கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன், கட்டுரை எண் 914, தேதி 18-3-2014
ஞான தீபம், ஞான வேள்வி, ஞானப் படகு, ஞான யோகம்: பகவத் கீதையில் சுவையான சொற்கள்
பகவத் கீதையில் பல சுவையான சொற்கள் இருக்கின்றன. ‘ஞானம்’ என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லின் அழகே அழகு. எப்படி ‘தர்மம்’ என்பதை, என்னதான் அழகாக மொழி பெயர்த்தாலும், அந்தச் சொல்லின் முழுப் பொருளையும் தர முடியாதோ, அதே போல ஞானம் என்ற சொல்லும் மொழி பெயர்ப்பின் வீச்சுக்குள் வராது. ஆகையால் தெய்வத் தமிழில் கவி பாடிய செஞ்சொற் செம்மல்கள் இந்த ஞானத்தை கூடிய மட்டிலும் அப்படியே பயன்படுத்துவர்.
பகவத் கீதையில் “ஞான” என்ற அடைமொழியுடன் வரும் சில இடங்களை மட்டும் காண்போம்:
ஞானப் ப்லவேன = ஞானப் படகு (4 -36)
எல்லாப் பாவிகளுக்கும் மேலான கொடும் பாவியாக நீ இருந்தாலும், எல்லா பாவங்களையும் ஞானப் படகு ஒன்றினாலேயே நீ நன்கு கடந்திடுவாய்.என்கிறார் கிருஷ்ணன்.
பாவ மன்னிப்பு இந்து மதத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. பிராமணர்கள் தினமும் முப்போது செய்யும் சந்தியாவந்தனத்தில் பாவ மன்னிப்பு மந்திரமும் (ஸூர்யஸ்ச……..) உண்டு.
அப்பர் தேவாரத்தில் பகவத் கீதைச் சொற்கள் ஏராளமாகப் பயிலப்படுகின்றன. மிகவும் குறிப்பிடத்தக்கது
ஞானப் பெருங்கடலுக்கு ஒரு கப்பல்!
நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன் காண்,
ஞானப் பெருங்கடலுக்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன்தான் காண்
புரிசடை மேல் புனல் ஏற்ற புனிதன் காண்
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான் காண்,
தன்மைக்கண் தானே காண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்; அவன் என் கண் உள்ளானே.
சிவனை ஞானக் கடலில் போகும் கப்பல் என்று அப்பர் வருணிக்கிறார். அதாவது ஞானத்திலேயே மிதப்பவர்.
He is Narayanan; He is Brahma
He is in the four Vedas;
He is the perfect one
Who is like a ship on the great ocean of wisdom – 78, 6th Tirumurai
ஞான தபஸ்= ஞான தவம் (4-10)
மனிதன் எப்படி தெய்வம் ஆகலாம் என்று கிருஷ்ணன் இதில் கூறுகிறார். ஆசையும் பயமும் கோபமும் இல்லாதவர்களுமமென் மயமானவர்களும் என்னைச் சரணடைந்தவர்களும் பலர் ஞானமாகிய தவத்தால் என் தன்மையை அடைந்திருக்கிறார்கள்.
இதற்கு அண்ணா அவர்கள் எழுதிய உரையில் பின்வரும் விளக்கம் தருகிறார்: நெருப்பில் இட்ட இரும்பு நெருப்பின் வெப்பத்தையும் ஒளியையும் பெற்று பிரகாசம் அடைவது போல ஜீவனும் ஈஸ்வரனைப் போல ஞானத்தையும் ஆனந்தத்தையும் எய்துகிறான்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் — என்று வள்ளுவனும் கூறுவது இதைத்தான்.
ஞான தீபம்= ஞான விளக்கு (10–11)
பக்தர்களின் உள்ளத்தில் நிலைபெற்று என் அருளால் பிரகாசிக்கும் ஞான தீபத்தால் அஞ்ஞான இருளை நாசம் செய்கிறேன்
இதற்கு அண்ணா (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை) எழுதிய உரையில் சில பாடல்களை மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது:–
போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – (தாயுமானவர்)
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா – நன்புருகு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் — (பூதத்தாழ்வார்)
ஞான அக்னி = ஞானத் தீ ( 4-19 )
எவனுடைய எல்லா கருமங்களும் ஆசையும், அதற்குக் காரணமான சங்கல்பமும் அறுபட்டு, ஞானத் தீயில் பொசுங்கிய வினைகளை உடைய அவனை பண்டிதன் என்று அறிவாளிகள் கூறுவர்.
ஞான சக்ஷு = ஞானக் கண் (15 – 10)
ஞானக் கண் உடையவர்களே கடவுளைக் காண்கிறார்கள். மற்றவர்கள் காண்பதில்லை.
ஞான யக்ஞம் = ஞான வேள்வி ( 4-33, 9-15, 18-70 )
பொருள்களைக் கொண்டு செய்யும் வேள்விகளை விட ஞான வேள்வி சிறந்தது. எல்லா கர்மங்களும் ஞானத்தில் பூர்த்தி அடைகின்றது.
பகவத் கீதையைக் கேட்பதும் படிப்பதும் கூட ஞான வேள்வி என்று கிருஷ்ணனே கூறுகிறார்: — எவன் இந்த நம்முடைய புண்ணியம் வாய்ந்த சம்பாஷணையைப் பாராயணம் செய்கிறானோ அவன் ஞான வேள்வியால் என்னைப் பூஜித்ததாகக் கருதுகின்றேன்.
ஞான யோகம் (3 -3, 16 – 1)
பாபமற்றவனே! ஆதியில் இருவகையான நிஷ்டைகள் என்னால் கூறப்பட்டன. ஞான யோகத்தால் சாங்கியர்களுக்கும் கரும யோகத்தால் யோகியருக்கும்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதல் அண்மைக் கால கவிஞன் பாரதி வரை எல்லோரும் ஞானக் கண், ஞான வேள்வி, ஞான வாள் முதலிய சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
“பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண்விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயை எல்லாம் ஞானம் எனும்
வாளாலே அறுத்துத் தள்ளி….. (பாரதியார் பாடல்)
திருமூலர், பல இடங்களில் ஞான என்ற சொல்லைப் பயன்படுத்துவதும் படித்து இன்புறத்தக்கது. இதோ திருமந்திரத்தில் ஞானம் வரும் சில இடங்கள்:
ஞானக் கொழுந்து (406), ஞானத் தலைவன் (878), ஞானக் கொம்பு (1033), ஞானப் பொருள் (1335), ஞானபூபதி, ஞானோதயம் (1403) ஞான நிர்வாணம் (1449), ஞான சமாதி (1605) ஞான வேடம் (1640), ஞான முத்திரை (1860), ஞானத் தறி (2000)
இது முழுப் பட்டியல் அல்ல. இடையில் கண்ட சில பாடல்களில் இருந்து மட்டும் எடுக்கப்பட்டவை. ஞான என்ற சொல்லில் துவங்கும் பாடல்களே 15க்கு மேல் உள.
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான் எதிர் ஆரே (Tirumanthiram)
எமன் வந்தால் ஞான வாளால் அவனை வெற்றி கொள்வேன். சிவன் வந்தாலோ தயக்கமின்றி அவரோடு போவேன். பிறவிப் பிணி தொடர்வதற்கான காரணங்களை முன்னரே துண்டித்து விட்டேன். இனி தவ வலிமை பெற்றவர்களுக்கு எதிராக யாராவது நிற்கமுடியுமா? எனக்கு எதிரி எவரும் இல்லை.(Tirumanthiram)
ஞான சம்பந்தன்
பெயரிலேயே ஞானத்தைத் தாங்கிய பெருமை 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞான சம்பந்தரையே சாரும். அதற்குப் பின் இதே பெயரில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றினர். குறிப்பாக மகாராஷ்டிரத்தில் தோன்றிய ஞான தேவ் ஒருவர்.
தேவரத்தில் பல இடங்களில் ஞான சொற்களைக் காணலாம். அண்ணாமலையாரைப் போற்றிப் பாடிய துதியில் ஞானப் பிழம்பாய் நிற்கும் சிவனை ‘ஞானத் திரள்’ என்று சம்பந்தர் பாடுகிறார்.
‘ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்… தேவாரம்
இவ்வாறு நூற்றுக் கணக்கான இடங்களில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் நம்மை ஞானக் கடலில் நம்மை மூழ்கடிக்கின்றனர்!!
Contact swami_48@yahoo.com
************
Pictures are taken from various sites;thanks.
You must be logged in to post a comment.