சம்ஸ்கிருதச் செல்வம்- Part 13
வீணான அக்ஷரமோ வேரோ கிடையாது! வீணான மனிதனும் இல்லை!
ச.நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தர் இந்திய சமூகத்தைப் பற்றி அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த மாபெரும் மகான். இந்தியரைப் பொருத்த மட்டில் ஒரு பெரும் பிழை இருக்கிறது என்பது அவரது கணிப்பு.
“ஒரு நிரந்தர அமைப்புக்கு கட்டுப்பட்டு இருக்க முடியாது; எதையும் ஒழுங்காக திட்டமிட்டு ஒழுங்காக அமைத்தல் இந்தியருக்குக் கூடி வராத ஒன்று.” என்பது அவரது கணிப்பு.
முதலில் ‘ஆர்கனைஸ்’ (organize) என்ற சொல்லை இந்தியர் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவரது அன்புரை! யார் யாருக்கு எது எது முடியும் என்பதை உணர்ந்து அவரவர் பணியை மேற்கொண்டு பணிகளைப் பிரித்துக் கொள்ளல் வேண்டும் என்பது அவரது அறிவுரை.
அவரது ஆங்கில உரையை அப்படியே காணலாம்:
“We Indians suffer from a great defect, viz. we cannot make a permanent organization: and the reason is that we never like to share power with others and never think of what will come after we are gone.
If one man dies, another – why another only, ten if necessary – should be ready to take it up. Secondly if a man’s interest in the thing is not roused he will not work whole-heartedly; all should be made to understand that every one has a share in the work and property; and a voice in the management. Give a responsible position to everyone alternatively, but keep a watchful eye so that you can control when necessary, thus only men be trained for the work. Set up such a machine as will go on automatically, no matter who dies or lives.
Skillful management lies in giving everyman, work after his own heart.”
இதையே பண்டைய நாட்களிலேயே எழுந்த அற்புதமான ஒரு ஸ்லோகம் விளக்குகிறது:-
நாக்ஷரம் மந்த்ரஹிதம் ந மூலம்நௌஷதிம்
அயோக்ய புருஷம் நாஸ்தி யோஜகஸ்த்த்ர துர்லப:
நாக்ஷரம் மந்த்ரஹிதம் – மந்திரத்தில் பயன்படுத்த முடியாத எந்த எழுத்தும் இல்லை (There is no letter that cannot be used as a mantra)
ந மூலம்நௌஷதிம் – மருந்தாகப் பயன்படுத்த முடியாத எந்த வேரும் இல்லை (There is no root without some medicinal Value)
அயோக்ய புருஷம் நாஸ்தி – எந்த மனிதனும் உபயோகமற்றவன் என்று ஒதுக்கக் கூடியவன் அல்ல (There is no person who is absolutely useless)
யோஜகஸ்த்த்ர துர்லப: – யோஜகன் – ஒருவரது தகுதியைக் கண்டுபிடித்து அதை சரியான விதத்தில் பயன்படுத்தக் கூடிய திட்டமிடுபவனே அரிதாக இருக்கிறான் (A yojaka i.e. a person who can identify their utility and put them to proper use is, however, always rare.)
உரிய இடத்தில் உரிய விதத்தில் பயன்படுத்தப்பட்டால் அனைத்து எழுத்துக்களும் மந்திர எழுத்துக்களே; அதே போல மஹிமையை உணர்ந்து உரிய விதத்தில் பயன்படுத்தினால் அனைத்து வேர்களும் ஔஷத மூலிகைகளே; எந்த மனிதனும் உபயோகமற்றவன், எதற்கும் லாயக்கற்றவன் என்பதில்லை. உரிய விதத்தில் பயன்படுத்தப்பட்டால் ஒவ்வொருவனும் பெரிய காரியத்தை அவனளவில் சாதிக்க வல்லவனே! யாருக்கு என்ன தகுதி என்பதை உணர்ந்து திட்டமிடும் யோஜகன் தான் உண்மையில் அரிதானவன் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.
இந்திய சரித்திரத்தில் ஆயிரக் கணக்கானோரை இந்த ஸ்லோகத்திற்கு உதாரணமாக்க் கூறலாம். சத்ரபதி சிவாஜி பெரிய மொகலாய படை வைத்திருந்த ஔரங்கசீப்பையே திணற அடித்து தோற்கடித்தார். அவரிடம் இருந்த படை தளகர்த்தர்கள், படை வீர்ர்களை அவரவர்கேற்ற தகுதிப்படி அவர் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். சிறந்த யோஜகராக சிவாஜி திகழ்ந்ததை வரலாறு கூறுகிறது.
இதே போல ஒவ்வொருவரும் யோஜகனாகத் திகழ வேண்டும் என்பதை அற்புதமான இந்த ஸ்லோகம் கூறுகிறது!
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்” (குறள் 517)
************
Contact:- swami_48@yahoo.com