8.ஆலயத்தை விட்டு வெளியே போ!

ivory buddha2

ஜென் பிரிவு பற்றி எஸ்.நாகராஜன் எழுதும் தொடரில் எட்டாவது பகுதி.

ச.நாகராஜன்

குரு-சிஷ்ய பரம்பரையில் சோகோ கடைசியாக இருந்தார். முதல் குரு இமாகிடோ கோஸென் (1816-1892) அடுத்தது ஷாகு சோயென் (1859-1919), அடுத்து டெட்சுவோ சோகாட்ஸு.(870-1954), அடுத்து கோடோ ஜுய்கன் (1879-1965), அடுத்து ஒடா செஸொ (1901-1966) அவருக்கு அடுத்தபடியாக கடைசியில் சோகோ.

இந்த வரிசையை இன்னும் தொடர்ந்து வரலாற்று ரீதியாக பார்த்துக் கொண்டே போனால் அது முதலாவதாக இருந்த சாக்யமுனி புத்தரில் முடியும்.சாக்யமுனி புத்தரின் போதனைகளின் பெயர் இங்கா. அது பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானது. இந்த இங்கா முத்திரையை குருவிடம் முறையாகப் பெற்றவர்களே உள்ளொளி பெற்றதற்கான அங்கீகாரத்தை குருவிடம் பெற்றவர்களாவர். ஜென் பிரிவில் ரின்டாய் உட்பிரிவில் இப்படிப்பட்ட அதிகாரபூர்வமான குருமார்களை ரோஷி என்று அழைப்பர்.

முதல்குருவாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இமாகிடோ கோஸென் பிரம்மாண்டமான குரு. இவரது சிஷ்யராக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஷாகு சோயென் தான் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு ஜென் புத்தமதப் பிரிவை அறிமுகப்படுத்திய பெரிய மாஸ்டர்.

ஒரு நாள் காலை மிஸ் ஒகோமோடோ ரோஷியிடம் வந்து அமர்ந்தார். “ரோஷி! குருவில் யார் பெரியவர் கோஸெனா அல்லது அவர் சிஷ்யர் ஷாகு சோயெனா?” என்று அவர் கேட்டார்.எப்போதுமே விஷயங்களை ஜோக் அடிக்காமல் தீவிரமாகப் பேசும் ரோஷி, “கோஸென் தான் பெரியவர்” என்று பதிலிறுத்தார். பிறகு மிஸ் ஒகோமோடோ,” ஷாகு சோயென் பெரியவரா அல்லது அவர் சிஷ்யர் சோகாட்ஸுவா?” என்று கேட்டார்.

”மாஸ்டர் சோயென் தான் பெரியவர்!” என்றார் ரோஷி.இதைக் கேட்ட மிஸ் ஒகோமோடோ,” நீங்கள் சொல்வதைப் பார்த்தால் குரு-சிஷ்ய பரம்பரையில் ஒவ்வொரு சிஷ்யரும் சற்று கீழான தரத்தைக் கொண்டிருப்பது போல இருக்கிறதே! அப்படியானால் இந்த பரம்பரை கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து வருவது போல இருக்கிறதே!” என்றார்.

“சரி,இப்போது சொல்லுங்கள், உங்கள் குரு சோகாட்ஸு பெரியவரா அல்லது நீங்களா? என்று மெதுவாகக் கேட்டார் மிஸ் ஒகோமோடோ. மின்னல் போலப் பளீரென்று,” இருவரில் நான் தான் பெரியவன்” என்றார் ரோஷி. மிஸ் ஒகோமோடோவுக்கு இந்த பதிலைக் கேட்டு ஒரே சந்தோஷம்! உடனே மிஸ் ஒகோமோடோ மெதுவாக,” ரோஷி! இன்னும் ஒரு கேள்வி. நீங்கள் பெரியவரா அல்லது உங்களின் சிஷ்யரான செஸோ பெரியவரா?” என்று கேட்டார்.

அருகிலிருந்து இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சோகோவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.வாய்விட்டு ஹா,ஹா என்று சிரித்தார். ரோஷியோ ஜென் உலகின் முடி சூடா மன்னராக பிரம்மாண்டமான நிலையில் குருவாக இருக்கிறார். ஆனால் செஸோவோ எந்த ஒரு அதிகார பதவியிலும் இல்லை. அவரைப் பெரிய மாஸ்டரான ரோஷியுடன் ஒப்பிடுவதா! சோகோவுக்கு சிரிப்பு தான் வந்தது. உண்மையில் உள்ளொளியின் அடிப்படையில் மனிதனைத் தரம் பிரிக்க வேண்டும் என்றே சோகோவுக்குத் தெரியவில்லை. சமூக அந்தஸ்தை வைத்தே மனிதனின் அந்தஸ்தை இனம் காண வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆகவே தான் அந்தச் சிரிப்பு!

ஆனால் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், ”அது இன்னும் தெரியவில்லை!” என்று பதில்சொன்னார் ரோஷி! சோகோவின் சிரிப்பு இதைக் கேட்டுச் சட்டென அடங்கியது.அவர் கண்களில் வெள்ளமென கண்ணீர் பொங்கியது.எப்படிப்பட்ட அற்புதமான குருவைத் தான் கொண்டிருக்கிறோம்!” “அவன் இன்னும் பல பேர் மத்தியில் பேசவே அருகதை அற்றவன்” என்று அவர் சொல்வதற்கு எத்தனை விநாடிகள் வேண்டும்!

அந்த அற்புத மனிதர் தன் சிஷ்யர்களின் மேம்பாட்டிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்னும் ஒன்று,ஐந்து அல்லது பத்து வருடங்களில் தன் சிஷ்யன் தன்னை வென்று பெரியவனாகி விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே தான், ”அது இன்னும் தெரியவில்லை” என்ற பதிலை அவர் அளித்தார்! அப்படிப்பட்ட பெரிய மகான் சோகோவுக்கு குருவாக வாய்த்திருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ivory buddha

பயிற்சிக் காலத்தில் ஒரு சமயம் சோகோ தப்பு ஒன்றைச் செய்து விட்டார். உடனே ரோஷி சம்பிரதாய வழக்கப்படி சோகோவை டைஷுயின் ஆலயத்திலிருந்து உடனடியாக வெளியே செல்லுமாறு “ஆலயத்தை விட்டு வெளியே போ” என்ற கட்டளையைப் பிறப்பித்தார். மனம் வருந்திய சோகோ சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட போதும் அவர் மனம் இரங்கவில்லை. கெஞ்சிக் கெஞ்சி முழு உடலையும் கீழே கிடத்தி சோகோ நமஸ்காரம் செய்து மன்னிப்புக் கேட்ட போதும், ‘முடியாது’, என்ற பதிலையே ரோஷி சொல்லிக் கொண்டிருந்தார்.

கடைசியில் தன் தலையை மட்டும் தூக்கி அழுது வீங்கி இருந்த கண்களுடன் ரோஷியைப் பார்த்தார் சோகோ!
அவரது தீவிரமான பார்வையைக் கண்ட சோகோவுக்கு தொண்டை அடைந்த்தது.

இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த குரலை எழுப்பி,” என்ன நடந்தாலும் சரி,நீங்கள் என்ன சொன்னாலும் சரி,எப்படி என்னை வெளியேற்ற நீங்கள் முயன்றாலும் சரி, நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.போகவே மாட்டேன்.போகவே மாட்டேன்”என்றார் சோகோ.
அப்போது ரோஷியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி அவர் கன்னம் வழியே வழிந்தது. அதைப் பார்த்த சோகோவின் மெய் சிலிர்த்தது. சோகோ எப்பொழுதுமே ரோஷியின் சிஷ்யர் தான்! அவருக்கும் தன் சிஷ்யன் எப்படிப்பட்டவன் என்பது புரிந்துவிட்டது.

சோகோவுக்கும் ரோஷிக்கும் இருந்த குரு-சிஷ்ய அன்புப் பிணைப்பு வலுவாக இருந்தது. ஜென் பிரிவில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இருக்கும் அன்புப் பிணைப்பின் இடையில் ஒரு சிறு மயிரிழை கூட நுழைய முடியாது. அப்படி ஒரு பிணைப்பு இருக்கும்!!
முந்நூறு பவுண்டு உள்ள இரண்டு மல்யுத்த வீர்ர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டி உருண்டு புரண்டு அலாக்காகத் தூக்கி கீழே போடும் போது தாங்கள் சண்டையிடும் மல்யுத்த மேடை நிச்சயம் உடைந்து போகாது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தானே அவர்கள் சண்டை போடுகிறார்கள் அந்த அடிப்படையான நம்பிக்கை ஜென் பயிற்சிக்கு அவசியம்!

ஜென் பிரிவில் “நான்” என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.இந்த நான் என்ற எண்ணம் லேசில் அழியாது.’வெளியே போ’ என்ற அச்சுறுத்தல், திட்டல் இவற்றிற்கெல்லாம் பயந்தால் ஜென் பயிற்சி பூர்த்தி பெறாது!

ஒரு வருட காலம் ரோஷியின் கீழ் பயிற்சி பெற்ற சோகோவுக்கு ஒரு நாள் அந்தப் பயிற்சி முடிவுக்கு வந்தது.
ஒரு நாள் ரோஷி சோகோவை அன்புடன் தன் அருகில் அழைத்தார்.

சின்ன உண்மை
இன்று ஜப்பானில் ஜென் மடாலயங்கள் சுமார் 72 உள்ளன! சாதாரண சிறிய ஜென் ஆலயங்கள் சுமார் இருபதினாயிரம் உள்ளன. ஆனால் மடாலயங்களில் ஜென் குருமார்களுக்கான பயிற்சியில் இருப்போர் ஆயிரத்தை என்றுமே தாண்டியதில்லை!

-தொடரும்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: