சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 30
Post No 851 Date 19-02-2014
ச.நாகராஜன்
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல வந்த கவிஞர் பசுவையும் பாம்பையும் பார்த்தார். அவருக்குப் பளிச்சென்று அற்புதமான கருத்து தோன்றியது.
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய பசுவையும் பாம்பையும் பாருங்கள்! பசுவானது பசும் புல்லைத் தின்று அதைப் பாலாக மாற்றிப் பாலைத் தருகிறது. பாம்போ பாலைக் குடித்து அதை விஷமாக மாற்றி விஷத்தைக் கக்குகிறது.
பாத்ராபாத்ரவிவேகோஸ்தி தேனுபன்னகயோ இவ I
த்ருணாத் சஞ்சாயதே க்ஷீரம் க்ஷீராத் சஞ்சாயதே விஷம் II
தேனு – பசு
பன்னகயோ இவ – பாம்பு இவற்றில் (பன்னகம் – பாம்பு)
பாத்ர அபாத்ர விவேக அஸ்தி – நல்லவன், கெட்டவன் ஆகியோரைப் பற்றிய விவேகம் உள்ளது.
த்ருணாத் சஞ்சாயதே க்ஷீரம் – புல்லைத் தின்று பாலாக மாற்றுகிறது (பசு)
க்ஷீராத் சஞ்சாயதே விஷம் – பாலைக் குடித்து விஷமாக மாற்றுகிறது (பாம்பு)
சரி கெட்டவரின் லக்ஷணம் என்ன?
தூர்த்த லக்ஷணம் பற்றி சுபாஷித ரத்னாகார பாண்டாரத்தில் வரும் சுபாஷிதம் தெளிவாக விளக்கத்தைத் தருகிறது.
முகம் பத்மதளாகாரம் – தூர்த்தனைப் பார்த்தால் தாமரை போன்ற முகம் இருக்கும்
வாணி சந்தன ஷீலதா – பேச்சோ சந்தனம் போல குளுமையாக இருக்கும்
ஹ்ருதயம் க்ரோத சம்யுக்தம் – இதயமோ கோபத்தால் கொப்பளிக்கும்
த்ரிவிதம் தூர்த்த லக்ஷணம் – இப்படி மூன்று விதமாக கெட்டவனின் லக்ஷணத்தை அறிந்து கொள்ள வேண்டும்
முகம் பத்மதளாகாரம் வாணி சந்தன ஷீலதா I
ஹ்ருதயம் க்ரோத சம்யுக்தம் த்ரிவிதம் தூர்த்த லக்ஷணம் II
இது தான் தூர்த்தனின் லக்ஷணம்! இவர்களைப் பார்த்தவுடன் இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்!
***************
contact swami_48@yahoo.com (Pictures rae used from different sources.Thanks.
You must be logged in to post a comment.