ரகசியத்தில் செய்த பாவம்: ஆதிசங்கரர்

secrecy

ரகசியத்தில் செய்த பாவம்: ஆதிசங்கரர்
By London swaminathan
Post No.843 Date 16th February 2014.

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர) ரத்ன மாலிகா. இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் வரும் யக்ஷப் ப்ரஸ்னம் போல வினா–விடை பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். இதில் ஒரு கேள்வி—
ஒருவனை சாகும் வரை வாட்டிவதைப்பது எது? அம்பு போலப் பாய்ந்து நெஞ்சில் உறுத்துவது எது?
அதற்கு அவரே சொல்லும் பதில்: ஒருவன் ரகசியத்தில் செய்த பாவம்.

இது அருமையான கேள்வி, அருமையான பதில்! நல்ல உளவியல் (சைகாலஜி) தெரிந்த ஒருவர் எழுப்பி விடை கூறிய கேள்வி. இதையே தமிழ்ப் புலவன் திருவள்ளுவனும் கூறுவது இன்னும் வியப்புக்குரியது.

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும் (293)

பொருள்:– தன் மனதுக்கு பொய் என்று தெரிந்த பின்னரும், மற்றவருக்குத்தான் தெரியாதே என்று பொய் சொல்லக் கூடாது. அப்படிச் செய்தால் மனச் சாட்சியே ஒருவரை சுட்டுப் பொசுக்கும்.

அதாவது அது அவன் மனதை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும். இதைத்தான் மனச் சாட்சி உறுத்துகிறது என்பர்.

tent large

சிறுவயதிலேயே பள்ளிக்கூடத்திலும் “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்” என்று கற்பிக்கின்றனர்.

மனத்திலும் (உள்ளம்=உண்மை), வாயிலும் (வாய்=வாய்மை) ஒரே எண்ணம் இருக்குமானால் தானம் தவம் செய்வாரைவிட உயர்ந்தவர் ஆவர் என்று வள்ளுவன் கூறுவான் (295)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை (295)

அரிச்சந்திரன், ராமன், சத்ய காமன் ஜாபாலா, தர்மன் ஆகியோரின் கதைகள் இதற்கு உதாரணம்.

திருவள்ளுவர் அதிகாரம்தோறும் சம்ஸ்கிருத சொற்களை கூசாமல் பயன்படுத்துவார். இங்கே தானம், தவம் என்ற சொற்களை பயன்படுத்துதுகிறார். குறள் 19 லும் இதைக் காணலாம். ராமாயணத்திலும், மஹா பாரதத்திலும் நூற்றுக்கணக்கான இடங்களில் வரும் தானம், தவம் என்ற சொற்களை அவர் பயன்படுத்துவது வள்ளுவரும், சங்கரரும் ஒரே சிந்தனை உடைய இரண்டு ரிஷிகள் என்பதைக் காட்டும்.

குறுந்தொகையில் மனச் சாட்சி

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் (184) ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடிய பாடல் ஒன்று வருகிறது. அவன் ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்றும் ‘பொய்யா நாவில் கபிலன்” என்றும் பலராலும் போற்றப்பட்ட கபிலரிடம் தமிழ் கற்றவன். அவனும் இதே கருத்தைக் கூறுகிறான்:
“ கடற்கரைச் சோலையில் வாழும் பரதவர் மகள் பேரழகி. மயில் போல் கூந்தல் உடையாள். மடப்பம் பொருந்திய மகள். அவளுடைய கண் வலையில் விழுந்தவர்கள் தப்ப முடியாது. நானும் அவள் கண் வலையில் சிக்கினேன் (மயங்கிவிட்டேன்). சான்றோரிடம் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் வழக்கம் இருக்காது. ஆகையால் நான் உள்ளதைச் சொல்லிவிட்டேன்:
‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை’ —என்பான்.

behind-curtain

நற்றிணையில் வெள்ளைக்குடி நாகனாரும் (196)

‘அறிகரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே’ என்று நிலவைப் பார்த்து தலைவி பாடுகிறாள். “என் தலைவன் பற்றி அறிந்தும் சொல்லாமல் இருந்தால் நீ தேய்ந்து போவாய்” என்று சந்திரனைச் சபிக்கிறாள்.
கலித்தொகை, அறநெறிச்சாரம் ஆகிய நூல்களிலும் இதே போன்ற வரிகளைக் காணலாம்.
ராமலிங்க சுவாமிகளும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பது இதைத்தான்.

ஆதி சங்கரரின் வினா—விடை துதியில் இன்னும் இது போல நிறைய ரத்தினங்கள் உள்ளன. தனித்தனியே காண்போம்.

contact swami_48@yahoo.com
Photos are taken from different sites.Thanks.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: