இன்னொரு பிறவியும் வேண்டுவதே இந்தப் பூவுலகிலே!

baba stamps

ச.நாகராஜன்

இண்டியாவின் பாஸ்போர்ட்

அது 1969ஆம் ஆண்டு. “ஃப்ளவர் சைல்ட் ஜெனரேஷன்’ Flower Child Generation என்று அழைக்கப்பட்ட இளைஞர் குழுவினருள் பன்னிரெண்டு பேர் இறைவனைத் தேடி ஆன்மீக தாகம் கொண்டு அலைந்தனர். அவர்களுள் ஒருவரான ஹோவர்ட், பாபாவைக் காண புட்டபர்த்தி வந்தார். அவருடன் கூட வந்தவர் இண்டியா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்மணி. தூய்மையான மனம் படைத்த அவர் சேவை புரிவதிலேயே வாழ்க்கையைக் கழிப்பவர். அனைவருக்கும் சமைப்பது, மற்றவர்கள் ஆடைகளைச் சுத்தம் செய்வது, இருப்பிடத்தைப் பராமரிப்பது என்று சேவையிலேயே ஆனந்தமாக வாழ்க்கையைக் கழிக்கும் பண்பு அவரிடம் வேரூன்றி இருந்தது. குழுவில் இருந்த இன்னொருவர் ஜில். அமெரிக்கரான ஜில்லுக்கு எப்போதும் தியானம் செய்வதில் ஆனந்தம். கொசுவலையைக் கட்டிக் கொண்டு தனக்கென ஒரு குட்டி வீடாக தியான இடத்தைப் பாவித்து தியானம் செய்யும் அவரை யாரேனும் தொந்தரவு படுத்தி அழைத்தால் கொசு வலையிலிருந்து – தவறு, அவரது தியான கூடத்திலிருந்து வெகுண்டு வெளியே வருவார்.

பர்த்தியில் நாட்களைக் கழித்த அவர்களில் பலருக்கு விசா காலம் முடிந்து விட்டது.

ஒரு நாள் ஸ்வாமி அவர்கள் அனைவரையும் அழைத்தார் – யார் யாருக்கெல்லாம் விசா முடிந்து விட்டது என்று தெரிந்து கொள்ள! ஒன்பது பேர்கள் கையைத் தூக்கினர்- விசா இல்லை என்று அறிவித்து! இண்டியா கம்மிய குரலில், “ஸ்வாமி எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை” என்றார்.
ஸ்வாமி,” என்ன? பாஸ்போர்ட் இல்லையா? போலீஸ் வந்து உன்னை அரெஸ்ட் arrest செய்து விடும் தெரியுமா?”என்றார்.

“நான் உலகத்தைத் துறந்த அன்றே அதையும் துறந்து விட்டேன்!” என்றார் இண்டியா. வெகுளியான அந்தப் பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது! ஸ்வாமி புன்முறுவலுடன்.”பாஸ்போர்ட்டும் இல்லை, விசாவும் இல்லை! பைத்தியம் தான்! உடனே போய் அதற்கு ஏற்பாடு செய்!” என்றார்.

“நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று குழந்தைத்தனமாகக் கேட்டார் இண்டியா. ஸ்வாமி சிந்தனையில் ஆழ்ந்தார்.”உன்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்று போலீஸிடம் சொன்னால் அவர்கள் உன்னை அரெஸ்ட் செய்து விடுவார்கள்!” என்று ஸ்வாமி கூறியதைக் கேட்டதும் இண்டியா அழ ஆரம்பித்தார்.
“அழாதே! கவலைப்படாதே” என்றார் ஸ்வாமி தன் குழந்தைத்தனமான பக்தை அழ ஆரம்பிப்பதைப் பார்த்து.

“எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல். நான் தியானத்தில் இருந்தேன். என்ன நடந்த்தென்றே தெரியவில்லை என்று சொல்” இதைக் கூறி விட்டு ஸ்வாமி இண்டியா அனுப்புவதற்கான ஒரு கடிதத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜில்லுக்குக் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
postal-stamp-baba

ஸ்வாமி! நீங்கள் பொய் சொல்கிறீர்கள்

“ஸ்வாமி! அது பொய்! நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!! நீங்களே எப்படிப் பொய் சொல்ல்லாம்!!!
சத்திய சாயியாக அவதரித்து சத்தியத்தின் திருவுருவமாகத் திகழும் அவர் பொய் சொல்லலாமா! ஜில் அழ ஆரம்பித்தார். அழுதவாறே அவர் சொன்னார்:”ஸ்வாமி! இண்டியா ஒரு நாளும் தியானம் செய்ததில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!”
இதற்கு ஸ்வாமி அளித்த உடனடி பதில் மனித குலம் அனைத்திற்கும் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய பதில்!

பக்தர்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்

“இதோ பார்! உனக்கு பொறாமை வந்து விட்டது! இந்தப் பெண்ணைக் காப்பது எனது கடமை, நீ உன் கொசுவலைக்குள் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் தியானம் செய்கிறாய். பிறகு கொசுவலையிலிருந்து கோபத்துடன் வெளியே வருகிறாய். உனது வெடுவெடுப்பான மூஞ்சியைப் பார்த்து எங்கள் எல்லோருக்கும் களைத்துப் போய்விட்டது! நீ தியானம் செய்யும் போது இண்டியா சமைக்கிறாள். உணவின்றி உன்னால் தியானம் செய்ய முடியுமா? உயிருக்கு ஆதாரமே உணவு தான்! எப்போதுமே அவள் சாதனை செய்கிறாள் – சேவை செய்து கொண்டே! அவள் உணவை எல்லோருக்கும் தயாரிக்கிறாள் இது தியானத்தை விட முக்கியமானது. என்னைச் சரணடைந்தவர்கள் அனைவரையும் காக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது. இந்த அறையில் இருக்கும் மூன்று பேருக்கு மட்டும் தான் அவள் பாஸ்போர்ட்டை அவள் இழந்த போது அவளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். ஜில், இதை ஆராய்வது உங்கள் பிஸினஸ் இல்லை, சார்! அவள் தங்கமான மனம் படைத்தவள். அவளைக் காப்பது ஸ்வாமியின் கடமை! இது எனது தர்மம்! எனது கடமை! எனது பக்தர்களுக்காக என் அங்கங்களைத் தியாகம் செய்ய நான் தயார்! தேவையானால் என் கையைக் கூட வெட்டுவேன்,, எனது இரத்தத்தைக் கொடுப்பேன். ஏன், என் பக்தர்களுக்காக என் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பேன்!”

ஸ்வாமி பிரவாகமாகக் கொட்டிய பதிலுக்குப் பின்னர் அந்த அறையில் அமைதி நிலவியது. அனைவரும் பிரமித்து நின்றனர். ஜில் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

பக்தர்களுக்காக இறைவன் உருகி உயிரைக் கொடுக்கத் தயார் என்று அறிவித்த பிரகடனத்தை நேரில் கேட்ட அந்த மூவரும் எவ்வளவு பாக்கியசாலிகள்! ஹோவர்ட்டும், இண்டியாவும் மெய் சிலிர்த்து பகவானை வணங்கினர்.

ஒரு விஷயத்தையோ அல்லது ஒரு மனிதரையோ பற்றிய மனிதர்களின் மதிப்பீடு வேறு, இறைவனின் மதிப்பீடு வேறு என்பதை இந்தச் சம்பவம் அனைவருக்கும் உணர்த்தியது.

லெவின் ஹோவர்ட் எழுதிய ‘குட் சான்ஸ்ஸ்’ (Howard Levin, Good Chances) என்ற புத்தகத்தில் ஹோவர்ட் பதிவு செய்துள்ள இந்த சம்பவம் பகவானின் அவதார லீலைக் கடலில் ஒரு சிறிய துளி!

FDC baba

சூப்பர் ஸ்பெஷாலிடி லீலைகள்

கலி யுகத்தின் வாழ்க்கை முறைகளால் உணவில் கோளாறு,மன அழுத்தம் மற்றும் இதர காரணங்களினால் இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் ஏராளமானோருக்கு தன் அவதார பணியாக மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க ஸ்வாமி அமைத்த மருத்துவ மனை தான் சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் Super Specialty Hospital.

உலகத் தரத்தையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இறைவன் கரத்தின் அருள் தொடுதலுடன் மூன்று லட்சம் சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்ட மருத்துவ மனையைப் பற்றி சித்தூரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸில்க்கு குடியேறி அங்கிருந்து பர்த்திக்கு சேவை புரிய வரும் டாக்டர் சௌதரி ஒலெட்டி பிரமித்து உளமுருக எழுதுகிறார் தன் அனுபவங்களைத் தொகுத்து தனது “மை ஹோலிமேன் இஸ் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா” என்ற புத்தகத்தில்! (My Holyman is Avatar Bhagavan Sri Sathya Sai Baba). 17 ஆர்க்கிடெக்ட்டுகள் தினம் 15 மணி நேரம் பணி புரிந்து ஐந்து மாதங்கள் இதன் டிவைன் ஜாமெட்ரி டிசைனை – தெய்வீக வடிவ இயல் அடிப்படையிலான வடிவமைப்பை – முடிக்க அடுத்த ஏழே மாதங்களில் உருவான கட்டிட அற்புதம் இது!

சாயிக்னோஸிஸ்

25 ஆண்டுகள் அமெரிக்காவில் பிரபல இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக அறுவைச் சிகிச்சைகளைச் செய்து வந்த அவர் புட்டபர்த்தியில் இரு வார சேவைக்காகப் பலமுறை வந்து கடினமான அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஒரு முறை பாபா ஒருவரை அட்மிட் செய்து அவரை செக் செய்யுமாறு கூறினார்.சோதனையில் அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சௌதரி முடிவு செய்தார்.

ஆனால் மறுநாள் சௌதரியை நோக்கிய பாபா,” அவரை டிஸ்சார்ஜ் செய்து விடு! அவருக்கு ஒன்றுமில்லை” என்றார்.திகைத்துப் போன சௌதரி பகவானின் சொல்லை மீற முடியாமல் ஆனால் தன் மெடிகல் அனுபவத்தையும் நம்ப மறுக்காமல் அவரை மீண்டும் பரிசோதித்தார். என்ன ஆச்சரியம்! முதல் நாள் செய்த சோதனைகளின் அறிகுறிகளே அங்கு இல்லை.அவர் பூரண நலத்துடன் “பெர்பெக்டாக” இருந்தார். சௌதரி தனது ‘டயாக்னோஸிஸ்’ வேறு சாயியின் ‘சாயிக்னோஸிஸ் வேறு என்பதை உணர்ந்து அவரை அடி பணிந்து வணங்கினார். இன்னொரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சையை உடனடியாகச் செய்யுமாறு பகவான் அறிவுரை –அல்ல, அருளுரை – பகர்ந்தார். சௌதரியோ திகைத்துப் போனார். ஏனெனில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியாத உடல் நிலையில் அவர் இருந்தார். நிச்சயம் அவரின் உயிருக்கு ஆபத்து நேரிடும்!

ஆனால் பகவானின் மேல் பாரத்தைப் போட்டு அறுவைச் சிகிச்சையை செய்து முடித்தார். அவரே ஆச்சரியப்படும் படி அந்த இதய நோயாளி பூரண நலத்துடன் வீடு திரும்பினார். இது தனது அறுவை சிகிச்சையினால் அல்ல, பாபாவின் அருள் சிகிச்சையினாலேயே என்று உளம் நெகிழ உணர்ந்து அதிசயித்தார் உலகின் மிகச் சிறந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணரான சௌதரி ஒலெட்டி!

stamp baba project

பலவான் அனுமனுக்கே பலம்

65 அடி உயரமுள்ள அனுமனின் சிலையை பர்த்தியில் நிறுவ பாபா இந்தியாவின் தலை சிறந்த கட்டுமானக் கம்பெனிக்கு ஆணையிட்டார்.

அந்த நிறுவன எஞ்சினியர்கள் முறைப்படி மண் பரிசோதனையை மேற்கொண்டனர். ஆனால் மணலோ தொள தொள என்று (புதை குழி மண் போல என்று சொல்லும் அளவில்) கெட்டிப் படாமல் இருந்தது. பிரம்மாண்டமான சிலையின் எடை என்ன! அதை எங்காவது இப்படிப்பட்ட மண்ணில் நிறுவ முடியுமா! எஞ்சினியர்கள் மறுத்து தங்கள் ரிபோர்ட்டை பாபாவிடம் சமர்ப்பித்தனர். பாபா சொன்ன இடம் சரிப்படாது என்ற அவர்களின் நிலைப்பாட்டைக் கேட்ட பாபா அந்த இடத்திற்கு வந்தார். தன் காலால் அந்த இடத்தில் இரண்டு தட்டு தட்டினார். “ஊம்! இப்போது சரியாகி விட்டது. சிலையை நிறுவலாம்!” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். எஞ்சினியர்கள் திகைத்துப் போய் மீண்டும் மண் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். என்ன, ஆச்சரியம்! முன்னர் பரிசோதனை செய்த அதே இடம் தான்.’! ஆனால் இப்போது பாறாங்க;ல் போல வலுவுடன் இருந்தது. ப;லவானான அனுமனுக்கே பலம் தந்த பாபாவின் அதிசயச் செயலை அருள் அற்புதமாக அனைவரும் உணர்ந்து பரவசப்பட்டனர்.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

ஒவ்வொரு கணத்தையும் ஒரு லீலையாக பக்தர்களுக்கு உணர்த்தி அதில் ஒரு அற்புத செய்தியையும் அவ்வப்பொழுது பொதிந்து வைத்தவர் பகவான்! அவரது லீலைகளை அனுபவித்து மகிழ்ந்த பக்தர்கள் அப்பரின் தேவாரப் பாடலையே நினைவில் கொள்வர்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும் இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே!

என்று தில்லை நடராஜரின் ஆனந்தத் திரு நடனத்தைப் பார்க்க முடியுமென்றால் இன்னொரு மனிதப் பிறவியும் நிச்சயம் வேண்டும் என்றார் அற்புதர் அப்பர்.

பகவான் பாபாவின் லீலைகள் அடுத்த அவதாரமான பிரேம சாயி அவதாரத்திலும் தொடரும் என்பதால் அவர் வாழும் அந்த காலத்தில் அவருடன் வாழ வேண்டும் என்பதே பகவானின் அணுக்க பக்தர்களின் ஆசை. முத்தியைச் சற்று ஒத்தி வைத்து அவர்கள் ஒரு முகமாக ஆசைக் குரலில் கூவிக் கூறுவது இன்னொரு “ மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”!

சின்ன உண்மை
நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனியை நிறுவிய அதன் சேர்மன் ஏ,வி,எஸ் ராஜு மிகப் பெரிய வாழ்க்கை வரலாறாக பாபாவின் வரலாற்றை எழுதியுள்ளார். 1996-லிருந்து 2007- வரை எழுதப்பட்ட 32 தொகுதிகளைக் கொண்ட ஆனால் ஒரே பைண்டிங்கில் உள்ள இந்த நூலே உலகின் மிகப் பெரிய நூல் என்று கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் சாதனைப் பட்டியலில் இதை அறிவித்துள்ளது!

Contact swami_48@yaho.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: