திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் !

crow

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

(Englsih version of this article is posted already)

வானத்தை அண்ணாந்து பார்த்தேன். வெள்ளை நிறக் கொக்கும் கறுப்பு நிறக் காகமும் பறந்து போயிற்று. அடடா! வெள்ளை நிறக் கொக்கு ஆரியப் பறவை என்றும், கறுப்பு நிறக் காகம் திராவிடப் பறவை என்றும் எந்த பி.எச்டி. காரனாவது, வெளிநாட்டினரின் ‘’ஜால்ரா’’வாவது எழுதி யிருப்பானோ என்று பயந்தேன். இதுவரை அப்படி எதையும் காணவில்லை!!!

 

எனது தந்தை தினமணி சந்தானம் 6000 புத்தகங்களை எங்களுக்கு விட்டுச் சென்றார். அவர் மதுரையில் மசூதிக்கும், சர்ச்சுகளுக்கும் போய் பார்த்ததுண்டு. அப்போதே வாங்கிவைத்த புனித பைபிளும் புனித குரானும் என்னிடம் உள்ளன. ஓரளவு படித்துள்ளேன். யூதமதத் தலைவர் மோஸஸ், கிறிஸ்தவ மதத் தலைவர் ஏசு, இஸ்லாமிய மதத் தலைவர் முகமது ஆகியோருடைய இனம், ஜாதி, மொழி பற்றி யாராவது எங்காவது சர்சையைக் கிளப்பி பி.எச்டி. வாங்கியிருக்கிறார்களா? அவர்களுடைய இனம் பற்றி ‘’ஆரிய, திராவிட’’ என்று எழுதி இருக்கிறார்களா என்றும் பார்த்தேன். அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை.

 

ஆனால் இந்து மதத்தையும் இந்தியாவையும் அழிக்க எண்ணிய வெள்ளைக்காரன் ( கொள்ளைக்காரன் என்றும் சொல்லலாம். என்னைப் போல லண்டனில் உள்ளவர்கள் அவன் கொள்ளை அடித்துவந்த பொருட்களை மியூசியங்களில் அடிக்கடி பார்க்கிறோம்) சிவபெருமான், முருகன், கிருஷ்ணன் ஆகியோரை ஆரியர், திராவிடர் என்று இனம் பிரித்து விஷத்தைச் சேர்த்திருப்பதை அறிந்தேன். அது சரி, இன்று இதை ஆதரிப்பவர்கள் யார் என்றும் பார்த்தேன். ஒன்று, அரசியல்வாதிகள் அல்லது ஜாதி,மதக் கட்சிக்காரகள் என்பதையும் கண்டேன். தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த விஷ சாம்பிராணிப் புகையைப் போட்டு மக்களை மயக்கம் அடையச் செய்வதையும் பார்த்தபின்னர் மேலும் மேலும் ஆரய்ச்சி செய்யத் துவங்கினேன்.

 

மோசஸும் ஜீசஸும் ‘’ஆரியர்’’களா?

மோசஸ், ஜீசஸ், முகமது (There was no Aryan or Dravidian division in the Middle East; but other races were there ) ஆகியோருக்கு இனச்சாயல் பூசாதவர்கள் இந்து மதக் கடவுள்களுக்கு மட்டும் ஏன் இனச் சாயல் பூசினார்கள்? கிருஷ்ணன் என்றால் தமிழில் கருப்பன் என்று அர்த்தம். அவனோ யாதவ இடைக் குலத்தோன். சனைச்வரன் கருப்பு, காளி கருப்பு, யமன் கருப்பு, ராமன் கருப்பு, விஷ்ணு கருப்பு. இத்தனை கருப்பன்களையும் நாடு முழுதுமுள்ள இந்துக்கள் வணங்குகிறார்களே என்று எண்ணிப் பார்த்தேன். இது வெள்ளைக்காரர்களுக்கும் தெரியும். உடனே, கூடக்கொஞ்சம் விஷத்தைக் கலந்தார்கள். இது எல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட கலப்பு, ஆரிய ருத்ரன் , சிந்து சமவெளிக் கருப்பு சிவனுடன் கலந்துவிட்டான், ஆரிய ஸ்கந்தன், தமிழ் நாட்டு முருகனுடன் கலந்துவிட்டான், திராவிடக் கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்துவிட்டான் என்று புதுப்புது கதைகளை எழுதி இந்துக்களை மஹா குழப்பத்தில் ஆழ்த்தினார்கள்.

 

இதற்கெல்லாம் என்ன காரணம்? உலக மஹா இளிச்சவாயர்கள் இந்துக்கள் என்றும் வெளி நாட்டினருக்கு ஒத்துவூதும் எட்டப்பர்கள் தமிழினத்தில் அதிகம் என்றும் அவர்களுக்குத் தெரியும். வேறு மதங்களைப் பற்றி இப்படி ஆரய்ச்சி செய்து விஷம் கலக்க முடியவில்லை. விஷமம் செய்யவும் இயலவில்லை அவர்களுடைய மத வரலாறுகளில் நடந்த நிகழ்ச்சிகளை மறைத்துவிட்டு, ரிக் வேதத்தைப் பற்றி கன்னா பின்னா என்று விமரிசனம் செய்யத் துவங்கிவிட்டார்கள். எல்லாவற்றிலும் ஆரிய திராவிட வாதத்தைப் புகுத்தி பயங்கரமான குழப்பத்தை ஏற்படுத்தினர்.

crane

சிந்து சமவெளி நாகரீகத்தைத் தோண்டி ஆராய்ந்த மார்டிமர் வீலர் போன்றோர் சிவபெருமானைப் பற்றி பொய்யுரைகளை எழுதி திராவிட சிவன், ஆரிய சிவன் என்று பிரித்தனர். தமிழர்கள் ஆண்குறியை (லிங்க வடிவில்) வழிபடுபவர்கள் என்றனர். தேவாரம், திருவாசகம் படிப்போருக்கு இதெல்லாம் பயங்கர ‘ஜோக்’குகளாக இருக்கும். அதில் சிவனை சிவப்பு நிறத்தவன் என்று சொன்னதோடு நில்லாமல் ‘’ஆரியனே’’ என்று நூற்றுக் கணக்கான இடங்களில் கூவி அழைக்கின்றனர். ஒரு இடத்திலும் திராவிடனே என்று கூப்பிடவில்லை!! திராவிடர்களை மஹா கோழைகளாகச் சித்தரித்து தெற்கே ஓடிவந்தவர்கள் என்ற அவப் பெயரையும் ஏற்படுத்தினர் வீலர் போன்றோர்.

 

உண்மையில் தமிழர்களுக்கு சிந்து சமவெளி, பஞ்சாப் பற்றி பிரக்ஞையே இல்லை. 30,000 வரிகளில் சிந்து, பஞ்சாப் பற்றிச் சொல்லாமல் இமய மலையையும் கங்கையையும் மட்டுமே புனிதமானவை என்று புகழ்ந்திருக்கிறார்கள். ‘’சிந்து சமவெளியில் பேய் முத்திரை,’’ ‘’சிந்து சமவெளியில் புலிப் பெண்’’ முதலிய சிந்து சமவெளி பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்கவும். உங்கள் கண்கள் திறக்கும்.

 

வெள்ளைக்காரன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மதத்தைப் பரப்புவதற்காகவும் இப்படி ஒரு இழிசெயலைச் செய்தான் என்று பின்னர் புரிந்தது. இந்தியாவில் வெள்ளைக்காரன் ஆட்சி நீடிக்கவேண்டும் என்று ஆதரித்த ஜஸ்டீஸ் கட்சி, திராவிடக் கழகம் போன்றவை இந்துமதத்தை அழிக்க இந்த வாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. இவர்கள் மாற்றுமத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைப் பார்ப்போருக்கு நான் சொல்லுவது தெள்ளிதின் விளங்கும்.

 

‘’திராவிடர்கள் குட்டையனவர்கள், சப்பை மூக்குடையவர்கள், சுருட்டை முடியுடையவர்கள்; ஆரியர்கள் கூர்மையான மூக்கும் நெடிய உருவமும் வெள்ளைத் தோலும் உடையவர்கள்’’ என்று பள்ளிக்கூட பாடப் புத்தகத்திலேயே வெள்ளைக்காரன் எழுதி வைத்ததைப் படித்து, அப்படியே மனப்பாடம் செய்து, சரித்திரப் பரீட்சையில் எழுதி, முதல் மார்க் வாங்கினேன். மதுரை சேதுபதி உயர் நிலைப்பள்ளியில் சரித்திரப் பாடத்தில் நான் தான் முதல் மதிப்பெண்.

 

இது நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளாக சங்க இலக்கிய நூல்கள் எல்லாவற்றையும் தொல்காப்பியம் முழுவதையும் முப்பதாயிரம் வரிகளைப் பல முறை படித்துவிட்டேன். வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், உபநிஷத்துகள், மகாபாரதத்தின் ஒரு பகுதியான பகவத் கீதை, காளிதாசனின் ஏழு நூல்கள் எல்லாவற்றையும் படித்து விட்டேன். இந்த ஆரிய திராவிடக் கொள்கை பழந்தமிழிலும் இல்லை. சம்ஸ்கிருதத்திலும் இல்லை.

 

சங்கத்தமிழ் நூல்களில் ஆரிய என்ற சொல் ஏழு இடங்களில் வருகிறது. திராவிட என்ற சொல் இல்லை, இல்லவே இல்லை. பிற்காலத்தில் வந்த நூல்களில் திராவிட எண்ணும் சொல் ‘’தென் பகுதி’’, ‘’பிராமணர்கள்’’ என்ற பொருளிலேயே வந்தது. ஆரிய, திராவிட என்ற சொற்கள் இனப் பொருளைச் சுட்டவில்லை. (திராவிர்கள் யார்? என்ற எனது போன வாரக் கட்டுரையைப் படிக்கவும்)

 

மஹாத்மா காந்தி, ஹரிஜன தலைவர் அம்பேத்கர், சுவாமி விவேகநந்தா, காஞ்சிப் பெரியவர் போன்றோர் எதிர்த்தபோதும்,  ஆரிய திராவிட வாதத்தை வெளி நாட்டினரும் பி.எச்.டி. வாலாக்களும் உடும்புப்பிடியாகப் பிடிதிருக்கின்றனர். இந்த விஷத்தை, விஷமத்தை நீக்கிவிட்டு தமிழ் மொழி ,சம்ஸ்கிருத மொழி நூல்களைப் படித்தால் நாம்தான் உலகம் முழுதும் சென்று நாகரீகத்தை வழங்கினோம், நமக்கு யாரும் வந்து தரவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும். இதை இந்த பிளாக்குகளில் உள்ள 555 கட்டுரைகள் மூலம் அறியலாம்.

Contact swami_48@yahoo.com; pictures are taken from other sites;thanks.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: