அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை!

11.ராமாயண வழிகாட்டி

ச.நாகராஜன்

 

ராமன் சொன்ன புறாக் கதையை முந்திய பகுதியில் படித்தீர்கள். இப்போது சீதை சொன்ன கரடி கதையைப் பார்ப்போம்.

 

அனுமனிடம் சீதை சொன்ன கரடி கதை! 

ராவண வதம் முடிந்தது. ராமரின் கட்டளைப்படி விபீஷணருக்கு கலச நீரால் அபிஷேகம் செய்து  இலங்கையின் மன்னனாக லக்ஷ்மணர் பட்டாபிஷேகம் செய்தார். அதன் பின்னர் ராமர் அனுமனை அழைத்து சீதா தேவியிடம் தனது க்ஷேமத்தைத் தெரிவித்து ராவணன் கொல்லப்பட்டதையும் தெரிவிக்க கட்டளை இடுகிறார்.சீதையிடம் வந்த அனுமன் ராமரின் க்ஷேமத்தைத் தெரிவித்து விட்டு  ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறான்.

“நீங்கள் உத்தரவு அளித்தால் உங்களை மிரட்டிய இந்த அரக்கிகள் அனைவரையும் இப்போதே கொல்ல விரும்புகிறேன்.இந்த வரத்தை அருளுங்கள் (ஏதத் வரம் ப்ரபச்ச என்பது வால்மீகியின் வாக்கு)” என்று பணிவாக அனுமன் இந்த வரத்தைக் கேட்க, சீதையோ, “விதிப்பயனாய் என்னால் இது  இப்படி அனுபவிக்க வேண்டியதாகி விட்டது என்று நிச்சயிக்கிறேன். இந்த விஷயத்தில் ராவணனின் வேலைக்காரிகளை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகிறார்.

 

விதியின் வெல்ல முடியாத போக்கும், மன்னிப்பு என்ற மாபெரும் தெய்வீக குணத்தை சீதாதேவி கொண்டிருப்பதையும் இந்த இடம் அருமையாக விளக்குகிறது.

“வானர சிரேஷ்டரே! ராவணனின் கட்டளைக்கு இணங்க இந்த அரக்கிகள் என்னை மிரட்டினார்கள். அவனே இப்போது இறந்து விட்டான். ஆகவே இனி மிரட்ட மாட்டார்கள்.

புராதனமானதும் அறநெறி வழுவாததுமான இந்த ஸ்லோகமானது ஒரு புலியிடம் கரடி ஒன்றினால் சொல்லப்பட்ட்து. அதை என்னிடம் கேட்பீராக!” என்று கூறும் சீதை அதைக் கூறுகிறார்:

ந பர: பாபமாதத்தே பரேஷாம் பாபகர்மணாம்

சமயோ ரக்ஷிதவ்யஸ்து சந்தஸ்சாரித்ர பூஷணா: 

பர: – ஒரு நற்புருஷன்

பாப கர்மணாம் – பாவத்தைப் புரியும்

பரேஷாம் – மற்றவர்க:ளுக்கு (அதாவது தீயவருக்கும்)

பாபம் – பாவத்தை (தீங்கை)

ஆதத்தே ந – புரிவதில்லை

சமய: து – நன்னெறியே தான்

ரக்ஷிதவ்ய: -பாதுகாக்கத் தக்கது

சந்த: – நல்லோர்கள்
சாரித்ர பூஷணா: – நன்னடத்தையையே ஆபரணமாகக் கொண்டவர்கள்

 

தீங்கு செய்தோருக்குத் திரும்பி நல்லோர் தீங்கை இழைப்பதில்லை. நல்லோர்கள் நன்னடத்தையையே ஆபரணமாகக் கொண்டவர்கள். அவர்கள் நன்னெறியையே பாதுகாப்பார்கள்.

சந்த: சாரித்ர பூஷணா: என்ற வால்மீகியின் வாக்கை நினைத்து நினைத்து மகிழலாம்.

பழம் பெரும் கதையான புலிக் கதையை சீதை கூறுவதிலிருந்தே அது எத்துணை பழமையானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.சரி, கரடியின் கதை என்ன?

முன்னொரு காலத்தில் புலி ஒன்று வேடன் ஒருவனைத் துரத்தியது. புலிக்கு அஞ்சி ஓடி வந்தவன் அருகிலிருந்த மரம் ஒன்றின் மீது ஏறினான். அந்த மரத்திலோ ஒரு கரடி இருந்தது! பயந்து போன வேடன் அந்த கரடியிடம் சரணாகதி அடைந்தான். அப்போது மரத்தின் கீழே இருந்த புலி, கரடியிடம் வேடனைக் கீழே தள்ளுமாறு கூறியது. ஆனால் கரடி திடமாக அதை மறுத்து விட்டது. பின்னர் கரடி உறங்க ஆரம்பித்தது. அப்போது வேடனை நோக்கிய புலி,” இப்போது கரடியைக் கீழே தள்ளி விடு. உன்னை விட்டு விடுகிறேன்” என்றது. அதற்கு இணங்கிய வேடன் உறங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். ஆனால் முழித்துக் கொண்ட கரடி கீழே விழும் போதே ஒரு மரக்கிளையைப் பற்றிக் கொண்டது, இப்போது புலி கரடியிடம், “ உன்னைத் தள்ளிய வேடனை நீ கீழே தள்ளி விடு” என்றது. அதற்குக் கரடி,” தஞ்சமுற்றவனுக்கு எவ்வாற்றானும் தீங்கு புரிய மாட்டேன்” என்று உறுதியாகக் கூறி மேலே கண்ட ஸ்லோகத்தைக் கூறியது.

ஆகவே கரடி சொன்ன இந்த ஸ்லோகம் காலம் காலமாக வழி வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

 

சரணமடைந்தவனை எப்பாடு பட்டேனும் காப்பேன் என்ற அருமையான தத்துவம் பாரதத்தின் பாரம்பரியமான தத்துவங்களுள் ஒன்று என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!

இந்த சரணாகதி தத்துவத்தின் படியே விபீஷணனை ராமன் அங்கீகரித்து ஏற்றான் என்பதையும் ராமாயணம் சரணாகதி காவ்யம் என்பதையும் எண்ணிப் பார்த்து மகிழலாம்.

***************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: