அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!

jill bolte

By S Nagarajan
Post No 951 Date 3rd April 2014

ச.நாகராஜன்

புத்தர் தரும் போதம்

புத்தரின் அருமையான போதனைகளைப் போதிக்கும் தம்ம பதத்தின் முதல் ஸ்லோகமே பெரும் உண்மையை விளக்கும் ஒன்று: “நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே அவற்றின் மொத்த விளைவாக நாம் வார்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறோம். யாருடைய மனத்தில் சுயநல எண்ணங்கள் உருவாகின்றனவோ அவர்கள் பேசும் போதும் செயலாற்றும் போதும் துன்பத்தையே விளைவிக்கிறார்கள்.எருதுகள் இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கரங்கள் அந்த எருதையே பின்பற்றுவது போல துன்பங்கள் அவர்களைப் பின் தொடர்கின்றன.”

யோக வாசிஷ்டம் தனது ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களில் இதையே விரிவாகக் கதைகள் மற்றும் உவமான உவமேயங்கள் மூலம் அழகுற விளக்குகிறது.இதை நவீன காலத்தில் விளக்கும் ஒரு அதிசய விஞ்ஞானி Jill Bolte Taylor ஜில் போல்ட் டெய்லர்!

மூளையியல் விஞ்ஞானி ஜில் போல்ட் டெய்லர்

உலகையே பரபரப்புள்ளாக்கி விற்பனையில் சாதனையைப் படைத்து வரும் ‘மை ஸ்ட்ரோக் ஆஃப் இன்சைட்’ My Stroke of Insight என்ற புத்தகம் ஜில் போல்ட் டெய்லர் (Jill Bolte Taylor) என்ற பெண்மணியின் அற்புத அனுபவத்தால் எழுதப்பட்ட ஒன்று.

1996ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று படுக்கையில் எழுந்திருந்த டெய்லர் தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து திகைத்தார். அப்போது அவருக்கு வயது 37 தான். இடது பக்க மூளையில் ஒரு ரத்த நாளம் வெடித்ததால் வந்த நோய் அது. அவரோ பிரபலமான மூளையியல் விஞ்ஞானி. ஹார்வர்டில் படித்தவர். அவரால் தனக்கு வந்த நோயை நம்பவே முடியவில்லை. மூன்று வாரங்கள் கழித்து டிசம்பர் 27ஆம் தேதி அவருக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. கோல்ப் பந்து அளவு இருந்த ஒரு கட்டி அவரது இடது பக்க மூளையை அழுத்தவே அவரால் பேச முடியவில்லை. அந்தக் கட்டியை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள்.

அவரால் படிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை. பேச முடியவில்லை. எதையும் நினைவில் கொண்டு வர முடியவில்லை. ஆனால் மூளை இயக்கத்தை நன்கு அறிந்த விஞ்ஞானியான அவர் தனது நோயுடன் வெற்றிகரமாகப் போராடி வெல்ல நிச்சயித்தார். இடது பக்க மூளை தர்க்க ரீதியாக சிந்தித்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வகைப்படுத்தி விளக்கி நன்கு மதிப்பிட்டு செயலாற்றுகையில் வலது பக்கமோ உள்ளுணர்வின் அடிப்படையில் நம்மை செயலாக்க வைக்கிறது. டெய்லர் இரண்டு பக்கங்களையும் சரியான விதத்தில் செயலாற்ற தனது உடல் மனம் ஆன்மா இந்த மூன்றையும் பயிற்றுவித்தார். வலது பக்க மூளையின் மூலம் உள்ளுணர்வு ஆற்றலை வளர்த்தார்.

My Stroke of Insight

பிரபஞ்ச ஆற்றலுடன் ஒருங்கிணைவதே வெற்றிக்கு வழி

“நானே ஆற்றல் மயம். என்னைச் சுற்றியுள்ள பெரும் ஆற்றலுடன் என்னை பிரக்ஞை மூலமாகவும் வலது பக்க மூளையினால் இணைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்” என்று பின்னால் அவர் விளக்கினார். இந்த பகுதியின் மூலம் உள்ளுக்குள் அமைதியைக் கொண்டு வர முடியும் என்பதை தேர்ந்த மூளை விஞ்ஞானியான அவர் எளிதில் உணர்ந்து கொண்டார். பிரபஞ்சத்தின் ஒரு கூறான நாம் அதனுடன் ஒன்றும் போது எல்லையற்ற ஆற்றல் நம்மை வந்தடைவதை அவர் அனுபவத்தால் உணர்ந்து கொண்டார்.

எட்டு வருட காலம் போராட்டம் தொடர்ந்தது. டெய்லர் விடவில்லை.இறுதியில் முழு ஆற்றலுடன் அவர் நோயிலிருந்து மீண்டார். தனது அனுபவங்களின் அடிப்படையில் அருமையான தனது ‘மை ஸ்ட்ரோக் ஆஃப் இன்சைட்’ என்ற புத்தகத்தை எழுதினார். அத்தோடு பக்கவாதம் மற்றும் இதர மன நோய்களினால் பாதிக்கப்பட்டோரிடம் எப்படி நடந்து கொண்டால் அவர்கள் எளிதில் மீள முடியும் என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்க ஆரம்பித்தார்.அவரது புத்தகம் 2008ஆம் ஆண்டின் நியூயார்க் பெஸ்ட் செல்லராக ஆனது.

ஓப்ரா வின்ஃப்ரே அவரைத் தனது பிரபலமான ஷோ நிகழ்ச்சிக்கு அழைத்தார். அவர் தனது அனுபவங்களை அதில் சொல்ல லட்சக்கணக்கானோர் பார்த்தனர். பலர் உருகி அழுதனர்.

brain

அமைதி சர்க்யூட் உருவாக வழி

யோகம் தியானம் மூலமாக உள்ளத்தில் ஒரு அமைதி சர்க்யூட்டை உருவாக்க முடியும் என்பது தான் அவர் தரும் சாரமான யோசனை!

இதையே தான் ஸ்வர யோகம் என்று நமது யோகிகள் கூறி வலது பக்க நாசியின் மூலமாகவும் இடது பக்க நாசியின் மூலமாகவும் இடது மற்றும் வலது பக்க மூளை பாகங்களைச் செம்மைப் படுத்த முடியும் என்பதை விளக்கினர். பிராணாயாமம் இதற்காகவே அமைக்கப்பட்டது. வலது பக்க மூளை சர்க்யூட் அமைதியை ஏற்படுத்தும் போது அது பிரபஞ்ச மனத்துடன் இணைந்து அனைத்தையும் அறிய வைக்கிறது. எண்வகை சித்திகளைத் தருகிறது.உலகில் சாந்தியை உருவாக்குகிறது.

நல்ல எண்ணங்களை வளர்க்கும் போது நல்லவராக வளர்கிறோம். அதன் உச்ச கட்டத்தில் ஞானியாக ஆகிறோம்.

இதை யோகிகள் சொல்வது ஒரு புறம் இருந்தாலும் ஒரு மூளையியல் விஞ்ஞானி பெரும் நோயால் எட்டு வருடங்கள் அவதிப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து அறிவியல் அடிப்படையில் சொல்லும் போது நமது யோகத்தின் வலிமையை உணர்ந்து அதிசயிக்கிறோம்!

சில நிமிட யோகப் பயிற்சி நம்மையும் மேம்படுத்தும்; உலகையும் வளமாக்கும் என்பது பொய்யல்ல; மெய்! விஞ்ஞானி தனது அனுபவத்தில் விளக்கும் மெய்யோ மெய்!!

(ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் ஜுன் 2013 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.)

This article was written by my brother S Nagarajan of Bangalore for Tamil magazine Jnana Alyam. Contact swami_48@yahoo.com
********************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: