இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1

tamil kili

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியையும், அறிவு முதிர்ச்சியையும் அந்த நாட்டின் பெண்களை வைத்து எளிதில் கண்டு பிடித்து விடலாம். பழங்கால இந்தியாவின் பெண்கள் உலகிலேயே மிகப்பெரிய அறிவாளிகள். வேத காலத்தில் மட்டும் 27 பெண் கவிஞர்களும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னால் சங்கத் தமிழில் 27 க்கும் மேலான பெண் கவிஞர்களும் இருந்தனர். இதை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. கிரேக்கம், சீனம், ஹீப்ரூ, லத்தீன் மொழிகளில் இப்படிப்பட்ட பெண் கவிஞர்கள் இல்லை. ஒன்றிரண்டு பெயருக்கு இருக்கிறார்கள். அவர்களும்  காலத்தால் பிற்பட்டவர்கள்.

 

1.கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற கவிஞர் எழுதிய ‘இலியட்’டும் ‘ஆடிசி’யும்தான் முதல் நூல்கள். இதே காலத்தியது பிருஹத் ஆரண்யக உபநிஷத் (கி.மு.எட்டாம் நூற்றாண்டு). இதில் வரும் கார்க்கி வாசக்னவி என்ற பெண்தான் உலகின் முதல் தத்துவ ஞானி.. ஜனகன் என்ற மன்னன் உலக தத்துவ அறிஞர் மகாநாட்டைக் கூட்டினான். அதற்கு ஏராளமான தத்துவ வித்தகர்கள் நாடு முழுவதில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜனகன் ஒரு சில கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு விடை கூறுவோர்,  மாட்டின் கொம்பின் கட்டப்பட்டுள்ள ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தான். எல்லோருக்கும் பயங்கர ஆசை. ஆனால் மிகப்பெரிய அறிவாளி யாக்ஞவல்கியர் தானே அறிவாளி என்று சொல்லி சிஷ்யர்களைப் பர்த்து பொற்காசுகளுடம் மாடுகளை ஓட்டிச் சொல்ல உத்தரவிட்டார்.

 

சபையில் ஒரே மௌனம். திடீரென்று ஒரு பெண் குரல், ‘’நிறுத்துங்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்’’ என்று தடுத்தாள், கேள்விக் கணைகளைத் தொடுத்தாள். யாக்ஞவல்கியரின் ஆசையைக் கெடுத்தாள். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அப்போதே ஒரு பெண் ‘அசெம்பிளி’க்கு (அறிஞர் குழாம்) வர முடிந்தது. கண்ணகி, திரவுபதி போல சபையில் கேள்வி கேட்கவும் முடிந்தது. உலகில் இந்தப் பெண்மணிக்கு ஈடு இணையானவர் இன்றுவரை இல்லை.

 

2.இதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தமிழ் நாட்டில் வாழ்ந்த அவ்வையாரும் இது போல மன்னர்களைக் கேள்வி கேட்கவும், தட்டிக்கழிக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார்.. மாபெரும் சக்திவாய்ந்த சோழ, சேர ,பாண்டிய மன்னர்கள் மூவரும் அதிசயமாக, ஒற்றுமையாக, ஒரு சேர இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு பெரு மகிழ்ச்சி. ராஜசூய யக்ஞம் செய்த பெருநற்கிள்ளியின் அவையில் இந்தக் காட்சியைக் கண்டார். பேரானந்ததம் கொண்டார். அதே அவ்வையார் இன்னொரு மன்னரின் அவைக்குப் போனபோது, ‘’அடே மன்னா! உன்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் பளபள என்று இருக்கின்றன. நீ சண்டை போடப் போகிறாயே அந்த மன்னனுடைய வாள், ஈட்டி முதலியன பழையதாக கூர் மழுங்கி இருக்கின்றன’’ என்றார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவனுக்கு அறிவுரை வழங்கினார். உனக்கோ போர் என்றால் என்ன என்றே தெரியாது, அனுபவம் இல்லாத பேர்வழி. அவனோ பல போர்க்களங்களைக் கண்டவன், ஜாக்கிரதை!!! என்று சொல்லாமல் சொன்னார்.

tamil aru

3.ஆதிகாலத்தில் வேதம் படிக்க பிராமணச் சிறுவர்கள் போனவுடன், குரு முதலில் கேட்கும் கேள்வி, உன் குலம் என்ன, கோத்திரம் என்ன? என்பதாகும். இப்போதும் கேட்கிறோம். வேறுவிதத்தில்; நர்சரி பள்ளிக்குப் போனவுடன், மனுவை நிரப்புவதும், நன்கொடை, கல்விக் கட்டணம் கட்டுவதும்தான் முதல் வேலை. பல பள்ளிக்கூடங்களில் தந்தை தாயாருக்கும் இன் டர்வியூ—எங்கள் லண்டனைப் போல!! வேத காலத்தில் ஒரு பையனுக்கு அப்பா யார் என்று தெரியாது. அவன் அம்மா அஞ்சவில்லை. பிள்ளைக்குப் படிக்க ஆசை இருக்கிறது. போனால் என்ன என்று அனுப்பிவிட்டாள்.

 

ஆசார்யர் ( ஆசிரியர்) கேட்ட முதல் கேள்வி, ‘’டேய், பையா, உன் குலம் என்ன கோத்திரம் என்ன, சொல்லு?

பையன் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ‘’சார், அப்பா பெயர் எல்லாம் தெரியாது. அம்மா பெயர் ஜாபாலா. அதை மட்டும்தான் அம்மா சொல்லச் சொன்னாள்.’’

‘’அடடா! என்ன தைரியமாக உண்மை பேசுகிறாய். வேதம் படிப்பவனுக்கு சத்தியமே அடைக்கலம். இன்று முதல் நீ என் மாணவன். உன் பெயர் சத்யகாம ஜாபாலா’’ (உண்மை விரும்பி=சத்யகாமன்) என்றார் குரு. இதுவும் உபநிஷத்தில் உள்ள கதை. ஜாபாலாவின் அறிவுக்கும் துணிவுக்கும் நிகரான ஒரு பெண் எந்த நாட்டு இலக்கியத்திலும் இல்லை.

3.திரவுபதியின் புடவையை உருவி அவளை அவமானப்படுத்த துரியோதனன் தம்பி துச்சாதனன் இழுத்து வந்தபோது அந்த சபையில் அவள் எழுப்பிய கேள்விகளும் சட்டப் பிரச்சினைகளும் உலகில் எந்த நாட்டுப் பார்லிமெண்டிலும் நடந்தது இல்லை. அப்படிப்பட்ட மஹா அறிவு, மஹா துணிச்சல்.

 

கண்ணகியும் மிக சக்தி வாய்ந்த பாண்டிய மன்னனைப் பார்த்து, ‘’தேரா மன்னா, செப்புவதுடையேல்’’ என்று விளிக்கிறாள். ‘’டேய், முட்டாள்’’ என்று சொல்லுவதற்குச் சமம் இது. பின்னர் தனது குலம் கோத்திரம் முதலியவற்றை உத்தரகுருவை ஆண்ட சிபியின் காலத்தில் இருந்து அக்கு வேறு ஆணி வேராகப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டு, பிள்ளையார் கோவிலில் சதிர்த் தேங்காய் உடைப்பதைப் போல சிலம்பை மன்னன் முன்னால் போட்டு உடைக்கிறாள். உண்மை ‘’முத்து முத்தாக’’ வந்தது! இப்படி இந்தக் காலத்தில் செய்தால், முதல்வரோ, பிரதமரோ அவருடைய குண்டர்களோ (*ஸாரி, தொண்டர்கள்) என்ன செய்வார்கள் என்று சொல்லத் தேவை இல்லை.

 

4.உலகின் முதல் இலக்கண ஆசிரியன் பாணினி. அவன் சம்ஸ்கிருதத்துக்கு எழுதிய பாணீணீயத்தைக் கண்டு கம்ப்யூட்டர் உலகமே வியக்கிறது. அப்படிப்பட்ட பாணிணி 2700 ஆண்டுகளுக்கு முன் பெண் ஆசிரியைகள் இருந்ததை நமக்குத் தெரிவிக்கிறான்.

 

5.வேதகால, சங்க கால பெண் புலவர்கள் சாமி, மன்னன் என்று மட்டும் அலையவில்லை. எல்லாப் பொருள் குறித்தும் பாடினர். சீதை, தமயந்தி, நளாயினி, அகல்யை, மண்டோதரி, திரவுபதி ஆகியோரின் வாழ்க்கைச் சரிதம் படிப்பவர்களுக்கு அவர்களின் அறிவின் வீச்சு தெரியும்.

tamil penkal

இரண்டாம் பகுதியில் வேத கால ,சங்க கால பெண் புலவர் பட்டியலுடன் பெண்கள் குறித்து மனு கொடுக்கும் எச்சரிக்கையும் வரும். படிக்கத் தவறாதீர்கள்—- தொடரும்…….

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from World Tamil Conference Souvenir,thanks.Contact swami_48@yahoo.com

 

Leave a comment

1 Comment

  1. Saroja

     /  August 8, 2013

    Thank you for this we have to learn from them lot thank you once again

    Sent from my iPod

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: