காதலர் தினமும் இந்துமதமும்

nargis-fakhri3

By London Swaminathan
Post No.839 Date 14-02-14 (valentine day)

பிப்ரவரி 14 காதலர் தினம் (வாலன்டைன் டே)
உலகிலேயே காதல், குடும்ப வாழ்வு, செக்ஸ் ஆகிய எல்லாவற்றையும் மத நூல்களின் ஒரு பகுதியாக்கிய ஒரே மதம் இந்துமதம் தான். வேத மந்திரத்தில் ‘செக்ஸ்’ இருக்கிறது. கல்யாண மந்திரங்களில் அழகான காதல் கீதங்கள் இருக்கின்றன. வியாசர், பகவத் கீதையில், காதலன் காதலி உவமையைப் பயன்படுத்துகிறார். காம சூத்ரம் நூல் எழுதிய வாத்ஸ்யாயனரை ஒரு மகரிஷியாகக் கருதுகிறது இந்து மதம்.

தமிழ் வேதமான திருக்குறளில் காமத்துப் பால் ஒரு தனிப் பெரும் பகுதியாக விளங்குகிறது. ஆயினும் மேலை நாட்டு வாலன்டைன் தினம் (காதலர் தினம்) போன்ற பகிரங்கமான காதல் சேட்டைகளை இந்து மதம் அங்கீகரிக்கவில்லை. அது நாய், புறா போன்று பகிரங்கமாகச் செய்யும் மிருகங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுவிட்டது.

காதலைக் குறிப்பதற்கான இருதய (ஹார்ட்டின்) அடையாளத்தை உலகிற்கு ஈந்தது அதர்வண வேதம். இது பற்றி எனது ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். காண்க: Sex Mantras and Talismans in Atharva Veda (posted on 26 September 2012)

47 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலில் (ரீகல் டாக்கீஸ்) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறை பேராசிரியர் டாக்டர் உஷர்புத் (இப்பொழுது அவர் ஒரு சந்யாசி) உரை ஆற்றினார். வேதத்தில் உள்ள காதல் மொழிகளை வரிசையாகக் கூறி எந்த திரைப் பாடப் பாடல்களிலாவது இவ்வளவு அழகான கீதங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று சவால் விட்டார். கூட்டத்தில் ஒரே கரகோஷம்!

கல்யாண மந்திரங்களில் ஒன்றிரண்டு மட்டும் இதோ:
“நீ என்னுடன் 7 அடிகள் நடந்துவிட்டாய். என் நண்பனாக (நண்பி) இரு. நானும் நீயும் ஏழு அடிகள் நடந்துவிட்டோம். நாம் நண்பர்களாக இருப்போம். நீ என்னைவிட்டுப் பிரியாதே. நான் உன்னைவிட்டுப் பிரிய மாட்டேன்.”
(ஏழு அடி நடப்பது ஏன்? என்றும் கரிகால் சோழன் ஏன் ஏழு அடி நடந்து பாணனை வழி அனுப்பினான் என்றும் முன்னரே “கரிகால் சோழனின் பருந்து வடிவ யாகக் குண்டம்” என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்).

இன்னொரு மந்திரம்:
நான் வானம்—நீ பூமி
நான் சக்தி கொடுப்பவன் – நீ சக்தி பெறுபவள்
நான் சிந்தனை- நீ சொல்
நான் இசை – நீ பாட்டு
நானும் நீயும் ஒருவரை ஒருவர் பின் தொடர்வோம்.
இப்படி எவ்வளவோ மந்திரங்கள்.

பாரதியின் காதல் கீதம்

இதைப் பின்பற்றி பாரதியும் பாடி இருக்கிறார்:
“பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நான் உனக்கு
வான மழை நீ எனக்கு, வண்ண மயில் நான் உனக்கு
…………………………………………………………..
……………………………………………………….. (கண்ணம்மா என் காதலி)

இது ஒரு நீண்ட பாட்டு. வேதம் படித்த பாரதி தனது பாடல்களில் ஏராளமான இடங்களில் வேதத்தை (குறிப்பாக அதர்வண வேதத்தை) மொழிபெயர்த்தும் தழுவியும் பாடி இருக்கிறார்.

nargis-fakhri2
திருக்குறளில் காமத்துப் பால்
200 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக தமிழின் மீது அன்பு பாராட்டிய பெஸ்கி பாதிரியார் முதலியோர் திருக்குறளின் காமத்துப் பாலைக் கண்டு அசந்தே போய்விட்டனர். “அபசாரம், அபசாரம்”, இதை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தால் தமிழர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்று அந்தப் பகுதியை தீண்டத் தகாத பகுதியாக ஒதுக்கி விட்டனர்.

திருவள்ளுவர் ஒரு மாபெரும் ஹிந்து. ஹிந்து ஒருவன் மட்டுமே ‘செக்ஸை’யும் கூட அறநூலில் சேர்க்கும் துணிச்சல் பெற்றவன். அவர் மஹாபாரதத்தில் பல இடங்களில் காணப்படும் தர்ம (அறம்), அர்த்த (பொருள்), காம (காமம்) என்ற அதே வரிசையில் தனது திருக்குறளை அமைத்தார். துணிச்சலாக ‘காம’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லை குறள் முழுவதும் பயன்படுத்தினார். இதே போல சங்க காலப் புலவர்களும் பரத்தை (பர ஸ்த்ரீ= ப்ராஸ்டிட்யூட்) என்ற சம்ஸ்கிருத சொல்லை நூற்றுக் கணக்கான பாடல்களில் பயன்படுத்தினர். பௌத்தர்களும் சமணர்களும் தொடுவதற்குத் தயங்கிய, பயந்த ஒரு “சப்ஜெக்ட்டை” தீவிர இந்துவாகிய திருவள்ளுவன் மட்டுமே தொட முடிந்தது.

நாயகன் நாயகி பாவம்

திருப்பாவை, திருவெம்பாவையில் நல்ல கணவன் அமைய நோன்பு நூற்கும் பெண்கள் அந்தப் பாடல்களில் காதல் மொழிகளையும் பயன்படுதுகின்றனர். ஜெய கோவிந்தரின் கீத கோவிந்தத்தில் உள்ள அஷ்ட பதிகளில் மிகவும் ‘விரசமான’ பகுதிகள் என்று கருதப்படும் வசனங்களும் உண்டு. அதாவது கடவுளை நாயக நாயகி பாவத்தில் வழிபடும் ஒரு சிறந்த அணுகுமுறை. உலகில் வேறு எந்த மதத்திலும் இந்த சுதந்திரத்தைக் காணமுடியாது.

ஆனால் கோபியரின் காதல் பற்றி சுவாமி விவேகானந்தர் அற்புதமான சொற்பொழிவாற்றி இருக்கிறார். “முட்டாள்களே (Fபூல்ஸ்) இதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தெய்வீக அன்புக்கு ஈடு இணையானது எதுவும் உலகில் நிகரில்லை” என்று இடி முழக்கம் செய்கிறார். அது உடல் ரீதியான சிற்றின்ப அன்பு இல்லை. உள்ளம் ரீதியான பேரின்ப அனுபவம். அதைப் புரிந்து கொள்ள வியாசருடைய சுகர் போல உள்ளத் தூய்மை இருக்கவேண்டும்”.

nargis-fakhri1

ஞான முதிர்ச்சி வேண்டும்.”வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு”– என்று சும்மாவா சொல்லி வைத்தான் வள்ளுவன்.

( இந்திய இலக்கிய வரலாற்றில் மிக அதிசயமான விஷயம்—கோபியர்களை முதல் முதலில் குறிப்பிடுவது சங்க கால இலக்கியம்தான்!! இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் சம்ஸ்கிருதத்தில் கோபியர்கள், ராதா எல்லோரும் வருகின்றனர்! ).

காமசூத்ரம்

உலகின் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணியை அவருக்குப்பின் உரை எழுதிய பதஞ்சலி மகரிஷி, ’பகவான் பாணிணி’ என்று போற்றுகிறார். அதே போல உலகின் முதல் செக்ஸ் (காமசூத்ரம்) புத்தகம் எழுதிய வாத்ஸ்யாயனரையும் மகரிஷி வரிசையில் வைக்கிறது இந்துமதம். காமத்துப் பால் எழுதிய வள்ளுவனையும் தெய்வப் புலவன் என்று போற்றுகிறது இந்து மதம்.

(புலவர்களை முதலில் தெய்வ நிலைக்கு உயர்த்திவதும் இந்துக்கள் மட்டுமே. கிரேக்க நாட்டில் ஹோமருக்கும் தெய்வீக அந்தஸ்து இருந்தாலும், அவரெல்லாம் வேத உபநிஷதத்துகளுக்குப் பின்னால் வந்தவர்களே. வியாசர் இமய மலை என்றால் ஹோமரை திருப்பரங்குன்றம் குன்று அல்லது சுவாமி மலை என்று சொல்லலாம்.)

கிரேக்க மொழியில் ஒரு காமப் புத்தகம் உண்டு. பைபிளில் சில காதல் வசனங்கள் உண்டு. எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அவை நம்மிடம் உள்ள சர்க்குக்கு உறைபோடக் காணாது!!!

tamil pennum kiliyum

கீதையில் காதலன், காதலி

கீதையில் (11-44) கூட காதலன் காதலி உவமை வருகிறது. அர்ஜுனன், கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்கிறான். உன்னை சாதரண நண்பனாக நினைத்து பல நேரங்களில் வாடா, போடா என்று பேசி அவமதித்து இருக்கிறேன்: “மகன் பிழையைத் தந்தை போலும், நண்பன் பிழையை சக நண்பன் போலும், காதலியின் பிழையை காதலன் போலும் பொருத்தருளல் வேண்டும்”– (ப்ரியாயா: ப்ரிய இவ ஸோடும் அர்ஹஸி— கீதை 11-44).

எட்டுவகைத் திருமணங்கள்

காதல் திருமணம், கடத்தல் திருமணம், ஸ்வயம்வரம் உள்பட எட்டு வகை திருமணங்களுக்கு ‘அப்ரூவல்’ கொடுத்த ஒரே மதம் உலகில் இந்துமதம்தான். அத்தனை வகைகளையும் உலகின் மிக நீண்ட நூலான மஹாபாரத்தில் படித்து வியப்புறலாம்.

வீட்டுக்கு வரப் போகும் மணப் பெண்ணை நீயே என் வீட்டு மஹாராணி என்று போற்றுகிறது வேத மந்திரம். அவளை ஒரு கல்லின் மீது காலைப் பதிய வைத்து அதை வருங்காலக் கணவன் பிடிக்கிறான். இதைப் போல (கற்பில்) உறுதியாக இரு என்கிறான்.

ஆக, செக்ஸ் என்பது இந்து மதத்தில் ஒரு ‘டாபூ’ இல்லை (தொடாதே, காணாதே, பேசாதே என்பது taboo டாபூ). ஆனால் அது புனிதமானது, போற்றத்தக்கது, மதிக்கப் பட வேண்டியது. மிருக அணுகுமுறை இன்றி மனித அணுகுமுறை கொடுக்கப்படவேண்டியது என்று பறை சாற்றுகின்றன வேத, இதிஹாச, ஸ்மிருதி, புராணங்கள்.

(ஸ்மிருதிகள்= இந்து மத சட்டப் புத்தகங்கள்).

Contact swami_48@yahoo.com

பத்திரிக்கை மற்றும் மலர்களில் இருந்து படங்கள் எடுக்கப்பட்டன; நன்றி.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: