By London Swaminathan
Post No.837 Date. 13-02-2014
திருக்குறளில் வள்ளுவரும், பிரஸ்ன உத்தர ரத்ன மாலிகாவில் (பிரஸ்னோத்த்ரரத்னமாலிகா ஸ்தோத்திரம்) ஆதி சங்கரரும், கிரேக்க நாட்டு அறிஞர் பிளாட்டோவும் எப்போது பொய் சொல்லுவது அனுமதிக்கப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றனர்.
மஹாபாரத்திலும் சில கதைகள் உண்டு. பொய் சொன்னாரா இல்லையா என்று தீர்மானிக்க முடியாத தர்ம சங்கடமான நிலைமைகள் அவை.
வள்ளுவர் கூற்று
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)
பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் (292)
பொருள்: குற்றமில்லாத நன்மையைத் தரும் என்றால் பொய் கூட வாய்மையாகக் கருதப்படும்
அதாவது ஒரு பொய்யானது மாசு மருவற்ற தூய நன்மையை உண்டாக்குமானல் அது உண்மை எனவே கருதப்படும்.
“சத்யமேவ ஜயதே= வாய்மையே வெல்லும்” என்ற உபநிஷத் வாசகம் தமிழ்நாடு அரசின் மற்றும் இந்திய அரசின் சின்னங்களில் காணப்படுகிறது. குருகுலத்துக்குப் போகும் பையனுக்கு வாத்தியார் சொல்லித் தரும் முதல் பாடம் “சத்யம் வத= உண்மையே பேசு” என்பதுதான். தமிழ், வடமொழி இலக்கியங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் இதே கருத்து திரும்பத் திரும்ப வருகிறது. அப்படி இருந்தும் ஆதி சங்கரர் சொல்லுகிறார்:
சங்கரர் கூற்று
யார் நம்பத் தகாதவன்?
எப்போதும் பொய் சொல்பவன்.
எப்போது பொய் சொன்னால் பாபம் ஆகாது?
தர்மத்தைக் காக்கச் சொல்லும் போது.
இந்தக் கேள்வி பதில் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா துதியில் வருகிறது. இது ஒரு அற்புதமான துதி. மஹா பாரதத்தில் வரும் யக்ஷப் பிரஸ்ன பாணியில் அவர் எழுதி உள்ளார். 67 பாடல்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 200 கேள்வி பதில்கள். பிரஸ்ன என்றால் கேள்வி, உத்தர என்றால் பதில். பாடல் 46, 47–ல் இந்த இரண்டு கேள்விகளும் பதில்களும் வருகின்றன.
ஆதி சங்கரரின் கூற்றுப்படி தர்மத்தைக் காக்க பொய் சொல்லலாம். அது பாவமில்லை. ஒருவேளை அவர் மஹாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா கதையை மனதில் வைத்து இப்படிச் சொல்லி இருக்கலாம்.
‘அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’:
பொய்யே சொல்லாத தர்மனையும் பொய் சொல்ல வைத்தார் கிருஷ்ணன். எதற்காக? தர்மயுத்தம் வெல்ல வேண்டும் என்பதற்காக. தர்மன் பொய் சொல்ல மாட்டான் என்று தெரிந்த கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா’ என்ற பெயருள்ள ஒரு யானையைக் கொல்லச் செய்கிறார். பீமன் அதைக் கொன்றவுடன் அஸ்வத்தாமாவுக்கு சாவு என்று கூச்சல் இடுகிறான். துரோணர் காதில் அது விழவே தர்மனிடம் உண்மையா என்று அறிய வருகிறார். அவன்‘அஸ்வத்தாமா ஹத: நரோவா குஞ்சரோவா’: = அஸ்வத்தாமா சாவு………. யானையோ மனிதனோ– என்று சொல்கிறான்.
அதாவது யானையோ மனிதனோ ஒரு‘அஸ்வத்தாமா காலி! யானையோ மனிதனோ என்பது சம்ஸ்கிருத வாக்கியத்தில் பின்னால் வரும். அந்த நேரத்தில் பாண்டவ சேனை பெரிய டமார துந்துபி ஒலிகளை உண்டாக்கி துரோணர் காதில் விழமுடியாதபடி செய்கின்றனர். துரோணர் மகனின் “மரணச் செய்தி” கேட்டு ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தியானத்தில் அமர்கிறார். அவரை திருஷ்டத்யும்னன் கொல்கிறான்.
ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தைச் செய்யலாம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒரு நல்ல காரியம் நடக்கத் தீமை இல்லாத பொய்களைச் சொல்லலாம். பையன் அழகானவனா, பெண் அழகானவளா என்று கேட்கும்போது ஆம் அழகானவர் என்று சொல்வதில் தப்பில்லை. அழகு என்பது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது.!!
கௌசிகர் கதை
மஹாபரதத்தில் இன்னொரு சுவையான கதையும் உண்டு. வாழ்நாள் முழுதும் பொய் சொல்ல மாட்டேன் என்று கௌசிகர் என்ற பிராமணர் சபதம் செய்கிறார். அவர் காட்டில் இருக்கையில் வழிப்போக்கர் குழு ஒன்றைத் திருடர்கள் துரத்தி வருகின்றனர். அந்த வழிப்போக்கர்கள் கௌசிகர் இருக்கும் இடத்தைக் கடந்து ஓரிடத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். திருடர்கள் சற்று நேரத்துக்குப்பின் அங்கே வந்து கௌசிகரிடம் யாராவது இப்படி வந்தார்களா? என்று கேட்டனர். அந்த ‘உண்மை விளம்பி’ (!) ‘ஆமாம் அதோ அங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று உண்மையைக் கூறுகிறார். பின்னர் வழிப்போக்கர்களைத் திருடர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இது வாய்மை அல்ல என்பது வள்ளுவனின் கருத்து.
பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை (291) என்பது வள்ளுவன் துணிபு.
சத்யகாம ஜாபாலா கதை
உபநிஷதத்தில் இன்னும் ஒரு அற்புதமான கதை உண்டு. சத்யகாமன் என்ற சிறுவன், குருவிடம் போய் வகுப்பில் சேர ‘அப்ளிகேஷன்’ கொடுக்கிறான். அவரோ தம்பி மனுவை சரியாக பூர்த்தி செய்யவில்லையே. அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாம் எழுதாமல் ‘பிளாங்க்’ ஆக இருக்கிறத- என்றார். அவன் எங்கள் அம்மா பெயர் ஜாபாலா என்கிறான். வீட்டுக்குப் போய் காலியான இடங்களை நிரப்பி உங்கள் அப்பா பெயர், குலம், கோத்ரம் எல்லாவற்றோடும் வா என்கிறார். அவன் அம்மாவிடம் போய் நடந்த கதையைச் சொல்கிறான். அவளும் ‘மஹா உத்தமி!’ (!) ‘உன் அப்பா யார் என்று எனக்கே தெரியாது’ என்கிறாள். அவனும் உடனே குருவிடம் போய் அம்மா சொன்னதை அப்படியே சொல்கிறான்.
குரு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இன்று முதல் உன்பெயர் ‘சத்ய காமன் (உண்மை நாடுவோன்)’. நீ எனது சீடன். பிராமணன் பொய்யே பேசமாட்டான். ஆகையால் நீயும் ஒரு பிராமண குலத்தில் உதித்தவனே என்று சொல்கிறார். உண்மைக்கு அவ்வளவு மதிப்பு (அந்தக் காலத்தில்!!!)
கிரேக்க நாட்டு அறிஞர் சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவர் Noble Lie “நோபிள் லை” (உன்னத பொய்) சொல்லலாம் என்று ‘ரிபப்ளிக்’ புத்தகத்தில் எழுதி இருக்கிறார். எஸ். எம். டயஸ் எழுதிய ஆங்கில திருக்குறள் விளக்கத்தில் இதைக் கூறுகிறார்.அதாவது கல்வி மற்றும் ராஜாங்க விஷயங்களில் இப்படி உன்னத காரியங்களுக்குப் பொய் சொல்லலாம் என்பது அவரது கருத்து. சாக்ரடீஸ் போன்றோர் இந்திய கலாசாரத்தை நன்கு அறிந்தவர்கள்.
சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ. அவருடைய சீடர் அரிஸ்டாடில். அவருடைய சீடர் அலெக்ஸாண்டர். இந்தியாவை எப்படியாவது பார்த்து ரிஷி முனிவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று அலெக்ஸாண்டர் துடியாய்த் துடித்தார். (இது பற்றிய விஷயத்தை சுவாமி விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர் புத்தகங்களில் இருந்து ஏற்கனவே விரிவாகக் கொடுத்துவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க விருப்பம் இல்லை!).
தொடர்பு கொள்க: swami_48@yahoo.com
You must be logged in to post a comment.