Part 1
ச.நாகராஜன்
ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம் என்றார் மகாகவி பாரதியார்!முறைப்படுத்தப்பட்ட ஓசை அல்லது ஒலி இசையாக உருவெடுத்து மனித மனங்களிலிருந்து வெள்ளமென பிரவாகிக்கும் போதும் அவர்களின் இசைக் கருவிகள் மூலமாக அருவியெனப் பொழியும் போதும் எண்ணிலா விந்தைகள் நடக்கின்றன. உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் நோயற்ற வாழ்வு வாழ இசை உதவுகிறது என்பது அறிவியல் ஆராய்ச்சிகளின் சமீபத்திய முடிவு.
அறிவியல் ரீதியாக இதை அறிந்து கொள்ள மூளை மின்னலைகளைப் பற்றி முதலில் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும் பகுதி மூளையின் மேல்பகுதியில் அமைந்திருக்கும் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்கு. (இதைத் தமிழில் மூளை மேலுறை என்று சொல்லலாம்.) இதில் கோடிக்கணக்கில் நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் (ஒரு கடுகின் அளவில்) சுமார் பத்து லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானு கோடி நியூரான்கள் மூளை இணைப்பில் உள்ளன என்று ஊகித்துப் பிரமிக்கலாம். இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. மற்ற மூளைப் பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்புத் தூண்டுதலினால் மின் செயல் பாட்டை ஓயாமல் இவை தூக்கத்தில் கூட அனுப்புகின்றன; பெறுகின்றன. இந்த மூளைச் செயல்பாடு நின்று விட்டால் அதையே உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மரணம் என்கிறோம்.
புலன்கள் அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை எலக்ட்ரோ என்செபலோகிராம் அல்லது ஈஈஜி என்கிறோம். ஒரு ஈஈஜி எலக்ட்ரோடை மண்டையில் இணைத்து விட்டால் போதும், அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும். ஈஈஜி, சீரான இடைவெளியில் வருகின்ற ரிதம்களை ஆல்பா, பீட்டா டெல்டா மற்றும் தீட்டா என நான்கு வகைகளாகப் பதிவு செய்கிறது.இவற்றை ப்ரீக்வென்ஸி (அலைவரிசை அல்லது அலைவெண்) என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.
மண்டையோட்டுடன் இணைக்கப்படும் எலக்ட்ரோரோடுகள் ஆம்ப்ளிட்யூடை மைக்ரோவோல்ட் அளவால் தெரிவிக்கும். ஒரு மைக்ரோ வோல்ட் என்பது பத்து லட்சம் வோல்ட்டின் ஒரு பகுதி!
இதைக் கீழ்க்கண்ட விளக்க அட்டவணை மூலமாகச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
ரிதம் ப்ரீக்வென்ஸி ஆம்ப்ளிட்யூட்
(ஹெர்ட்ஸில்) மைக்ரோவோல்ட்டில்
ஆல்பா 8-13 20-200
பீட்டா 13-30 5-10
டெல்டா 1-5 20-200
தீட்டா 4-8 10
நமது மூளை மேலே காணப்படும் நான்கில் ஏதேனும் ஒன்றில் உள்ள பிரக்ஞை நிலையையே எப்போதும் கொண்டுள்ளது.
பீட்டா நிலை: விழித்து இருக்கும் போது உள்ள நிலை இது. கண்கள் திறந்திருக்கும். முற்றிலுமான விழிப்புணர்ச்சி இருக்கும். இந்த நிலையில் மேல் அளவை ஒருவர் தொடும் போது அதிக சிந்தனை வயப்பட்டு கவலையுடன் இருக்கிறார் என்று சொல்லி விடலாம்!
ஆல்பா நிலை: இது மனம் ஓய்வாக அமைதியாக இருக்கும் நிலை. மனதில் இருக்கும் டென்ஷனை மட்டும் ஒருவர் அகற்ற முடியுமானால் ஒரே நிமிடத்தில் கண்களை மூடிய நிலையில் இந்த நிலையை எய்தி விடலாம்..ஆல்பா நிலையில் இருக்கும் போது படைப்பாற்றல் திறன் எனப்படும் கிரியேடிவிடி அதிகரிப்பதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.ஆகவே தான் பல விளம்பரங்கள் உங்களை “ஆல்பா” நிலைக்கு அழைத்துச் செல்வதாகத் தம்பட்டம் அடிக்கின்றன. பகல் கனவு காணுவோரும் இந்த நிலையில் தான் இருப்பர்.
தியானத்தின் பலனாக ஆல்பா நிலையை அடைய முடியும் என அறிவியல் பூர்வமாக அறியப்பட்டு விட்டதால் தான் மேலை நாடுகள் அனைத்தும் யோகாவையும் தியானத்தையும் தங்கள் அன்றாட வாழ்வில் இப்போது கொண்டு வந்து விட்டன.
தீட்டா நிலை: இது தூக்கத்தின் முதல் படி என்பதால் தூக்க உணர்வு இதனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆகவே தூங்குவோரை தீட்டா நிலையில் உள்ளதாகச் சொல்லி விடலாம். குழந்தைகள் பகல் கனவு காண்பதும் தீட்டா நிலையில் தான்!
டெல்டா நிலை: ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஒருவரின் நிலை டெல்டா நிலை. யோகிகள் மட்டும் விழித்திருக்கும் போதே தங்கள் பழக்கத்தினால் இதே நிலையில் இருப்பதும் உண்டு!
இசை மனிதனுக்கு மனச் சாந்தியைத் தந்து அவனை அமைதிப்படுத்துகிறது என்பதை பல நூற்றாண்டுகளாகவே அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் சில குறிப்பிட்ட இசைத் துணுக்குகள் மூலமாக ஆல்பா நிலையை ஒருவர் உடனடியாக அடைய முடியும் என்பதை நவீன அறிவியல் சோதனைகள் நிரூபித்து வருகின்றன. பிரக்ஞை நிலையில் ஆல்பா நிலையை அடைந்து ஒரு ஆழ்ந்த லயத்துடன் மன சாந்தியை சுகமாகப் பெற விரும்புவோர் தங்களுக்கு உரிய ஆல்பா இசையைக் கேட்டு மகிழ்ந்து பயன் பெறலாம்.
கர்நாடக சங்கீதம் போன்ற கிளாஸிகல் இசை, மெல்லிசைப் பாடல்கள் ஆன்ம நிலையை உயர்த்தும் மத சம்பந்தமான ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள் என எதை வேண்டுமானாலும் எது உங்களுக்கு மன அமைதியைத் தருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கேட்கலாம் என்கிறது அறிவியல்.
ஆனால் இசையின் இந்த வலிமையை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் இதற்கெனவே இசைப் பாடல்களையும் இசைக் கருவிகளின் விசேஷ ஒலியையும் கொண்ட ப்ரெய்ன் வேவ் என்டர்டெய்ன்மெண்ட் எனப்படும் மூளை மின்னலைப் பொழுது போக்கு இசையை உலகெங்கும் அறிமுகப்படுத்தி வருகின்றன.நூற்றுக்கணக்கில் இந்த இசைப் பாடல்கள் சந்தையில் வந்து குவிந்து விட்டன!
இதை டவுன் லோடிங் எனப்படும் தரவிறக்கம் மூலமாக உங்கள் கணினியில் ஏற்றிக் கொள்ளலாம். சி டி எனப்படும் குறுந்தகடில் பதிவு செய்து கேட்கலாம்.
இசையின் வலிமையையும் பலன்களையும் அற்புதமாக விவரித்து ‘தி டாவோ ஆஃப் ம்யூசிக்’ என்னும் புத்தகத்தை ஜான் எம் ஆர்டிஸ் என்பவர் எழுதியுள்ளார்.
This article was written by my brother Santanam Nagarajan for Bakya Tamil Magazine.
************************
You must be logged in to post a comment.