரதம் கொண்ட அதிசய புருஷன் ராமன்!

 

ராமாயணத்தில் உயிர்நாடியாக விளங்கும் ஒரு ஸ்லோகம் யுத்தகாண்டத்தில் 18ஆம் ஸர்க்கத்தில் 33வது ஸ்லோகமாக அமைகிறது:

 

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே I

அபயம் சர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம II

 

ப்ரபன்னாய – கஷ்டமடைந்து

தவ அஸ்மி –“உனது பொருள் நான்”

இதி – என்று

யாசதே – வேண்டுகிறவனுக்கு

சர்வபூதேப்ய: ச – எல்லா பிராணிகளிடத்திருந்தும்

அபயம் – அபயத்தை

ததாமி –கொடுக்கிறேன்.

ஏதத் – இது

மம – எனது

வ்ரதம் – சங்கல்பம்

 

ராமர் கூறும் இந்த அற்புதமான உறுதி மொழி அனைவருக்கும் சந்திர சூரியன் உள்ளவரை பொருந்தக் கூடிய ஒன்று.

விபீஷணன் சரணாகதி அடையும் போது அவனைக் கொல்வதே உசிதம் என சுக்ரீவன் கருத்துத் தெரிவிக்கிறான். ஆனால் ராமரோ அதை மறுக்கிறார்.

 

 

ஸ்ரூயதே ஹி கபோதேன சத்ரு:சரணமாகத:

அர்சிதஸ்ச யதாந்யாயே ஸ்வைஸ்ச மாம்ஸை நிமந்த்ரித:

 

சத்ரு – எதிரி

சரணம் ஆகத: – சரணமடைந்தவனாகி

கபோதேன ஹி – ஒரு புறாவினாலேயே

யதாந்யாயே – சாஸ்திரவிதிப்படி

அர்ச்சித: ச- அர்ச்சிக்கப்பட்டவனாய்

சை:-தனது

மாம்ஸை ச- மாமிசங்களைக் கொண்டே

நிமந்த்ரித: – விருந்துண்ண வரிக்கப்பட்டான் என்று

ஸ்ரூயதே – வழங்கப்படுகிறது

 

அருமையான பழைய கதை ஒன்றை ராமர் இங்கு சுக்ரீவனிடம் நினைவு படுத்துகிறார். அவரே, “இப்படி ஒரு சம்பவம் வழங்கப்படுகிறது” என்றால் அது எவ்வளவு பழமை பொருந்தியதாகவும் அனைவருக்கும் ஊக்கம் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்!

 

ஒரு வேடன் வனமொன்றில் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் மழையுடன் கூடிய கடும் புயல் அடித்தது. அப்போது மழையால் மதி மயங்கிக் கிடந்த பெண் புறா ஒன்றைக் கையில் எடுத்துக் கூண்டில் அடைத்துக் கொண்டு குளிர்காயவும் பசி தீரவும் வழி தெரியாதவனாகி அருகில் இருந்த ஒரு மரத்தடியை அடைந்தான். அங்கு தன் பெண் துணையைக் காணாமல் வாடும் ஆண் புறாவைக் கண்டான். கூண்டில் இருந்த பெண்புறா தன் ஆண் துணையான ஆண் புறாவை நோக்கி,” இதோ பார், நான் சத்துரு வசப்பட்டேன். என்னைப் பற்றி வருந்தாதே. சத்துருவாக இருந்தாலும் குளிர் காயவும் உணவை வேண்டியும் நமது மரத்தடிக்கு இவன் அதிதியாக வந்திருக்கிறான். இவனை உபசரித்து நலம் அடைவாய்” என்று கூறியது. அதைக் கேட்ட ஆண் புறா விறகுச் சுள்ளிகளைச் சேகரித்து தீ மூட்டி  வேடனைக் குளிர் காய வைத்து உணவின் பொருட்டுத் தன் உடலையும் தீக்கு இரையாக்கியது.

 

இப்படிப்பட்ட அருமையான   தியாக சரிதத்தை எடுத்துக் கூறிய பின்னர் ராமர் கூறும் பொருள் பொதிந்த ஸ்லோகம் தான் “ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே”I

அபயம் சர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம II

 

என்னும் சரணாகதி அடைந்தோருக்கு அபயம் அளிப்பேன் என்னும் தன் விரதத்தைக் கூறும் ஸ்லோகம்.

 

இதே சரணாகதி தத்துவத்தைத் தான் கம்பன் தனது ராமாயணத்தின் முதல் செய்யுளாக அமைத்தான் என்பது நினைந்து நினைந்து இன்புறுதற்குரிய ஒன்றாகும்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

 

என்ற சரணாகதி தத்துவத்தை விளக்கும் செய்யுளே ராமாயணத்தின் முதல் செய்யுளாக அமைக்கப்பட்டுள்ளது!

 

உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து அதை நீக்கும் இடையறா விளையாட்டைக் கொண்ட அந்தத் தலைவனுக்கே நாங்கள் சரண் என்று கூறிப் பெரிய தத்துவத்தை நான்கே அடிகளில் தெளிவுபட விளக்கி விட்டான்  மஹாகவி  கம்பன்.

 

இதுவே தைத்திரீய உபநிடதத்தில் பிருகு மஹரிஷி தன் தந்தையும் குருவுமான வருணரிடம் சென்று “தலைவனை”ப் பற்றித் தெரிவிக்க வேண்டிய போது அவர் கூறிய கருத்தாக அமைகிறது. அதைக் கம்பன் இந்தச் செய்யுளில் அமைத்திருப்பதை ஒப்பு நோக்கி மகிழலாம்.

கீதையில் கண்ணன்,

 

“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச”:

 

என்று கூறும் சரணாகதித் தத்துவ ஸ்லோகமும் இங்கு நினைவு கூரத் தக்கது. (கீதை 18ஆம் அத்தியாயம் 66வது ஸ்லோகம்)

“அனைத்துத் தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரணாக அடை. நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே” என்ற கண்ணனின் வாக்கு முந்தைய அவதாரமான ராம அவதாரத்தில் அவன் செய்த பிரதிக்ஞை தான் என்பது தெளிவாக இங்கு விளங்குகிறது.

 

ராமாயணத்தின் முக்கிய தத்துவத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தை சுந்தர காண்டம் பாராயணத்தை அன்றாடம் செய்வோர் தினமும் கடைசியில் கூறி பாராயணத்தை முடிப்பது தொன்று தொட்டு இருந்து வரும் சம்பிரதாயமாக இருந்து வருகிறது.

 

ராமாயணம் காட்டும் ஒரே வழி சரணாகதி தான் என்பதை அறிவோம்; உய்வோம்!

**********************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: