புத்தகத்தில் இருந்து திரட்டி அளிப்பவர்; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 963 தேதி–8, ஏப்ரல் 2014.
“ மாஹிரி ராக ‘மா மவ ரகுவீர’ கீர்த்தனையில் ‘த்வாம் ஆஹூ: ஈசாதய: தத்வமிதி’ என்கிற சொற்றொடரால் சிவன் முதற்கொண்டு எல்லோரும் இராமரை தத்வ ஸ்ரூபமாகவே சொல்கிறார்கள் என்கிறார் தீக்ஷிதர்.
‘ராமச்சந்திரேன சம்ரக்ஷிதோஹம்’ என்கிற பாட்டில் பிரம்ம விஷ்ணு ருத்ரஸ்வரூபம் என்று போற்றுகிறார்.
ஸ்ரீ ரஞ்சனி ராக ‘ஸ்ரீ ராமசந்திரோ கீர்த்தனையில் விஸ்வாமித்ரருடைய யாகத்தைக் காப்பாற்றினது, தாடகை வதம், மிதிலா நகரப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதா கல்யாணம், பரசுராம கர்வ பங்கம் வரை எழுதிவிட்டார்.
அஹல்யைக்கு சாப விமோசனம் செய்தது’ ‘பாத ஜபாம் சுபாலித அஹல்யம் என்று ஓர் இடத்திலும் ‘அஹல்யா தேவி சாப விமோசனம் சுசரித்திரம்’ என்று மற்றோர் இடத்திலும் குறிப்பிடுகிறார்.
சுபாஹு மாரீச கர தூஷணாதி ஹரணாந்தக ரூபிணோ’ என்று சுபாஹு மாரீசன், கரன், தூஷணன் முதலியவர்களைக் கொன்றது தன்யாசிராக ‘இராமசந்திராதன்யம்’ கீர்த்தனையில் இடம் பெறுகிறது.
சபரி மோக்ஷம் ஒரு பாட்டில் சொல்லப்படுகிறது. தர்பசயனம், விபீஷணனை ரக்ஷித்தது, ராவணனைக் கொன்றது, வானரங்களுக்குப் ப்ரீதியாய் இருத்தல், அனுமனுக்கு மதிப்பு இவை ஆங்காங்கே காணப் படுகின்றன.
ஒரு பாட்டில் சாம தான பேதாதி சத்ஷஷ்ட்ய ஸஜ்ஜன பாலயஸ்ய துஷ்ட ஹரஸ்ய’ என்கிற சொற்றொடரில் சாம தான பேத தண்டம் என்கிற நால்வகை யுக்திகளையும் துஷ்டர்களை அடக்கி நல்லோர்களைக் காக்க கையண்டவர் இராமர் என்று வர்ணிக்கிறார்.
முடிவில் சிகரம் வைத்தாற் போல் எல்லோராலும் பாடப்படுகிற மணிரங்கு ராக, ‘மாமவ பட்டாபிராம’வில் அனுமனால் பாடப்பட்டு, பரத லக்ஷ்மண சத்ருக்ன விபீஷண சுக்ரீவ பிரமுகர்களால் சேவிக்கப்பட்டு, நவரத்ன மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்ஹாசனத்தில் சீதா சமேதராய் கொலுவிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியை அற்புதமாக நம்முன் கொண்டு வருகிறார்.”
உதவிய புஸ்தகம்:
“ஷண்மதமும் முத்துஸ்வாமி தீக்ஷதரும்” — எழுதியவர்: என்.பார்த்தசாரதி, மேற்கு மாம்பலம், சென்னை-33. இது ஒரு அருமையான புத்தகம் – 24 பக்கங்களில் ஒரு கலைக் களஞ்சியம் அளவுக்கு தகவல்கள் நிறைந்த நூல். சங்கீதப் ப்ரியர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.