பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்

sathya-sai-baba-laughingramana-maharshi

November 23rd is Sri Sathya Sai Baba’s Birth Day
(Post No 718 dated 21st November 2013)

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் வாழ்வும் பகவான் ரமணரின் வாக்கும் புகட்டும் அற்புத உண்மைகள்!
ச.நாகராஜன்

என் செயல்களைக் கூர்ந்து கவனியுங்கள்

“எனது வாழ்க்கையே என் செய்தி” (MY LIFE IS MY MESSAGE) என்று ஒரு முறை பக்தர்களுக்கு அருளுரையாக வழங்கிய ஸ்ரீ சத்ய சாயிபாபா தன் செயல்களைக் கூர்ந்து கவனிக்குமாறும் அதன்படியே நடக்குமாறும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இறைவனே மானிட உருவமாக அவதாரம் எடுத்துள்ளபோது அது தரும் செய்தி மகத்தான செய்தியாக அல்லவா அமைகிறது. தனது ஜீவிதத்தில் ஒவ்வொரு கணத்தையும் மனித குலப் படிப்பினைக்காக அர்ப்பணித்த அவதாரத்தின் முக்கிய செய்திகளில் ஒன்று தியாகம்!
‘சர்வ சங்க பரித்யாகினே நம:’ என்று அவரது அஷ்டோத்தரத்தில் நாம் அன்றாடம் கூறும் போது கோடானு கோடி பணத்தையும் அவர் நிர்மாணித்த அனைத்தையும் க்ஷண நேரத்தில் துறந்து ஏக வெளியுடன் இரண்டறக் கலந்த ஸ்வாமியின் பெரும் தியாகத்தை நினைத்து நம் மெய் சிலிர்க்கிறது.

சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி

அவர் வாழ்வில் ஏட்டின் ஒரு பக்கம் இதோ:
1979ஆம் ஆண்டு லெப்டினண்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று இரண்டு லட்சம் இந்தியப் படைவீர்ர்களுக்குத் தலைமை தாங்கும் பெரும் பொறுப்பைப் பெற்ற எம்.எல்.கிப்பர், பாபாவின் அணுக்கத் தொண்டர். 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சியை அவர் ‘த்ரூ தார்மிக் டைலம்மாஸ்’ என்ற தனது கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

சூபர் ஸ்பெஷாலிடி (Super Speciality Hospital) ஆஸ்பத்திரியின் கட்டுமான வேலைகள் இரவு பகலாக இடைவிடாது வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆஸ்பத்திரிக்குத் தேவையான மெஷின்களும் உபகரணங்களும் உலகெங்கிலும் இருந்து “பறந்து” வந்து கொண்டிருந்தன. ஆஸ்பத்திரி தரை பாலிஷ் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குறித்த காலத்தில் திறப்பு விழா நடைபெற வேண்டும் என்ற பரபரப்பு பிரசாந்தி நிலையத்தில் ஆரம்பித்து உலகெங்கும் பரவி இருந்தது.

இந்த பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி உலக அதிசயமாக ஐந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.இன்னும் பத்து நாட்களே இருந்தன திறப்பு விழாவிற்கு. அன்று காலை ஸ்வாமி இன்டர்வியூ அறையிலிருந்து வெளியே வந்து நேராக பல்கலைக்கழக மாணவர்களிடம் போனார். அவர் கையில் ஒரு கடிதம் இருந்தது. மாணவர்களிடம் அதைக் காட்டி ஸ்வாமி, இந்திய ஜனாதிபதி திரு ஆர்.வெங்கடராமன் ஐந்து மாதங்களில் இந்த ஆஸ்பத்திரி கட்டி முடித்திருப்பது ஒரு அற்புதம் என்று எழுதி இருப்பதாகக் கூறினார். இதுவே அரசினால் கட்டப்பட்டிருந்தால் ஐந்து வருடம் ஆகி இருக்கும். இதைச் சொல்லி விட்டு தனது இன்டர்வியூ அறைக்கு ஸ்வாமி மீண்டும் திரும்பினார்.

satya_sai_baba

செல்லும் வழியில் இருந்த கிப்பர், ஸ்வாமியிடம், “ மானேஜ்மெண்ட் மாணவர்களுக்கு ஐந்து மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட ஆஸ்பத்திரி அருமையான ஒரு கேஸ் ஸ்டடியாக அமையும்” என்று குறிப்பிட்டார். இதைக் கேட்டவாறே நடந்த ஸ்வாமி திரும்பினார். அவரைப் பார்த்தார். ஒரு சில வினாடிகள் கழிந்தன.பிறகு மேலே வானத்தில் அவர் கண்கள் பதிந்தன. ”இல்லை, எந்த மானேஜ்மெண்டிற்கும் வேண்டாம்” என்றவர் ஒரு ஸ்லோகத்தை உச்சரித்தார்.

“ந கர்மணா, ந ப்ரஜயா, தனேன
த்யாகேனைகே அம்ருதத்வமான்சு”

(கர்மத்தினால் அல்ல, ப்ரஜைகளால் அல்ல, பணத்தினால் அல்ல, தியாகத்தினால் மட்டுமே அம்ருதத்வம் அடையப்பட முடியும்)
இதைச் சொல்லி விட்டு மெல்ல அவர் நடக்கலானார்.

அற்புதமான பிரம்மாண்டமான ஒரு பெரும் காரியத்தைச் செய்து விட்டு அதைப் பற்றிச் சிறிதும் பெருமைப்படக்கூடாது என்பதோடு கர்மத்தையும் அதனால் வந்த பெருமையையும் கூட தியாகம் செய் என்ற தைத்திரீய உபநிஷத்தின் மந்திரத்தை உபதேசமாக தக்கதொரு தருணத்தில் அவர் அருளியது அனைவரையும் பிரமிக்க வைத்தது; நெகிழ வைத்தது. மனித குலத்திற்கு அவர் வாழ்க்கை தந்த செய்தி இதுவே!

201106_sai_baba

அவரது மறைவுக்குப் பின்னர் தனி அறையில் கட்டுக் கூடப் பிரிக்கப் படாமல் கிடந்த பெரும் பணக் கட்டுகள் கீதையில் கண்ணபிரான் கூறிய “பற்றில்லாத செயலை”ப் பறை சாற்றின!

ஆத்ம பிரதக்ஷிணமே உண்மை பிரதக்ஷிணம்

இதே போல பகவான் ரமணரும் தான் அடைந்த பெரும் ஞான நிலையைக் காட்டாது காண்போர்க்கும் பழகுவோருக்கும் எளியனாக இருந்தார். பெரும் ரகசியங்களை அனாயாசமாக போகிற போக்கில் சொல்லிச் சென்று விடுவார். பக்குவிகள் பக்கென்று அந்த உபதேசத்தைப் பற்றிக் கொள்வர். அவர் கூறியஒரே ஒரு பெரும் ரகசியத்தைப் பார்க்கலாம்:

1946ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி (இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இரவு 8.47க்கு வானில் ஜோதியாக ஐக்கியமானார் பகவான் என்பது நினைவு கூறத் தகுந்தது)
காலை எட்டு மணிக்கு அணுக்க பக்தை நாகம்மா, பகவான் அமர்ந்திருந்த ஹாலை இரண்டு முறை சுற்றி விட்டு பின் சந்நிதிக்கு வந்து பகவானுக்கு நமஸ்காரம் செய்தார். “ ஓ! நீ கூட சுற்ற ஆரம்பிச்சாச்சா. ஒருவர் சுற்றி விட்டால் எல்லோரும் அப்படிச் சுற்றுவது தான் முறையான செயல் என்று நினைத்துச் சுற்ற ஆரம்பிப்பார்கள்” என்ற பகவான் பெரும் ரகசியத்தை சில சொற்களாலேயே விளக்கி விட்டார்.

“உண்மையான பிரதக்ஷிணம் எது தெரியுமா? ஆன்மாவைச் சுற்றுவது தான். ஆத்ம பிரதக்ஷிணம் தான் உண்மையான பிரதக்ஷிணம். நாம் ஆன்மா. நமக்குள் எண்ணற்ற கோளங்கள் சுழல்கின்றன என்று உணர வேண்டும். ரிபு கீதையில் உள்ள பாடல் இதை வர்ணிக்கிறது.

பூரண ஆனந்த ஆன்மா அகம் என்று எண்ணல்
புகழ் புஷ்பாஞ்சலி ஆகும் அனந்த கோடி
காரியமாம் பிரமாண்டம் என்னிடத்தே
கற்பிதமாய் சுழலும் எனும் தியானம் தானே
நேரதுவாய் வலம் வரலாம் என்றுமென்னை
நிகிலருமே வந்திப்பார் நானெப்போதும்
யாரையுமே வந்திக்கேன் என்னும் தியானம்
ஆன்ம மகாலிங்கத்தின் வணங்கலாமே

standing ramana

(இதன் பொருள் : பூரண ஆனந்தமான ஆன்மாவே நான் என்று எண்ணுவது அனந்த கோடி புகழ் அஞ்சலிக்கும் புஷ்பாஞ்சலிக்கும் நிகராகும். என்னுள் அண்டங்கள் அனைத்தும் கற்பிதமாய்ச் சுழல்கின்றன என்னும் எண்ணமே உண்மையான வலம் வருதல் ஆகும். அகிலமும் தன்னை வணங்குமென்றும் தான் யாரையும் எப்போதும் வணங்கேனென்றும் உணருபவன் மகாலிங்கமான ஆன்மாவை வணங்குகிறான்).

பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்தும் சூக்ஷ்மாண்டத்தில் உண்டு அதாவது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்ற அற்புதமான பேருண்மையை அந்தக் கணத்தில் அங்கு குழுமி இருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

யோகவாசிஷ்டத்தில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஏராளமான உலகங்கள் இருக்கின்றன என்று உபதேசிக்கப்படுகிறது, விஞ்ஞானம் இதுவரை கண்டுபிடிக்காத மெய்ஞான உண்மையை பகவான் ரமணர் எளிதாக விளக்கி விட்டார். இப்படி அவர் விளக்கிய ரகசியங்கள் பற்பல!

மகான்களும் அவதாரங்களும் தங்கள் வாழ்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் வாக்கின் மூலமாகவும் பேருண்மைகளை விளக்குவர் என்பதற்கு நம் காலத்தில் வாழ்ந்த பகவான் பாபாவும் பகவான் ரமணருமே சிறந்த எடுத்துக்காட்டுகள் ஏப்ரல் மாதம் மஹா சமாதி அடைந்த இருவரையும் போற்றி வணங்கி அவர்கள் காட்டிய வழியில் நடப்போம்!

(பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் மஹா சமாதி தினம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியும் பகவான் ரமணரின் மஹா சமாதி தினம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியும் வந்ததை ஒட்டி ஞான ஆலயம் ஆன்மீக
மாத பத்திரிக்கை ஏப்ரல் 2013 இதழில் வெளியான கட்டுரை. Written by Santanam Nagarajan)

November 23rd is Baba’s Birth Day. contact swami_48@yahoo.com

****************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: