பாரதி தரிசனம்

Post No 740 dated 19th December 2013 (11th December is Bharati’s Birth Day)

By ச.நாகராஜன்

உரைச் சித்திரம்

முன்னுரை

கம்பீரமான ஆண்குரல் : மஹாகவி பாரதியின் தரிசனம்
நவயுகத்து நாயகனின் மேலாம் எண்ணங்களை அவரது கவிதைகள், கட்டுரைகளிலிருந்தே எடுத்துக் கோர்க்கப்பட்ட ஒரு மணியாரம். வினாக்களை நாம் கேட்க விடைகளை பாரதியார் அளிக்கிறார்.
வினா: மஹாகவி பாரதியாரே, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலவே, காலத்தை வென்ற கவிக் குயிலே, புது யுகத்தின் எழுச்சியே, புதிய அறம் பாட வந்த அறிஞனே, உம்மைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

உம்மை அறிமுகப்படுத்திக் கொள்வீர்களா?

விடை: கவிராஜ சி.சுப்பிரமணிய பாரதி
சக்திதாசன் எனப் புகழ் வளரும் சுப்ரமண்ய பாரதி

வினா: உமக்குத் தொழில் யாது?
விடை: நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்

வினா: தவறாக எண்ணாதீர்கள், உங்கள் கவிதையின் பெருமையை உங்கள் வாயாலேயே கேட்க ஆசைப்படுகிறோம்.
விடை: “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத கவிதை” என்று நன்கு, பிரான்ஸென்னும் சிறந்த புகழ் நாட்டிலுயர் புலவோரும், பிறரு மாங்கே விராவு புகழாங்கிலத் தீங்கவியரசர் தாமு மிகவியந்து கூறிப் பராவி யென்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்.

வினா: கவிப் பெருக்கினால் பயன் என்னவோ?
விடை: உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்

வினா: நாட்டிற்கு உழைத்தல் என்றீர்களே, நம் நாட்டைப் பற்றிக் கூறுங்களேன்.
விடை : “ஞானத்திலே பர மோனத்திலே உயர்
மானத்திலே அன்ன தானத்தி;லே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு”
“ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாடு”
பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு!

வினா: நாட்டிற்கு உழைக்கும் விதம்?
விடை: இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே!
வினா: உங்களுக்குக் காளி மேல் பக்தி அதிகமா? பாரத தேவி மேல் பக்தி அதிகமா?
விடை: “காளியும் நமது கனக நன்னாட்டுத் தேவியும் ஒன்று”
வினா: உங்கள் வாழ்வை யாருக்கு அர்ப்பணம் செய்வீர்கள்?
விடை: தேவி நம் பாரத பூமி – எங்கள்
தீமைகள் யாவும் தீர்த்தருள் செய்வாள்
ஆவி உடல் பொருள் மூன்றும் – அந்த
அன்னை பொற்றாளினுக் கர்ப்பிதமாக்கி
வந்தே மாதரம் என்போம்

வினா: பாரத்த் தாயைப் பற்றி அற்புதமாகக் கவிதை படைத்துள்ளீர்களே இவை உருவாகக் காரணம் என்ன?

விடை: “இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மனகோசரமாகிய ஸௌந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குதூஹலமடைகிறது. சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருத மட்டுமேயன்றி அசேதன பிரகிருதியும், புதிய ஜீவனையும், உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை ஒப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம் – ஓர் கிளர்ச்சி ஓர் தர்மம், ஓர் மார்க்கம், தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர் போல, அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன.சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய ‘”தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெலாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறைவுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சில கவிதை மலர் புனைந்து பாரத மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன்.”

வினா: சொல் எப்படி இருக்க வேண்டும்?
விடை: மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்!
வினா: சொல்லில் சிறந்த சொல்?
விடை: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!

வினா: ஆங்கிலம், வடமொழி,ஹிந்தி, உருது, பிரெஞ்சு,லத்தீன், ஜெர்மன், வங்காளம், தெலுங்கு, அரபி, தமிழ் இப்படிப் பல மொழிகள் அறிந்திருக்கின்றீர்கள்.உங்களைக் கவர்ந்த இனிய மொழி எது?
விடை: யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்
வினா: தமிழனுக்கு உங்கள் அறிவுரை என்ன?
விடை: ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்;
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்!

வினா: (ஒரு குழந்தையின் குரல்) சாதிகள் உண்டா?
விடை: சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

வினா: நிற வேற்றுமை இருக்கிறதே
விடை : வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை; -அவை
பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொரு குட்டி – கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் – அவை
யாவும் ஒரே தரமன்றோ!
இந்த நிறம் சிறிதென்றும் – இஃது
ஏற்றமென்றும் சொல்ல்லாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமையில்லை
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்!

வினா: எதைப் போற்ற வேண்டும்?
விடை: கைத் தொழில் போற்று
வினா: எதை எதிர்க்க வேண்டும்?
விடை: கொடுமையை எதிர்த்து நில்!
வினா: மேலோர் யார்?
விடை: வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக் கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்வோ
பூமியில் எங்கணும் மேலோர்

வினா: வேலை செய்ய வேண்டிய நேரம்
விடை: நாளெலாம் வினை செய்!
வினா: செய்தால்…?
விடை: நினைப்பது முடியும்!
வினா: (பெண் குரல்) நரகம் எது?
விடை: கவலைப் படுதலே கரு நரகம்மா!

வினா: சொர்க்கம்?
விடை: பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே!
வினா: யோகம் எது?
விடை: ஊருக்கு உழைத்திடல் யோகம்

வினா: யாகம்?
விடை: நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
வினா: மெய் ஞானம்?
விடை: போருக்கு நின்றிடும் போதும் – உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய் ஞானம்
– தொடரும்

Articles on Bharati by London Swaminathan posted earlier in this blog:

1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
2.பாரதியின் பேராசை
3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
4.பயமே இல்லாத பாரதி
5.பாரதி பாட்டில் பகவத் கீதை
6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள்
8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர்
(10) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
Contact swami_48@yahoo.com

Leave a comment

1 Comment

  1. தேசிய ஞானக்கவி சுப்ரமண்ய பாரதியாரின் பிறந்த நாளில் அன்பர் திரு. ச. நாகராசன் அவர்களின் இந்தப் பகிர்வு பாராட்டுக்குரியது. மகாகவியை பேட்டி காண்பது போல வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களுக்கு பாரதியின் வார்த்தைகளை பொருத்தமாக தேர்வு செய்து வினா-விடை போன்றதொரு அமைப்பை உருவாக்கி நமக்கெல்லாம் பாரதியின் திருவாக்கை நினைவூட்டியமைக்கு நாகராசன் அவர்களுக்கு நன்றி. காலமெல்லாம் தமிழ், தேச ஒற்றுமை, மனித நேயம், பெண்விடுதலை என்று பாடிப் பாடிக் களித்த குயிலல்லவோ நமது மகாகவி பாரதி. அதனால்தானோ கவியோகி சுத்தானந்த பாரதியார் அவரைக் கவிக்குயில் பாரதியார் என வர்ணித்துள்ளார். பாரதியின் வாழ்வம் வாக்கும் தமிழர்களுக்கு பொக்கிஷம். தமிழுக்கு தரணியில் மீண்டும் பெரும்புகழ் வேண்டுமாயின் பாரதியைப் படிப்போம், பாரதி தமிழைப் பரப்புவோம், பாரதி கனவு கண்ட தமிழர்களாய் மனிதர்களாய் உயிர்ப்போம். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: