அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

For picture of Sambandar click on this
sambandar1

Post No.889 Dated 6th March 2014
By ச.நாகராஜன்

தமிழ் அறிந்தோர் பாக்கியசாலிகள்

தமிழராகப் பிறந்தவர்களும் தமிழைப் பயின்றவர்களும் பாக்கியசாலிகள். ஏனெனில் பெறுதற்கு அரிய சுவர்க்கத்தைப் பெற பக்தியுடன் உள்ளமுருக, தான் பாடிய பாடல்களைப் பாடினாலே போதும் என்று சொல்லக் கூடிய அற்புத பாலகரான சம்பந்தரின் பாடல்கள் தமிழ் மொழியில் தானே அமைந்திருக்கிறது.
நாளும் கோளும் நமக்கில்லை; எந்நாளும் நன்னாளே என்பதை ஆணித்தரமாக பிரகடனப்படுத்தும் திருஞான சம்பந்தரைப் போன்ற மாபெரும் கவிஞரையோ யோகியையோ பக்தரையோ பதினாறு வயதில் தன்னைச் சார்ந்தவர்களுடன் இறைஜோதியில் ஐக்கியமான இன்னொரு அவதாரத்தையோ மனித குல வரலாற்றிலேயே பார்க்க முடியாது!

அஷ்ட கிரஹ சேர்க்கையால் என்ன ஆகுமோ என்று நல்லோர்கள் உளம் பதை பதைக்க காஞ்சி பரமாசார்யாளை அணுகிய போது அவர் மென்மையாக ஞானசம்பந்தரின் கோளறு பதிகம் இருக்கிறதே அதை உள்ளமுருக எங்கும் இசைத்தாலே போதுமே என்றார். தமிழகமெங்கும் பட்டி தொட்டிகளில் எல்லாம் சம்பந்தரின் பதிகம் முழங்கியது. ஒரு வித தீங்கும் நம்மை அணுக வில்லை.

கோளறு பதிகம்

திருமறைக்காட்டில் அப்பரைக் கண்டு ஆனந்தம் கொண்ட சம்பந்தர் மதுரைக்கு கிளம்ப இருந்த தருணத்தில் அப்பர் தயங்கியவாறே நாள் சரியாக இல்லையே என்று கூற சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய பாடல்களே கோளறு பதிகம்.

சாதாரணமாக ஒருவர் ஒரு காரியத்தை உத்தேசித்து வெளியிடங்களுக்குச் செல்லக் கிளம்புகையில் பெரியோரோ அல்லது மனைவியோ மங்களாசாஸனம் செய்து வழி அனுப்புவது நமது பாரம்பரிய வழக்கம்.

பன்னிரெண்டு வருடங்கள் சிவபெருமானை ஆராதித்து ருக்மிணிக்கு புத்திரர்களைப் பெற்றதைச் சுட்டிக் காட்டி ஜாம்பவதி தனக்கும் புத்திரனை வேண்டி கிருஷ்ணரை வேண்டும் போது அவர் “சரி, விடை கொடு நான் கிளம்புகிறேன்” என்று இமயமலைக்குத் தவம் செய்யக் கிளம்பியபோது ஜாம்பவதி கூறிய மங்களாசாஸனம் இது:

“யாதவரே!க்ஷேமமுண்டாகவும் ஜெயமுண்டாகவும் செல்லக் கடவீர்! ப்ரம்மா, சிவன், காஸ்யபர்,நதிகள்,தேவர்கள் புண்யக்ஷேத்திரங்கள், ஓஷதிகள், த்ரேதாக்னிகள், வேதங்கள், ரிஷிக்கூட்டங்கள், யாகங்கள், கடல்கள்,தக்ஷிணைகள்,ஸாமங்கள்,நக்ஷத்ரங்கள்,பித்ரு தேவதைகள், நவக்ரஹங்கள்,தேவபத்தினிகள், தேவகன்னிகைகள், தேவமாதர்கள், மன்வந்தரங்கள், பசுக்கள், சந்திரன், சூர்யன், விஷ்ணு, காயத்ரி, ப்ரம்மவித்தை, ருதுக்கள், ஆண்டுகள், க்ஷணம், லவம், முகூர்த்தம்,நிமிஷம், யுகம் இவையெல்லாம் உமது மனத்திற்கு அனுகூலமாக நீர் செல்லுமிடமெல்லாம் சுகமாக உம்மைக் காப்பாற்றக் கடவன. குற்றமற்றவரே! நீர் ஜாக்கிரதையோடு க்ஷேமமாக வழியில் செல்லும்” (அனுசாஸனபர்வம் 45ஆம் அத்தியாயம், மஹாபாரதம்).

ஒரு காரியத்தை வெற்றிகரமாக ஆக்க எத்தனை தெய்வ சக்திகளும் இயற்கை சக்திகளும் நமக்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்பதை இதைப் பார்த்தாலேயே தெரிந்து கொள்ளலாம்.
ஆக சூதிலும் வாதிலும் வல்ல புத்த மற்றும் சமணர்களின் இருப்பிடத்திற்கே செல்லும் சிறு குழந்தையான சம்பந்தரை (தந்தை நிகர்த்த!) அப்பர் கவலையுடன் பார்த்துக் கூறியவை சரி தானே! அவரது கவலையால் சம்பந்தர் கோளறு பதிகம் அருள, தமிழ் அறிந்த அனைவருக்கும் சாசுவதமாக வானில் அரசாளும் வரம் உத்தரவாதமாகக் கிடைத்தது (அப்பருக்கு இப்போது வாழும் இனி வரவிருக்கும் தமிழர்களின் நன்றி!)

சம்பந்தர் மிக வேகமாக வேயுறு தோளிபங்கன் என்று தொடங்கி கோளறு பதிகத்தை அருளினார்.

(பாடல் 1இல்)ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 2இல்)ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாட்கள் அவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்ல
(பாடல் 3இல்)திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும் அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 4இல்)கொதி உறு காலன் அங்கி நமனொடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 5இல்)வெஞ்சிண அவுணரோடும் உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல

(பாடல் 6இல்) கோளரி உழுவையோடு கொலை யானை கேழல்
கொடு நாகமொடு கரடி ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 7இல்) வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பத்தும்
வினை ஆன வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 8இல்) ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 9இல்) மலர்மிசையோனும் மாலும் மறையோடும் தேவர்
வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல
(பாடல் 10இல்) புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல
என்று பாடி மனிதனுக்குத் தேவையான சகல சக்திகளின் அனுக்ரஹத்தையும் தரும் திருநீறு செம்மை திடமே என பிரகடனப்படுத்திக் கிளம்பி விடுகிறார்.

ஆனால் பதிகம் தொறும் இறுதியான பதினோராம் பாட்டிலே பதிகப் பயனைச் சொல்லும் பழக்கமுடைய “நம் பந்தம் போக்க வந்த” சம்பந்தர் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறார் :-
“ஞான முனிவன் தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர்; ஆணை நமதே” என்ற அவரது கம்பீரமான அருளுரைக்கு இணையாகத் தமிழ் மொழியில் இன்னொரு ஆணையும் இல்லை; அதை அதிகாரத்துடன் (AUTHORITY) சொல்ல இதுவரை யாரும் பிறக்கவும் இல்லை.

சம்பந்தர் பதினாறே வயதிற்குள் பாடிய பதிகங்கள் பதினாறாயிரம். நமக்குக் கிடைத்தவையோ வெறும் 384. ஒரு பதிகம் எனப்படுவது பத்துப் பாடல்களைக் கொண்டது. பதினோறாவது பாடல் பதிகம் பாடினால் ஏற்படும் பயனைச் சொல்வது. ஆக பதினாறாயிரம் பதிகங்கள் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் பாடல்களைக் கொண்டிருக்கும். இன்று நம்மிடம் உள்ள பாடல்களோ எண்ணிக்கையில் சுமார் 4147 தான்!
இந்தப் பாடல்களில் இதே போல இன்னும் மூன்று இடங்களில் ஆணை நமதே என்று ஆணையிடுகிறார்.

sambandar2
Please click here for the picture of Sambandar

ஆணை நமதே பதிகங்கள்

திருநனிபள்ளி தலத்தில், ‘காரைகள் கூகை முல்லை’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”நனி பள்ளி உள்க; வினை கெடுதல் ஆணை நமதே!” என்றும் திருவேதிகுடி தலத்தில், ‘நீறு வரி ஆடு அரவோடு’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப்பாடலில்,”இமையோர் அந்த உலகு எய்தி அரசாளும் அதுவே சரதம்; ஆணை நமதே!” என்றும்
திருக்கழுமலம் தலத்தில், ‘மடல் மலி கொன்றை” என்று தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”வான் இடை வாழ்வர்,மண்மிசைப் பிறவார்,மற்று இதற்கு ஆணையும் நமதே” என்றும் கூறி தன் முத்திரையுடன் கூடிய ஆணையை மொத்தம் நான்கு முறை பிறப்பிக்கிறார்.

இந்த நான்கு பதிகங்களையும் உளம் உருக ஓதுவார்க்கு துயரம் இல்லை; மண்மிசைப் பிறக்க மாட்டார், வானில் அரசாள்வர் என்பது உறுதி!

இதே போல திருவெண்காடு தலத்தில் ‘மந்திரம்’ எனத் தொடங்கும் பதிகத்தில் அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே என்றும், திருப்பூந்தராய் தலத்தில் ‘மின் அன எயிறு’ எனத் தொடங்கும் பதிகத்தில் சிவகதி சேர்தல் திண்ணமே என்றும் சீர்காழி தலத்தில் ‘நம் பொருள் நம் மக்கள்’ எனத் தொடங்கும் பதிகத்தில் மிக்க இன்பம் எய்தி வீற்று இருந்து வாழ்தல் மெய்ம்மையே என்றும் (போனஸாக) பக்தர்களுக்குத் தனது ஆணைப் பரிசுகளை வழங்குகிறார்.

ஆணை நமதென்னவலான்!

இப்படி இவர் ஆணையிட்ட திறத்தையும் அதிகாரத்தையும் கண்டு வியந்த நம்பியாண்டார் நம்பி தனது ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில் (65 அடிகள் கொண்ட பாடலில் 45ஆம் அடியில்) ‘திருவடியை அத்திக்கும் பத்தரெதிர் ஆணை நமதென்னவலான்” என்று பாடுகிறார்.

ஆணை நமதே என்று சொல்லக்கூடிய வல்லவரான சம்பந்தர் முருகனின் அவதாரம் என திடமுடன் உரைத்த அருணகிரிநாதர், கந்தர் அந்தாதியில் (29ஆம் பாடலில்) “திகழு மலங்கற் குரைத்தோனலதில்லை தெய்வங்களே” என்று கூறி சம்பந்தப் பெருமான் ஆகிய குமரக் கடவுள் அன்றி வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் இல்லை என்று கூறுகிறார். இதே பாடலில் சம்பந்தர் பதிகம் ஓதும் பயனைக் கூறுவதையும் வியந்து போற்றுகிறார்.

வள்ளலாரோ சம்பந்தரை தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டு உத்தம சுத்த சற்குருவே என்றும் இன்னும் பல பாடல்களில் சிவ குருவே, என் உயிர் எனும் குருவே என்றும் அவரை பக்தியுடன் வியந்து ஓதுகிறார்.ஆதி சங்கரரோ சௌந்தர்யலஹரியில் 75ஆம் ஸ்லோகத்தில் தேவியின் பாலை அருந்தி கவிதை மழை பொழிந்த திராவிட சிசு என்று அவரைப் போற்றுகிறார்.

சம்பந்தரின் அருள் செயல்கள்

ஏராளமான தெய்வீக அற்புதங்களைக் காட்டி அனைவரையும் ஆட்கொண்டவர் சம்பந்தர். அந்த அற்புதங்களில் முக்கியமானவற்றை 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தான் பாடிய திருக்களிற்றுப்படியார் என்ற நூலில் இப்படிப் போற்றுகிறார்:

ஓடம், சிவிகை,உலவாக்கிழி, அடைக்கப்
பாடல்,பனை, தாளம், பாலை நெய்தல் – ஏடு எதிர், வெய்யு
என்புக்கு உயிர் கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்
ஓடம் – திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (கொட்டமே எனத் தொடங்கும்)
சிவிகை – நெல்வாயில் அரத்துறைப் பதிகம்
உலவாக்கிழி – திருவாவடுதுறைப்பதிகம்
அடைக்கப்பாடல் – மறைக்காட்டுச் ‘சதுரம் மறை’ப் பதிகம்
பனை –திரு ஓத்தூர்ப் பதிகம்
தாளம் – திருக்கோலக்காப் பதிகம்
பாலை நெய்தல் – திருநனிப்பள்ளிப் பதிகம் (காரைகள் எனத் தொடங்கும்)
ஏடு எதிர் – திருப்பாசுரம் (வாழ்க அந்தணர் எனத் தொடங்கும்)
வெப்பு – திருநீலகண்டப்பதிகம் (அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும்)
என்புக்கு உயிர் கொடுத்தல் – திரு மயிலாப்பூர்ப் பதிகம் (மட்டு இட்ட எனத் தொடங்கும்).

ஆணையிடும் அதிகார ரகசியம்!

சம்பந்தரின் புகழ் எழுத்துக்கும் மனிதப் புலன் உணர்வுக்கும் அப்பாற்பட்டது. அவரால் எப்படி இப்படி அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்று ஆணையிட முடிந்தது என்று அதிசயித்து வியப்போருக்கு அவரே தன் பாடலில் பதிலைத் தந்து விடுகிறார்.
திருஇலம்பையங்கோட்டூர் தலத்தில் ( சென்னைக்கு அருகே திருவிற்கோல தலத்திற்கு அருகில் கூவம் ஆற்றின் மறுகரையில் உள்ளது இத்தலம்) பத்துப் பாடல்களிலும் ஒவ்வொரு பாடலின் இரண்டாம் அடியிலும் “எனதுரை தனதுரையாக” என்று அருளுகிறார்.
அதாவது முருகனாக வந்த சம்பந்தரின் உரை சிவபிரானது உரையே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. சிவனது உரை என்னும் போதே ஆணை நமதே என்று திருஞானசம்பந்தர் சொல்வதற்கான (அதாரிடி எனப்படும்) அதிகாரத்தின் காரணமும் நமக்குத் தெளிவுபடுகிறது.
சம்பந்தர் அருளியதெல்லாம் முருகன் அருளியது; அது சிவபிரானின் உரை என்ற முத்திரையையும் பெற்றது!

சிவப்பிரகாசரின் புகழ்மாலை

சிவப்பிரகாச சுவாமிகள் தனது நால்வர் நான்மணி மாலையில் பாடிய பாடலை மனத்தில் இருத்தி ஞானசம்பந்தரை வணங்கி அவர் இட்ட ஆணையைப் பயன்படுத்தி அடியாரான எல்லோரும் வானில் அரசாளலாம்!

வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலம் கல்வி
நல்லாதரவு இன்ப ஞானங்கள் – எல்லாம்
திருஞான சம்பந்தன் சேவடியே என்னும்
ஒரு ஞான சம்பந்தமுற்று!

சின்ன உண்மை:
சோழ நாட்டில் சீர்காழி திருத்தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்த திருஞானசம்பந்தரின் குரு பூஜை வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.தெய்வத் தமிழ் தினம் இது!

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2013இல் வெளியாகியுள்ள கட்டுரை.

*************************************

Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: