பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

பட்டப்பகலில் விளக்குடன் போன தத்துவ ஞானி

கிரேக்க நாட்டில் டயோஜெனிஸ் என்ற ஒரு ஞானி இருந்தார். அவர் அலெக்ஸாண்டர் காலத்தில், 2350 ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்தவர். இப்பொது துருக்கியில் இருக்கும் சினோப் நகர் ஒரு காலத்தில் கிரேக்க காலனியாக இருந்தது. அங்கே பிறந்த டயோஜெனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகருக்குக் குடியேறினார். ஆண்டிஸ்தெனிஸ் என்ற குருவுடன் சேர்ந்து ‘’ஸினிக்’’ இயக்கத்தைத் துவக்கினார். ‘சினிக்’= எதிலும் குற்றம் காண்பவன், நன்மையில் நம்பிக்கையற்றவன்= என்ற ஆங்கிலச் சொல் இவர்கள் மூலம்தான் வந்தது.

 

இந்த ‘சினிக்’ இயக்கத்தினர் இந்திய யோகிகள், சித்தர்கள், ஆண்டிப் பண்டாரங்கள் போல வாழ்க்கை நடத்துபவர்கள். டயோஜெனிஸ் ஒரு பெரிய உடைந்த ஜாடியில், தெருவோரமாக வாழ்ந்தார். மாமன்னன் அலெக்ஸாண்டர் அவரைப் பார்க்க வந்தான். “ஐயா, பெரியவரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வேண்டும்?” என்று பணிவோடு கூறினான். டயோஜெனிஸோ, ‘சினிக்கல்’ ஆக பதில் தந்தார்.

 

“ஐயா, மாமன்னரே, சற்றே விலகும், சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் விலகிப் போங்கள்” என்றார் டயோஜெனிஸ்.

அவர் பகல் நேரத்தில் தெருக்களில் போகும் போது கையில் லாந்தர் விளக்கை எடுத்துச் செல்வாராம். ‘’ஐயா ,உங்களுக்கு என்ன பைத்தியமா? பகலில் விளக்கு எடுத்துச் செல்கிறீர்களே?’’, என்று நகைப்போரிடம், ‘’நான் நேர்மையான ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’’ என்பார்.

விளக்குடன் போன குருடர்

இன்னொரு வயதான ஞானி கண் பார்வையற்றவர். அவர் இருட்டு நேரத்தில் போகும் போது ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையில் விளக்கும் கொண்டு செல்வார். எல்லோருக்கும் ஒரே புதிராக இருக்கும். இதைப் பார்த்த ஒரு இளைஞனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘’ஐயா, என்ன உங்களுக்கு பைத்தியமா? கண்ணே தெரியாத உமக்கு விளக்கு ஒரு கேடா? ஒரு வேளை ஏதேனும் கொஞ்சம் தெரிந்துவிடும் என்ற நப்பாசையா?’’ என்றான்.

 

அந்தக் கிழவனார் அமைதியாக பதில் தந்தார், ‘’அன்பரே, எனக்கு கண் தெரியாது என்பது உண்மையே. உம்மைப் போன்ற பார்வையுடையவர்கள் என் மீது தடுக்கி விழக் கூடாது அல்லவா?’’ என்றார். தமிழ் நாட்டு மஹான் ஒருவர் இதே உதாரணத்தைப் பயன்படுத்தி வேறு ஒரு உண்மையை விளக்கினார். வேதங்கள், இந்து மத சடங்குகளுக்கு அர்த்தம் தெரியாவிடிலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்துவாருங்கள். நீங்கள் பொருள் அறியாத குருடர்களாக இருக்கலாம். எதிர் (காலத்தில்) வருவோருக்கு அது வெளிச்சம் போடும் என்று.

 

பட்ட கட்டையில் பகல் குருடு போகுது பார் !

தமிழ் நாட்டில் பல மறைஞான சம்பந்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் சிதம்பரத்தில் வாழ்ந்தார். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி போல கண்கட்டி வாழ்ந்தார். அவரது மடத்துக்கு ‘’கண்கட்டி மடம்’’ என்றே பெயர். நிறைய நூல்களை எழுதியவர். மெத்தப் படித்தவர். இருந்தும் மற்றவர்களின் தீய , நன்மையற்ற செயல்களைக் காணக்கூடாது என்று கருதியவர்.

மற்றொரு மறைஞான சம்பந்தரரின் சீடர் உமாபதி சிவாச்சார்யார்.சைவ சமய சந்தான குறவர் நால்வரில் ஒருவர். மாபெரும் அறிஞர். பல ஆதாரபூர்வ நூல்களை எழுதி சைவ சித்தாந்தத்தை நிலை நாட்டியவர். உமாபதி சிவம் , தினமும் கோவிலுக்குப் பல்லக்கில் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் பூஜையை முடித்துக்கொண்டு வருகையில், பிச்சைக்காரர் வடிவில் வந்த ஒரு ஞானி, உமாபதி சிவத்தின் பல்லக்கைப் பார்த்து, “பட்ட கட்டையில் பகல் குருடு ஏகுது பார்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் அவருக்கு ஞானம் உதித்தது. உடனே பல்லக்கில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அன்று முதல் கோவிலுக்கு வந்து போக அவர் பல்லாக்கைப் பயன்படுத்தவே இல்லை.

பட்ட கட்டை என்பது பல்லக்குக் கட்டையைக் குறிக்கும். பகல் குருடு என்பது படித்தும் பக்குவ ஞானம் பெறாத நிலையைக் குறிக்கும்.

ஆக, பகலில் வெளிச்சம் போட்டும், இருட்டில் வெளிச்சம் போட்டும் தத்துவப் பிரகாசத்தை உண்டாகியவர்களை உலகம் இன்றும் மறக்கவில்லை.

(தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டு கட்டுரையைப் பயன்படுத்துகையில் எழுதியோரின் பெயரையும் –லண்டன் சுவாமிநாதன்– பிளாக்–கின் பெயரையும் வெளியிடுவதுதான்)

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: