இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2

026maruthi

 

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

(முதல் பகுதியைப் படித்துவிட்டு இப்பகுதியைப் படிக்க வேண்டுகிறேன்)

 

பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை

உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காஉ என்று எச்சரிக்கிறார்.

 

‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)

 

‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)

 

‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே  அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)

 

‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)

‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)

 

மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).

 

சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!

014maruthi

அருந்ததி காட்டல்

ஆரிய திராவிட இனவெறியர்களுக்கு செமையடி கொடுக்கும் சான்றுகள் சங்க இலக்கியத்தில் ஆயிரம் ஆயிரம் உண்டு. அதில் ‘’அருந்ததி காட்டல்’’ என்னும் சடங்கு மிக முக்கியமானது. அருந்ததி கீழ் ஜாதிப் பெண். ஆனால் பத்தினிப் பெண்களுக்கு உலக மஹா உதாரணமாகத் திகழும் உத்தமி. புது மணத் தம்பதிகள் முதல் இரவுக்கு முன் இந்த மஹா உத்தமியை நட்சத்திர வடிவில் தரிசித்துவிட்டுத் தான் படுக்கை அறையில் நுழையவேண்டும். இவளுடைய புகழ், சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது: புறம்.122; ஐங்குறு.442; பதிற்று.31-27; பெரும்பாண் 30;கலி.2-21;சிலப்.1-27

 

இமயம் முதல் குமரி வரை பின்பற்றப்பட்ட இவ்வழக்கை மனுவும் மறைமுகமாகக் குறிப்பிடுவார்: ‘’கீழ் ஜாதியில் பிறந்து வசிஷ்ட முனியுடன் சேர்ந்த அக்ஷமாலாவும்(அருந்ததி), மந்தபாலாவுடன் சேர்ந்த சாரங்கியும் மதிக்கப்படவேண்டியவர்கள்’’ (4-23)

 

சீதையின் மகத்தான சக்தி (சீதாதேவி சொன்னாள்; கண்ணகி செய்து காட்டினாள்)

‘’ அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் (கம்ப ராமாயணத்தில் சீதை)

 

 

பொருள்:- ஈரேழு (14) உலகங்களையும் என் சொல்லினால் (சாபத்தால்) சுடும் சக்தி எனக்கு உண்டு. என் கணவன் வில் ஆற்றலுக்கு பெருமை சேர்ப்பதற்காக காத்திருக்கிறேன். அவன் ஆற்றலுக்கு இழுக்கு வரக்கூடாது-

 

(தாயே என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தில் ராம பிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று சொன்ன அனுமனிடம் சீதை கூறியது இது)

032maruthi

இதோ வேத கால, சங்க கால புலவர் பட்டியல்:

வேத காலம்: அதிதி, அபலா, தக்ஷிணா, கோஷா, இந்திராணி, ஜுஹு, கத்ரு, லோபாமுத்திரை, ராத்ரி, ரோமச, சசி, சஸ்வதி, சிகண்டினி காஷ்யபி, ஸ்ரத்தா, சரமா,சிக்தா, சுதேவி, சூர்யா, சரஸ்வதி, உஷஸ், ஊர்வசி, விஸ்பலா, விஸ்ருஹா,விஸ்வவாரா, வாகம்பரிணி, வசுக்ரா மனைவி, வாக், யமி

சாம வேதம்: நோதா, அக்னிஷ்ட பாஷா, சிகந்தினி வாவரி, கன்பாயனா

 

சங்ககாலம்: (இந்தப் பெண் கவிஞர்களின் பெயர்கள் சில வியப்பான உண்மைகளைப் புலப்படுத்துகின்றன. பல ஆண் மற்றும் பெண் புலவர்களின் பெயர்களுக்கு முன்னால் ‘நல்’ என்ற விகுதி/முன்னொட்டு வருகிறது. இது சம்ஸ்கிருத மொழி வழக்கு. சு+கந்தி, சு+மதி, சு+வர்ணா, சு+சேதா என்பது போல நப்+பசலை, நச்+ செள்ளை என்று வருகிறது. இதே போல வெண் என்ற முன்னொட்டும் உண்டு. சிந்து சமவெளி எழுத்துக்கள் இப்படி வராது என்று சொன்ன அறிஞர்கள் இப்போதாவது தவற்றைத் திருத்திக் கொள்ளட்டும். ரிக்வேதத்தில் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர்கள் சொன்ன கருத்தை வைத்து செயற்கைப் பெயர்களை அளித்தார் வியாச மகரிஷி. இதே ‘டெக்னிக்’கை சங்க இலக்கியத்தைத் தொகுத்தோரும் பின்பற்றியுள்ளனர். பலருக்கு காரணப் பெயர்களைச் சூட்டியுள்ளனர். ஆகவே கீழ்கண்ட புலவர் பெயர்களில் சில செயற்கைப் பெயர்களாக இருக்கலாம்: எ.கா. காவற்பெண்டு, காக்கை பாடினியார்)

 

அவ்வையார், அஞ்சில்அஞ்சியார், ஆதிமந்தியார், ஊன் பித்தை, காவற்பெண்டு, காக்கை பாடினியார், கழார்க் கீரனெயிற்றியார், காமக்கணியார் (காமாக்ஷி), வெண்ணிக் குயத்தியார், வெள்ளிவீதியார், வெண்பூதியார், வெண்ணாகையார், வெள்ளெருக்கிலையார், வருமுலையாத்தி, நக்கணையார், நன்னாகையார், நல்வெள்ளையார், நப்பசலையார், நச்செள்ளையார், நன்முல்லையார், நெடும்பல்லியத்தை, பொன்மணியார், மாற்பித்தியார், பேய்மகள் இளவெயினி, மாசாத்தியார், குறமகள் குறியெயினி, பூங்கண் உத்திரையார், பெருங்கோப்பெண்டு.

 

(சிலர் தமிழன்பு காரணமாக இந்த எண்ணிக்கையைப் பெருக்கியும் காட்டுவர். சிறு ‘ஸ்பெல்லிங்’ மாறுதல் இருந்தாலும் அவரைத் தனிப் புலவராக காட்டுவோரும் உண்டு.)

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.).

 

படங்கள் ஆர்ட்டிஸ்ட்மாருதி. பிளாக்ஸ்பாட்.காம். இலிருந்து எடுக்கப்பட்டன.

Pictures are taken from artistmaruthi.blogspot.com; thanks.

swami_48@yahoo.com

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: