Post No. 859 Date 23 February 2014
கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 859 தேதி 23 பிப்ரவரி 2014
எச்சரிக்கை!!
‘’16.000 பெண்களுடன் கிருஷ்ணன் ஆடினான் என்பதை நம்புவோர், அவன் 16,000 பேருடன் ஒரே நேரத்தில் இருந்தான் என்று புராணங்கள் சொல்லுவதையும் நம்பத் தயாராக இருக்க வேண்டும். கிருஷ்ணன் செய்த மஹா அற்புதங்களையும் நம்ப வேண்டும். எனக்குப் இடித்த காமச் சேட்டைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுவேன். மற்றவற்றை ஒதுக்கிவிடுவேன் என்று கூறுவது உங்கள் அறியாமைக்கு விளக்குப் போட்டுக் காட்டியதாகி விடும். ‘’நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு’’ என்றும், ‘’வெள்ளத்து அனையது மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’’ என்ற வள்ளுவன் கூறிய சத்திய வாக்கினையும் நினைவிற் கொள்க’’.
நான் மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்ககூட மாணவனாக இருந்த போது வடக்கு மாசிவீதியில் உள்ள எங்கள் வீட்டுக்கு மாதந்தோறும் அழகான கிறிஸ்தவப் பெண்கள் வந்து கதவைத் தட்டுவார்கள். கையில் பைபிளும் பல துண்டுப் பிரசுரங்களும் இருக்கும். மெதுவாகப் பேச்சுக் கொடுப்பார்கள். பிறகு கிருஷ்ணனைத் தாக்கத் துவங்குவார்கள். அவர் 16,000 பெண்களுடன் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? என்று. இதற்குள் என் அண்ணன் தம்பிகள் எல்லோரும் வாசலுக்கு வந்து விடுவார்கள்.
ஏசு பெருமான் 13 வயது முதல் 30 வயது வரை எங்கு இருந்தார் என்று பைபிள் கூறவில்லையே! அவர் இமய மலை காடுகளுக்கு வந்து உபநிஷதத்தைப் படித்துவிட்டு ஆட்டு இடையர்களுக்கு எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு சொன்னார். அது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்போம். விவாதம் சூடு பிடிக்கும்.
இதற்குள் மதுரை ஆதீனகர்த்தர் போட்ட துண்டுப் பிரசுரத்துடன் என் சகோதரர்கள் மற்ற கேள்விகளை எழுப்புவர். உலகம் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்கிறீர்களே. அறிவியலுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லையே? கான்ஸ்டாண்டி நோபிளில் ஆயிரக் கணக்கான வகை பைபிள்களைப் போட்டு எரித்துவிட்டு மிச்சம் வைத்திருக்கும் ஒரே பைபிளிலும் ஏசுவின் இளமைக் காலத்தை அடியோடு மறைத்துவிட்டீர்களே? ஏசு பெருமான் சாகும் போது “ஏலி ஏலி லாமா சபக்தானி” (ஏ தேவனே! ஏ தேவனே! ஏன் என்னைக் கை விட்டீர்?) என்று கூக்குரல் எழுப்பியது ஏன்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, நைஸாக நழுவி விடுவர் அந்தப் பெண்கள்!
இதெல்லாம் என்ன பழைய கதை? “உலகமே ஒன்று, ஒரே கடவுள், நமக்கு ஏன் வம்பு?” என்று பேசாமல் இருந்துவிடும் இந்துக்களும் உண்டு. அப்படிப் பேசாமல் இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆயினும் விட மாட்டேன் என்கிறார்களே!
வெண்டி டோனிகர் என்ற அமெரிக்க பெண்மணி இந்துமதம் பற்றி விஷம் கக்கி எழுதிய புத்தகம் சில வாரங்களாக பெரிய சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்..காரர்கள் கோர்ட்டில் வழக்கு போட்டவுடன் ‘பெங்குவின்’ நிறுவனம் அந்தபுத்தகத்தை விலக்கிக் கொண்டுவிட்டது. வெண்டி டோனிகருக்கு “செக்ஸ்’ தவிர வேறு எதுவும் தெரியாது, சிவன், காளி, கிருஷ்ணன் எல்லாவற்றிலும் செக்ஸைக் காணும் ஒரு பெண்!
அதுமட்டுமல்ல. அண்மையில் ரஷ்யாவில் பகவத் கீதை ஒரு வன்முறைப் புத்தகம் என்று கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்தது. அதுவும் தள்ளுபடி ஆனது.
கோபியர் பற்றிய குறிப்பு சங்கத் தமிழ் இலக்கியத்தில்தான் முதலில் வருகிறது. பின்னர்தான் சம்ஸ்கிருத இலக்கியத்தில் வருகிறது!!
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!!!
இதைவிட போலந்தில் ஒரு சுவையான வழக்கு நடந்தது.. அதில் வழக்குப்போட்ட கிறிஸ்தவ பெண்ணே பதில் சொல்லாமல் திணறவே வழக்கு தள்ளுபடி ஆனது.
கிருஷ்ணன் 16,000 கோபியர் என்ற பெண்களைக் கல்யாணம் செய்தார். ஒழுக்கம் கெட்ட அவரைப் போய் இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் கும்பிடுவதால் இந்த இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவ கன்னிமார்கள் (நன்) வழக்கு தொடுத்தனர். உடனே இந்து தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், “ ஐயா, சகோதரி, கன்னிமார் / நன் ஆகப் பதவியேற்றபோது எடுத்த சத்திய வாக்குப் பிரமாணத்தை வழக்கு மன்றத்தில் உரத்த குரலில் மீண்டும் ஒரு முறை கூறச் சொல்லுங்கள்” என்றார். அந்தப் பெண் மறுத்துவிட்டார்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.!!!!
கிறிஸ்தப் பெண்கள் ஏசுவைக் கல்யாணம் செய்துகொள்வதாக சத்தியப் பிரமாணம் (உறுதிமொழி) எடுத்து கன்னிமார் ஆவர்.
கிருஷ்ணனுக்கு 16,000 பேர்தான் மனைவியர். இவர்கள் வணங்கும் ஏசுவுக்கோ மில்லியன் கணக்கில் மனைவிமார்கள் என்று இந்து தரப்பு வழக்கு அறிஞர் பேசி முத்தாய்ப்பு வைத்தார்!!!
இந்த கோபியர் விஷயம் ஓயவே மாட்டேன் என்கிறது. சுவாமி விவேகாநந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப்பற்றி ஆக்ரோஷமான சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதைத் தனியாகத் தருகிறேன். “ முட்டாள்களே, இந்தப் புனிதமான பக்தியைப் புரிந்துகொள்ள முதலில் உள்ளம் புனிதமாக வேண்டும்” என்று சாடுகிறார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கோபியரின் பக்தி பற்றி சில கதைகளும் உவமைகளும் தருகிறார். அதையும் தனியாகத் தருகிறேன். இப்போது ஒரே ஒரு குறிப்பை மற்றும் படியுங்கள்:
ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் எழுதுகிறார்:
பூர்ணாவதாரமாகிய கிருஷ்ணனுடைய விளையாட்டுகளை உள்ளபடி அறிந்து கொள்கிறவர்கள் கடவுள் தத்துவத்தையே அறிபவர் ஆகின்றனர். கிருஷ்ணனுடைய ஒவ்வொரு செயலும் தர்மத்துக்கு விளக்கமாகிறது. அவன் ஆற்றிய வினைகள் எல்லாம் அறச்செயலகள் ஆகின்றன. தர்மத்துக்கு அன்னியமான செயலை அவன் ஒரு தடவையிலாவது மறந்தும் செய்தது கிடையாது. அவைகளுள் சிலவற்றை ஈண்டு ஆரய்ச்சிக்கு எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.
அவன் சிறு பிள்ளையாய் இருந்தபொழுது கோபியர்களுக்கு முன் எச்சரிக்கை செய்துவிட்டு வெண்ணெயைத் திருடி மற்ற சிறுவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவந்தான். அக் காலத்தில் செல்வத்தின் சின்னமாய் இருந்தது வெண்ணெய். செல்வத்தைத் தேடிப் பிறர்க்குப் பயன்படாது அடைத்து வைத்துவிட்டால் தெய்வச் செயலானது அந்தச் செல்வத்தைத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது காலமெல்லாம் நிகழ்கின்ற நிகழ்ச்சி. இவ்வுண்மையை கிருஷ்ணன் தனது விளையாட்டின் மூலம் விளக்கினான்.
அவன் சுமார் ஏழு வயது சிறுவனாய் இருந்தபொழுது யமுனையில் நீராடிக் கொண்டிருந்த கோபியர்களுடைய ஆடைகளை எல்லாம் ஒரு மரத்தின் மீது கொண்டுபோய் வைத்துவிட்டான். அவர்கள் நதியிலிருந்து வெளியே வந்து கேட்டால் துணிகளைத் திருப்பித் தருவதாகத் தெரிவித்தான். அவன் ஏன் இப்படிச் செய்தான் என்பது பலருக்கு விளங்குவதில்லை. தங்களுக்குத் தூய பக்தியைத் தந்தருள வேண்டும் என்று கோபியர்கள் கிருஷ்ணனிடம் வேண்டினார்கள் அதற்கு அவர்களுக்கு இன்னும் பரிபக்குவம் வரவில்லை என்று கிருஷ்ணன் சொன்னான்.
யாரிடத்தில் உடலைப் பற்றிய உணர்ச்சி இருக்கிறதோ அவருக்கு பராபக்தி உருஎடுக்காது.. சிறு குழந்தைக்கு உடலைப் பற்றிய உணர்ச்சி இல்லை. ஆண், பெண் என்ற வேற்றுமை இல்லை. நிர்வாணமாக உலவுவதில் சிறு குழந்தைகளுக்குச் சிறிதும் சங்கோஜம் இல்லை. முதியவர்களுள் யாருக்கு உடலைப் பற்றிய உணர்வு தானாக அகன்று போகிறதோ அவர்களுக்கு பராபக்தி உடனே வருகிறது.
These are not revealed unto the wise and learned but unto the babes—
வெறும் வாச ஞானம் பெற்றுள்ள பண்டிதர்களுக்கு விளங்காத பரமார்த்திகப் பேருண்மைகள் சிறு குழந்தைகளுக்கு விளங்குகின்றன என்று ஏசுநாதர் புகட்டிய கோட்பாட்டுக்கு விளக்கமாக கிருஷ்ணனுடைய செயல் வந்தமைகிறது. கிருஷ்ணன் பல்லாயிரம் கோபியர்களுக்கு நாதன் என்கின்ற உண்மை எல்லோருக்கும் புலப்படுவதில்லை. உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே கணவன் என்கின்ற கோட்பாட்டைக் கிருஷ்ணன் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதே விளக்கிக் காட்டினான்.
பூரண அவதாரமாகிய இந்தக் கிருஷ்ணனைப் பற்றி ஓயாது துஷ்பிரசாரம் செய்வது கிருஸ்தவ மதப் பிரசார அலுவலாய் இருந்து வருகிறது. அவன் தூர்த்தன் என்றும், திருடன் என்றும், ஒழுங்கு தவறியவன் என்றும் மேடைகளில் அவர்கள் பிரசங்கம் பண்ணுவதுண்டு. அத்தகையவனை கடவுள் என்று வணங்குகின்ற மஹாபாவத்தை ஹிந்துக்கள் செய்துவருகிறார்கள் என்றும் அவர்கள் போதிக்கிறார்கள்.
கிருஷ்ணனை மதிப்பிடுதல் மூலம் சமயத்துறையில் தங்களுடைய அறிவுத் திறன் எவ்வளவு தூரம் பரிபாகம் அடைந்திருக்கிறது என்பதையே இத்தகைய மதப் பிரசாரகர்கள் விளம்பரம் பண்ணுகிறார்கள். இவை போன்ற எண்ணிறந்த அவதூறுகளை அமைதியாகக் கேட்டுவிட்டுப் போவது ஹிந்துக்களுடைய இயல்பு.”
—-பக்கம் 37—40, ஹிந்து மதமும் கிறிஸ்தவ மதமும், ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்ததுறை- 639 115, வெளியீடு ஆண்டு 1995
1995ல் எட்டாம் பதிப்பாக சுவாமி சித்பவானந்தர் இதை வெளியிட்டு இருக்கிறார். இப்போது அமெரிக்கப் பெண்மணி வெண்டி டோனிகர் எழுதிய புத்தகமும், ரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளில் கிருஷ்ண பரமாத்மா மீது வழக்கு போட்டதும் இன்னும் நிலைமை மாற வில்லை என்பதைக் காட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால் 125 ஆண்டுகளுக்கு முன் விவேகாநந்தரும் இதே தலைப்பில் பேசி வெளிநாட்டுக்காரர்களிச் சாடி இருக்கிறார். அதைத் தனியே காண்போம்.
வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி— என்று இவர்களைப் பார்த்த்துச் சீறினான் பாரதி.
நாமும் சீற வேண்டாமா?
You must be logged in to post a comment.