Post No.916 dated 19th March 2014
ராமாயண வழிகாட்டி – அத்தியாயம் 20
ச.நாகராஜன்
உலகின் எந்த ஒரு இலக்கியத்திலும் இல்லாத ஒரு சம்பவத்தை ராமாயணம் எடுத்துக் கூறுகிறது. அண்ணனின் பாதுகையைத் தலையில் ஏந்தி எடுத்துச் சென்று அதற்குப் பட்டாபிஷேகம் செய்து அதை வைத்து நாடாளும் ஒரு அற்புதத் தம்பியை ராமாயணத்தில் மட்டுமே காண முடியும்.
பிதுர்வாக்ய பரிபாலனம் என்னும் பெரும் தர்மத்தை மேற்கொண்டு, “வனத்தில் 14 வருடம் வாசம் செய்வேன்.பின்பே அயோத்தி திரும்புவேன்” என்று உரைத்த ராமரிடம் அவரின் பாதுகையைத் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறான் பரதன்.
அயோத்யா காண்டத்தில் நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம் உருக்கமான ஒரு காட்சியை நம் முன் காட்டுகிறது.
அதிரோஹார்ய பாதாப்யாம் பாதுகே ஹேமபூஷிதே I ஏதே ஹி சர்வலோகஸ்ய யோகக்ஷேமம் விதாஸ்யத: II
(நூற்றிப்பன்னிரண்டாவது ஸர்க்கம், 21வது ஸ்லோகம்)
ஆர்ய – ஸ்வாமியே! ஹேமபூஷிதே – பொன்னால் அலங்கரிக்கப்பெற்ற பாதுகே – பாதுகைகளில் பாதாப்யாம் – திருவடிகளால் அதிரோஹ – ஏறி அருள்வீராக! ஹி ஏதே – ஏனெனில் இவைகள் சர்வலோகஸ்ய – எல்லா உலகத்தின் யோகக்ஷேமம் – யோகக்ஷேமத்தை விதாஸ்யத: – வகிக்கப் போகின்றன
பாதுகைகளைப் பெற்றுக் கொண்ட பரதன் தானும் பதினான்கு வருடங்கள் ஜடையும் மரவுரியும் தரிக்கப் போவதாகவும் பழங்களையும் கிழங்குகளையுமே உணவாகக் கொண்டு இருக்கப் போவதாகவும் கூறுகிறான்
பதினான்காவது வருடம் முடிந்ததும் மறுதினத்தில் ராமரைக் காணாவிடில் ‘அக்னியில் புகுவேன்’ (ஹுதாஷனம் ப்ரவேக்ஷ்யாமி) என்றும் உறுதியாகக் கூறுகிறான். பாதுகைகள் அயோத்தியை ஆளும் அற்புதத்தைப் புரிந்து ராம பக்திக்கு இலக்கணமாகவும் திகழ்கிறான் பரதன்!
வைஷ்ணவ ஆசார்யரான வேதாந்த தேசிகன் (கி.பி.1269-1370) பாதுகா ஸஹஸ்ரம் என்ற அற்புதமான நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் ஒரே இரவில் ஒரு ஜாமத்தில் இயற்றப்பட்டது. முதல் இரு ஜாமங்களில் யோகத்தில் ஆழ்ந்த வேதாந்த தேசிகர் மூன்றாம் ஜாமத்தில் 1008 அரிய ஸ்லோகங்களை யாத்து முடித்தார். பாதுகா ஸஹஸ்ரம் 32 பத்த்திகளைக் கொண்டுள்ளது. இதில் ப்ரஸ்தாவ பத்ததியில் இரண்டாவது ஸ்லோகத்தில் ஸ்ரீ ராம பாதுகையின் பெருமையை முதலில் உலகுக்குக் கொண்டு வந்த பரதனுக்கு என் முதல் நமஸ்காரம் என்று அருளியுள்ளார்.
பரதாய பரம் நமோஸ்து தஸ்மை பிரதம உதாஹரணாய பக்தி பாஜாம்I யத் உபக்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ:II
இந்த நூலில் அரிய சித்திர பந்தங்களைக் காண முடியும். கவிதையில் எத்தனை விதமான அரிய சுவைகள் உண்டோ அவை அனைத்தையும் தரும் இந்த அரிய பக்தி இலக்கியத்தை வைணவர்கள் தினசரி தங்கள் பாராயணத்தில் சொல்கின்றனர்.
வேதாந்த தேசிகனுக்கு முன்னோடியாக பாதுகையின் பிரபாவத்தை முதலில் கூறிய வால்மீகியின் ஸ்லோகங்கள் ஒப்பற்ற ஒரு தனி இடத்தைப் பிடிக்கின்றன!
Please read:
Why do Hindus worship Shoes? Posted here on 15th August 2012
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.