அரவிந்தர் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள்

sri-aurobindo

டிசம்பர் 5ஆம் தேதி அரவிந்தர் மஹாசமாதி தினம். அதையொட்டி அவரைப் போற்றும் அஞ்சலிக் கட்டுரை இது.

Post No 730 dated 4th December 2013

அரவிந்த யோகம் by ச.நாகராஜன்

வான் அரசாட்சி இம் மண்ணுலகத்திலே
வளர்ந்து செழித்திடவே
தேனருவி என மோனத்திலே நின்று
தெய்வக் கனல் பொழிந்தான்
மானவ ஜாதிக்கே அமர நிலை பெற
வாழும் வகையளித்தான்
போனது கலியுகம், பூத்தது புதுயுகம்
பூரணன் வாழியவே
வாழ்க அரவிந்தன் வாழ்க பராசக்தி
வல்லபன் வாழியவே!

-கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார்

வேத நெறி தழைக்க வந்த அவதாரம்

தேசீயம் தெய்வீகம் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதையே தன் வாழ்க்கையாக்கி மனித குலத்தை சனாதன தர்மம் தந்த வேத நெறியில் உயர்த்த அவதரித்தவரே மஹரிஷி அரவிந்தர்.

மஹாசக்தி வழி நடத்திய புருஷர்

ஒரு மாபெரும் சக்தி அவரை வாழ்க்கை முழுவதும் வழி நடத்தி வந்தது. அந்த வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களோ ஏராளம்!
1908ஆம் ஆண்டு மிர்ஜாபூரில் வெடித்த குண்டைத் தொடர்ந்து அரவிந்தர் அலிபூர் சிறையில் ஒன்பது அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார்.அங்கு அனைத்தையும் வாசுதேவனாகக் கண்டார். ‘சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்’ என்ற மகத்தான அநுபூதியைப் பெற்றார். ஒரு நாள் அவர் உடல் தரையிலிருந்து மேலே சிறிது எழும்பியது. அந்த நிலையில் கைகளையும் உயர்த்தினார். எப்படி முயன்றாலும் அடைய முடியாத ஒரு விசித்திரமான நிலையில் அவர் உடல் இருக்கவே, அதைப் பார்த்த சிறை வார்டர் அரவிந்தர் இறந்து விட்டதாக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்கள் ஓடோடி வந்து பார்த்த போது அரவிந்தர் இயல்பான நிலையில் இருந்து.
சிரித்தார். தன்னை இறந்ததாக அறிவித்தவனை முட்டாள் என்றார்!

இயல்பாகவே அரவிந்தருக்குத் தீர்க்கதரிசனக் காட்சிகள் தோன்றி வந்தன. அவரே கூறிய ஒரு சம்பவம் இது:- “ஒரு சமயம் சி.ஆர்.தாஸின் நண்பரான வ.ரா. (பிரபல தமிழ் எழுத்தாளராக பின்னால் புகழ் அடைந்தவர்) என்னைக் காண வருவதாக இருந்தது.அவரது தோற்றம் எப்படி இருக்கும் எனக் காண விரும்பினேன். நன்கு ஒட்ட வெட்டிய தலையோடு உரமான முரட்டு இயல்போடு கூடிய ஒருவரின் தோற்றத்தைக் கண்டேன். ஆனால் வ.ரா நேரில்வந்த போது சாந்த முகம் உள்ள தென்னிந்திய அந்தணருக்கே உரித்தான தோற்றத்துடன் விளங்கினார்! ஆனால் இரு வருடங்களுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்த போது நான் முதலில் எப்படிக் கண்டேனோ அப்படி அவர் மாறிவிட்டிருந்தார்.”

டீ அடிமையாக அவர் இருந்த போது தனது மைத்துனர் எப்போது டீ கொண்டு வருவார் என்று அவர் எண்ணிய சமயத்தில் எதிரே இருந்த சுவரில் டீ வரும் சரியான நேரம் எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் டீயும் வந்தது. “அன்று முதல் தினமும் டீ வரும் நேரம் சுவரில் எழுதப்படுவதைக் கண்டேன்” என்று அரவிந்தர் பின்னால் தன் அனுபவங்களைக் கூறினார்.

பாண்டிச்சேரி செல்!

சிறையில் அவருக்கு உள்ளிருந்து குரல் ஒன்று கிளம்பி அவர் செய்ய வேண்டியதைப் பணித்தது.அது எந்த காரணத்தையும் சொல்லாமல் இதைச் செய்; அதைச் செய் என்று மட்டும் பணித்தது. மற்றவர்கள் எல்லாம் அவரை பிரான்சுக்குச் செல்ல ஆலோசனை தந்த போது அவரது உள்ளார்ந்த குரலோ அவரை பாண்டிச்சேரி செல்லுமாறு கூறியது.31-3-1910 அன்று கல்கத்தாவிலிருந்து கப்பலில் கிளம்பிய அரவிந்தர் 4-4-1910 அன்று மூன்று மணிக்குப் புதுவை வந்து சேர்ந்தார். அங்கு மகத்தான யோக சாதனையைச் செய்தார். எதற்காக புதுவைக்குச் செல்லச் சொன்னதோ அந்த மஹாசக்தியின் விருப்பப்படி அரவிந்த ஆசிரமமும் உருவானது.

1926ஆம் தேதி நவம்பர் மாதம் 24ஆம் தேதி கிருஷ்ணர் பூவுலகில் அவரது உடலில் ஆவிர்பித்ததை அவர் அறிவித்தார். அது இன்றளவும் சித்தி தினமாக்க் கொண்டாடப்படுகிறது. சூபர்மைண்ட் எனப்படும் அதிமானுட மனமும் ஆனந்தமும் பெரும் பணியை நிறைவேற்ற வந்திருப்பதை அனைவரும் அறிந்து மகிழ்ந்த அன்றைய தினத்தில் அரவிந்தர் தனிமையை நாடித் தன் பெரும் பணியை மேற்கொண்டார். அதன் பின்னர் வருடத்திற்குச் சில குறிப்பிட்ட தினங்களே அவரை தரிசிக்கும் பாக்கியம் சாதகர்களுக்குக் கிடைத்தது.

Sri_aurobindo2

அன்னையின் பார்வை

புதுவை வந்த அன்னை ஆசிரமத்தின் பெரும் சக்தியாக மாறினார்.
அரவிந்த ஆசிரமம் நிறுவப்பட்டவுடன் அன்னை ஆசிரமத்தை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு சாதகர்களுக்கு உற்ற வழிகாட்டியாகவும் ஆனார். அன்னையின் பல்வேறு அபூர்வ சித்திகளையும் சக்திகளையும் அரவிந்தர் எளிதில் உணர்ந்து கொண்டார்.அன்னையின் பார்வை சகல வல்லமை படைத்தது என்பதை அரவிந்தர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
சாதாரணமாக உடல் அளவில் அன்னை பெற்றிருந்த சக்தியைக் கூட அவர் அறிந்து வைத்திருந்தார். ஒரு முறை அன்னையின் பார்வை ஆற்றலைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிட்டார்:-“சிறு வயதில் அன்னைக்கு இருளில் கூடப் பார்க்கும் சக்தி இருந்தது.எங்கும் பார்க்கும் ஆற்றலை அவர் வளர்த்துக் கொண்டார்.இப்போது கூட தனக்குப் பின்னால் உள்ள அனைத்தையும் அவரால் பார்க்க முடியும்.அவர் கண்களின் பார்வையை விட இந்தப் பார்வை இன்னும் துல்லியமாக இருக்கும். கண்களை மூடிக் கொண்டாலோ இது இன்னும் நன்கு வேலை செய்யும்.”

கூடவே வரும் துணை

அரவிந்தரின் யோகம் அவருக்காக மட்டும் செய்யப்படவில்லை. அவரே ஒரு முறை,” முக்தியையும் பரிபூரணத்வத்தையும் எனக்கு மட்டும் பெற எண்ணி இருந்தேனென்றால் எனது யோகம் நெடும் காலத்திற்கு முன்னரே முடிந்திருக்கும்.எனது சித்தியானது மற்றவர்கள் அதை அடைவதற்கு ஒரு முன்னோடி தான்.” என்று குறிப்பிட்டார்.ஆக சாதகர்களுக்கு அவர் எப்போதும் உற்ற துணையாக இருந்தார்; இருந்து வருகிறார்!

பிரபல எழுத்தாளரான பால் பிரண்டன் தன்னுடன் உற்ற துணையாக யாரோ கூட வருவது போன்றே உணர்ந்து வந்தார். அரவிந்தரின் போட்டோவைப் பார்த்த போது அது ‘கூட வரும் துணையைப்’ போல இருக்கவில்லை.ஆனால் அரவிந்தரை நேரில் தரிசித்த போது ‘கூட வரும் துணை’ அவரே என்பதை உணர்ந்து கொண்டார்.

நான் தருகிறேன் உத்தரவாதம்

பாரதம் சுதந்திரம் அடைவது பற்றிய பேச்சை சில சீடர்கள் எழுப்பிய போது அவர்களுள் ஒருவர் “அப்படி ஒரு சுதந்திரம் வர உத்தரவாதம் வேண்டுமே” என்றார். உடனே அரவிந்தர், “ அதற்கு நான் தருகிறேன் உத்தரவாதம்” என்று கூற அனைவரும் வியப்படைந்தனர். அவர் அளித்த உறுதியின் படியே பாரதம் சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் அவரது பிறந்த நாள். எனது பிறந்த நாள் பரிசாக இரண்டு பகுதிகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று அவர் பிரிவினை பற்றிக் கூறினார். ஆனால்,” பாரதப் பிரிவினை இயற்கையானதல்ல; அது போக வேண்டும். போய் விடும்” என்று தீர்க்கதரிசன வாக்கைக் கூறியுள்ளார்.

பாரத தேசம் மகோன்னதமான நிலையை எய்தும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள அரவிந்தர் அந்த உயரிய நிலை உலகம் முழுவதும் மேம்படுவதற்கான ஒரு ஆரம்பம் என்று அருளினார். அவரது அற்புதமான பூரண யோகம் இதை நோக்கமாகக் கொண்டே அனுஷ்டிக்கப்பட்டு பூரணாத்மாக்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பவானி பாரதி

பவானி பாரதி என்ற அற்புதமான சதகத்தை – நூறு பாடல்கள் கொண்ட சம்ஸ்கிருத நூலை அரவிந்தர் யாத்துள்ளார். உக்கிர மான காளியின் அற்புதவர்ணனைகளுடன் மயிர்க்கூச்சலெழுப்பும் சொற்களுடன் உள்ள ஸ்லோகங்களில் உத்திஷ்ட (எழுமின்)
ஜாக்ரத (விழிமின்) என்ற ஆவேசமூட்டும் சொற்களைக் காணலாம். அதில் இனி வேதகோஷம் முழங்கும் என்றும் துஷ்டன் அழிவான் என்றும் புகழோங்கிய நிலையை பாரதம் அடையும் என்றும் பாடியுள்ளார்.

அரவிந்தரின் பணி பாரதத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அதன் பண்டைய நாகரிகத்தை உணர்த்தி அதன் அடிப்படையில் புதிய யுகத்தை உலகத்தில் நிர்மாணிப்பதே!

அரவிந்த யோகம்

அரவிந்த யோகம் என்றால் என்ன என்பதை -கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார் அழகுற இப்படி விளக்குகிறார்:-
பக்தி யோகம், நிஷ்காம்ய கர்ம யோகம்,கடவுளைத் தியானத்தால் கலந்து நிற்கும் ஞான யோகம், எல்லோரையும் சமமாகக் காணும் சர்வாத்ம சித்தி எல்லாம் ஒருங்கே சேர்ந்தது ஶ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்.

அரவிந்த யோகம் உலகை உயர்த்துகிறது.அழகில் தெய்வத்தைக் காண்கிறது.அழகை ஆத்ம பரிபூரணத்திற்கு ஒரு வழியாக்குகிறது.வாழ்வைக் குறுக்கி ஒடுக்காமல் விரிந்து பொலியச் செய்கிறது.உலக வாழ்வையே தெய்வ சித்தி பெற ஓர் அகண்ட சமரஸ யோகமாக்குகிறது.

இதுகாறும் உலகில் பெரியார்கள் வகுத்த யோக சாதனங்களின் நன்மைகளை எல்லாம் தன்னகத்துக் கொண்டுள்ளது அரவிந்த யோகம்.அது ஒரு தோட்ட ரோஜாக்களை ஒரு சிறு அத்தர் புட்டியில் காண்பது போன்றது. அது மனிதனில் தெய்வத்தை விளக்குகிறது. வாழ்வை எல்லாம் யோகமாக்குகிறது.”

அரவிந்த யோகத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட சாதகர்கள் பெருமளவில் பெருகும் போது இந்தியா அமர நிலையை எய்தும் முறையை உலகிற்குக் கற்பிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

சின்ன உண்மை!
பவானி பாரதி மிகவும் சக்தி வாய்ந்த உக்ரமான சொற்களால் ஆன நூறு பாடல்களைக் கொண்ட நூல். மாதிரிக்கு ஒரு ஸ்லோகத்தின் அர்த்தம்:-
இதயத்திற்கு அம்ருதத்வத்தை வழங்கும் வேத கோஷ முழக்கத்தை மீண்டும் நான் வனங்களில் கேட்கிறேன். ஆன்ம ஞானத்தை அடைந்த, பெருக்கெடுத்தோடும் மனித குல வெள்ளமானது ரிஷிகளின் குடில்களை நோக்கிப் பாய்கிறது.
பவானி பாரதி 93 ஆம் ஸ்லோகம்
Contact swami_48@yahoo.com

*****************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: