Post No 861 Date: 24 February 2014
ராமாயண வழிகாட்டி அத்தியாயம் 16
By ச.நாகராஜன்
ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் நூறாவது ஸர்க்கத்தில் ஸ்ரீ ராமர் பரதனை நோக்கிக் கேட்கும் கேள்விகள் பல. பொருள் பொதிந்த இவற்றுள் இன்னொரு ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-
தச பஞ்ச சதுர்வர்கான்சப்தவர்காஸ்ச தத்தவத: I
அஷ்டவர்க த்ரிவர்க ச வித்யாஸ்திஸ்ரஸ்ய ராகவ II
ராகவ – பரத! தச – பத்து பஞ்ச – ஐந்து சதுர்வர்கான் – நான்கு வர்க்கங்களையும் சப்தவர்கான் ச – ஏழு வர்க்கங்களையும் அஷ்டவர்கான் – எட்டு வர்க்கங்களையும் த்ரிவர்க ச – மூன்று வர்க்கங்களையும் திஸ்ர வித்யா ச – மூன்று வித்தைகளையும் தத்தவத – உள்ளபடி (ஆராய்ந்து அதற்கேற்றபடி நடந்து வருகிறாயா?)
இதில் பத்து, ஐந்து, நான்கு, மூன்றும் ஏழு, எட்டு வர்க்கம் என்ற எண்ணிக்கையால் ராமர் உரைப்பதை அவர் விளக்கவில்லை. சகல கலைகளையும் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர் ஆகிய நால்வரும் ஒரு சேரக் கற்றனர் என்பதால் எதிரிலிருக்கும் பரதனும் அதை அறிந்திருப்பான் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.
ராமர் கூறியதன் விளக்கத்தைப் பார்ப்போம்:-
பத்து என்று ராமர் குறிப்பிட்டது 1) வேட்டையாடுதல் 2) சூதாடல் 3) பகலில் தூங்குவது 4) வீண் பேச்சு 5) பெண்களின் சகவாசம் 6) குடி 7) நர்த்தனம் 8) பாட்டு 9) வாத்தியம் 10) தேசாடனம் ஆகியவற்றையே.
ஐந்து என்று குறிப்பிட்டது:- 1) பகைவரால் உண்டாகிய பகை 2) பொருளால் உண்டாகிய பகை 3) பெண்ணினால் உண்டாகிய் பகை 4) சொல்லால் உண்டாகிய பகை 5) குற்றத்தால் உண்டாகிய பகை.
நான்கு என்று குறிப்பிட்டது:- 1)சாம 2)தான 3)பேத 4) தண்டம்.
ஏழு என்று குறிப்பிட்டது:- 1) அரசன் 2) அமைச்சர் 3) நாடு 4) கோட்டை 5) பொருள் 6) சேனை 7) நட்பினர்.
எட்டு என்று குறிப்பிட்டது:- 1) கோள் உரைத்தல் 2) சாகசம் செய்தல் 3) வஞ்சனை 4) பிரணய கோபம் 5) பொறாமை 6) பொருளை இகழ்தல் 7) வன்மொழி கூறல் 8) கடும் தண்டனை தரல்
மூன்று என்று குறிப்பிட்டது :- 1) செய்யத் தகாத செயலில் முயலுதல் 2) செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் இருத்தல் 3) செய்ய வேண்டிய காரியங்களைக் காலமில்லாத காலத்தில் செய்தல்.
மூன்று வித்தைகள் என்று குறிப்பிட்டது: – 1) சுருதி 2) பயிர் செய்தல், வியாபாரம் 3) நீதி சாஸ்திரம் ஆகியவை.
நூறாவது ஸர்க்கத்தில் 68வது ஸ்லோகமாக அமைகிறது இது. இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்துப் பொருள் காண வேண்டும். அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்.
Swami_48@yahoo.com
You must be logged in to post a comment.