21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாக்ஷி கோவிலில் பல புரியாத புதிர்கள் உள்ளன. திருக்கல்யாண மஹாலில் இருக்கும் பூகோள ,ககோள வட்டங்கள், வெள்ளியம்பலத்தில் வலது காலை தூக்கி ஆடும் நடராஜர், முக்குறுணி விநாயகர் ஆகியன அவற்றில் சில. 55 ஆண்டுகளாக நான் தரிசித்து வரும் முக்குறுணி விநாயகரை சென்ற வாரம் இந்தியா சென்றிருந்த போது மீண்டும் தரிசித்தேன். அதே அழகு, அதே கம்பீரம்! கோவிலுக்கு வெளியே மதுரையே தலை கீழாக மாறிவிட்டது. ஆனால் எனது இஷ்ட தெய்வம் பிள்ளையார் மாறவில்லை.

இந்தப் பிள்ளையார் பற்றிய சுவையான விவரங்கள்:

இந்த கற்சிலை எட்டு அடி உயரம் உடையது. நாயக்க மன்னர்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்த திருமலை நாயக்கர் (1623- 1659), மதுரை நகருக்கு வெளியே வண்டியூரில் ஒரு குளத்தை அமைக்க திட்டமிட்டார். அதற்காக நிலத்தைத் தோண்டிய போது இந்த எட்டு அடி விநாயகர் சிலை பூமிக்கடியில் இருந்து கிடைத்தது. இது எப்படி அங்கே போனது? ஏதாவது பெரிய கோவில் அங்கே இருந்ததா? அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் தமிழ் நாட்டின் கோவில்களைச் சூறையாடி அழித்தபோது அங்கிருந்த கோவில் அழிந்ததா? என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்காமல் ஒரு புதிர் நீடிக்கிறது.

இந்த விநாயகர் திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில்களில் உள்ள பழமையான பாணியில் அமையவில்லை. ஆகவே பிற்காலத்தைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும். மதுரை மீனாக்ஷி கோவிலில் மட்டும் சுமார் 100 பிள்ளையார்கள் சிலைகள் இருக்கின்றன!

ராட்சத கொழுக்கட்டை (மோதகம்)

இதைப் பற்றிய இன்னொரு புதிர் 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக்கட்டையாகும். இதை பழைய அளவுகோலில் சொல்லவேண்டுமானால் முக்குறுணி என்று சொல்ல வேண்டும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம்.. பிள்ளையார் சதுர்த்தி நாளன்று இவ்வளவு பெரிய கொழுக்கட்டையை நெய்வேத்தியம் செய்வார்கள். அதை ஒட்டியே இவருக்கு முக்குறுணி விநாயகர்/ பிள்ளையார் என்ற பெயர் வந்தது. ஏன் முக்குறுணி என்பதற்கு சரியான விடை கிடைக்காமல் புதிர் நீடிக்கிறது. இந்தப் பிள்ளையாருக்கு முன் உள்ள விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்கள் இருக்கின்றன.

நான்கு கரங்களுடன் காணப்படும் இப்பிள்ளையாரை கோவிலில் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தவர் கந்தப் பொடி பெத்து செட்டி ஆவார்.

இன்னொரு அதிசயம் என்னவென்றால் தெற்குக் கோபுரத்துக்கு வெளியே தெற்குச் சித்திரை வீதி உள்ளது. அந்த ரோட்டிலிருந்து கொண்டே சைக்கிள் பஸ்களில் போவோர்கூட கோவிலுக்கு மிகவும் உள்ளே அமைந்திருக்கும் பிள்ளையாரைத் தரிசிக்கமுடியும். அப்படிப்பட்ட நேர்கோட்டில்  இதை அமைத்திருப்பது பழங்காலத் தமிழரின் கட்டிடக் கலைச் சிறப்புக்கு மற்றொரு எடுத்துக் காட்டு.

மீனாக்ஷி கோவிலின் ஏனைய அதிசயங்களை கீழ்கண்ட ஆங்கிலக் கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

1. The Wonder That is Madurai Meenakshi Temple

2. Musical Pillars in Hindu Temples

3. Acoustic Marvel of Madurai Temple

Previous Post
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: