உபநிஷதத்தில் நகைச்சுவை!

madhva2

உபநிஷத அற்புதங்கள்–Part 3; எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 998; தேதி 24th April 2014.

23.நூற்றுக்கும் மேலான உபநிஷத்துக்கள் இருந்த போதிலும் பத்து உபநிடதங்கள் மட்டும் முக்கியமானதாகவும் பழமையான தாகவும் கருதப்படுகின்றன. இவைகளுக்கே ஆதி சங்கரர் உரை (பாஷ்யம்) எழுதினார். அவையாவன: ஈச, கேன, கட, பிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய, தைத்ரீய, ஐதரேய, சாந்தோக்ய, பிருஹத்ஆரண்யக உபநிஷத்துகள். ஸ்ரீ சங்கர பகவத்பாதர், ஸ்வேதஸ்வதார உபநிஷத்திற்கும் உரை எழுதியதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். கௌசீதகி, மஹநாராயண, பைங்கள, ஜாபால உபநிடதங்களின் பெயர்களையும் அவர் தனது பிரம்மசூத்ர பாஷ்யத்தில் குறிப்பிடுகிறார்.

24. முக்கிய பத்து உபநிடதங்களில் மாண்டூக்யம் மிகவும் சிறியது. பிருஹத் ஆரண்யகம் மிகவும் பெரியது. உபநிஷத் என்றால் அருகில் அமர்ந்து கற்றல் என்று பொருள். குறைந்தது 12 ஆண்டுகளாவது ஆசிரியர் வீட்டில் தங்கி படிக்கவேண்டும் ஒருவர் 12 ஆண்டுகள் மனம், மொழி, மெய் மூன்றாலும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு அபூர்வ சக்திகள் உண்டாகும் என்று நமது சாத்திரங்கள் கூறுகின்றன.

சுவாமி விவேகநந்தரும் தனது அபூர்வ ஞாபக சக்திக்கும், மற்றவர் மனதில் உள்ள சிந்தனைப் போக்கை அறியும் சக்திக்கும் பிரம்மசர்யமே காரணம் என்று கூறியிருக்கிறார்.

gurukulam1

நகைச்சுவைக் காட்சிகள்

25. உபநிஷத்துகள் என்பவை தத்துவ நூல்கள் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் இதில் நகைச்சுவை இல்லாமல் இல்லை! ஜெப்ஃரி பரீந்தர் என்பவர் சில காட்சிகளைப் பட்டியலிட்டு உள்ளார். அவைகளை ஒவ்வொன்றாகக் காண்போம்:-

26.விதேக நாட்டின் மன்னன் ஜனகனுடைய குரு யாக்ஞவல்கியர் என்ற பெரிய வேத அறிஞர். தானே தலை சிறந்த அறிஞன் என்று சொல்லி ஆயிரம் பொற்கிழிகள் கட்டப்பட்ட பசுமாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி தன் மாணவர்களுக்குக் கட்டளையிடுகிறார். இதற்கு அவர் கூறும் காரணம்: நான் தலை சிறந்த அறிஞன் மட்டுமல்ல. எனக்கு பசுமாடுகள் வேண்டாமா? என்கிறார்.

(முகமது பின் துக்ளக் நாடகத்தில் நகைச்சுவை நடிகர் சோ பேசுவது நினைவுக்கு வருகிறது. அமெரிக்கா போக ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் சொன்னவுடன், எதற்காக அமெரிக்கா என்று மந்திரிகள் வியக்கின்றனர். உடனே சோ, “நான் அமெரிக்கா பார்க்கவேண்டாமா? என்று கூச்சலிடுவார்).

27.இதற்குப் பின்னர் ஜனக மன்னன் தனது ஆசிரியர் யாக்ஞவல்கியரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். உங்களுக்குப் பசு மாடுகள் வேண்டுமா, தத்துவ விசாரனை செய்ய வேண்டுமா? என்று. அப்போதும் அவர் சொல்கிறார்: எனக்கு இரண்டும் வேண்டும் என்கிறார்! ஆனால் எதையும் சொல்லிக்கொடுக்காமல் எந்த தானத்தையும் ஏற்கக் கூடாது என்று என் தந்தை கற்பித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்.

( இதைப் படித்தவுடன் ஒரு ஹோட்டலில் நடந்த சம்பாஷணை நினைவுக்கு வருகிறது. இட்லி, வடை இரண்டையும் வைத்துவிட்டு உங்களுக்கு சாம்பார் வேண்டுமா?, சட்னி வேண்டுமா? என்று சர்வர் கேட்கிறான். சாம்பாரும் வேண்டும், சட்னியும் வேண்டும் ஏன், இரண்டும் போடமாட்டீர்களோ ? என்று சாப்பிட வந்தவன் சொல்கிறான்!)

28. ஓம் என்ற அரிய மந்திரத்தை முனிவர்கள் ஜபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பகன் என்பவருக்கு, நாய்கள் ‘ஒம்’ என்று ஊளையிட்டுக் கொண்டு முன்னும் பின்னும் வரும் காட்சி மனதில் தோன்றுகிறது. அது ‘உணவு கொடுங்கள், உணவு கொடுங்கள்’ என்று ஊளையிடுகிறதாம். இது அர்த்தமில்லாமல் பகட்டாக மந்திர உச்சாடனம் செய்வோரை நையாண்டி செய்வதாகும்.

(இதைப் படித்தவுடன் மாமன்னன் மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்ற சம்ஸ்கிருத நாடகத்தில் போலி புத்த பிட்சுக்களையும் சமணத் துறவிகளையும் நையாண்டி செய்வது நினைவுக்கு வருகிறது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த நாடகம் பற்றி அருமையான, சுவையான சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.)

21-gurukulam-tv-serial-2-600

29.கடவுள்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்பதை சொல்லும்போது யாக்ஞவல்கியர் பல ஆயிரம் கடவுளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆகக் குறைத்து கடைசியில் ‘ஒன்றரைக் கடவுள்’ என்று முடிக்கிறார். இது நகைச் சுவையாக தோன்றினாலும் இதன் பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளதை பாஷ்யம் படிப்பவர்கள் அறிவார்கள். அவர் தனது எதிரிகளை எச்சரிப்பதும் குறிப்பிடத் தக்கது. நீங்கள் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாவிடில் உங்கள் தலை தெரித்துவிழும் என்பார். விதக்தா என்பவர் தலை தெரித்துவிழ அவருடைய எலும்புகளை ஏதோ விலையுயர்ந்த பொருள் என்று நினைத்து திருடர்கள் திருடிக்கொண்டு போய்விடுகின்றனர்! இதுவும் ஒரு நகைச் சுவை காட்சி போல தோன்றினாலும் அந்தக் காலத்தில் உண்மையில் நடந்த சில சம்பவங்களை இவர் பயன்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

30. ஜனஸ்ருதி என்ற பெரிய பணக்காரன் பல அன்ன சத்திரங்களைக் கட்டி அன்னதானம் செய்துவிட்டு பெருமை அடித்துக்கொள்ளும்போது ஒரு அன்னப் பட்சி சொல்கிறது:– “நீ, அதோ சொறி சிரங்குடன் வண்டிச் சக்கர நிழலில் அமர்ந்திருக்கும் ரைக்வன் என்பவனுக்கு ஈடாக மாட்டாய் என்று. உடனே ஜனஸ்ருதி, ரைக்வனிடம் போய் கெஞ்சுகிறார். எனக்கு இறையுணர்வு பற்றிய உண்மை–களை போதித்தால் உனக்கு ஏராளமாகப் பணம் தருகிறேன் என்று சொன்னவுடன் அவன் அதை மறுத்து விடுகிறான். ஆனால் அந்த பணக்காரர் தனது அழகான மகளைக் கூட்டிக்கொண்டு வந்தவுடன், இவளுடைய அழகிய முகம் ஒன்றே போதுமே! என்னைப் பேச வைப்பதற்கு என்கிறான்!

மேம்போக்காக இவை நகைச்சுவையாக எழுதப்பட்டதா அல்லது ஆழ்ந்த தத்துவப் பொருளுடன் எழுதப்பட்டதா என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். ஜெஃப்ரீ பரீந்தர் என்பவர் எழுதிய நூலில் இவைகளை நகைச்சுவைப் பட்டியலில் சேர்க்கிறார்.

31.உஷஸ்தி என்ற ஏழை முனிவர் யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுவார். ஆனால் தண்ணீர் கொடுத்தபோது, இதுதான் எங்கும் கிடைக்குமே! எனக்கு எதற்கு! என்பார். பின்னர் ஒரு மன்னரின் சபைக்குச் செல்கிறார் அங்கே வேதம், தத்துவம் பற்றி பலமாக வாதப்ரதிவாதங்கள் நடக்கின்றன. நிறுத்துங்கள் என்று சொல்லி நிறுத்திவிட்டு, எனக்கும் அவர்களுக்குச் சமமான தட்சிணை கொடுத்தால் விவாதம் நீடிக்கலாம் என்கிறார்.

Adi shankaracharya with his disciples
நான் முன்னர் கூறியபடி, இவைகள் எல்லாம் 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்கள். இவைகளின் பொருள் என்ன என்பதை அறிய முழு உபநிஷத்தையும் படித்து அவை சொல்ல வந்த விசயம் என்ன என்பதை ஆராய்தல் நலம்.

உபநிஷத அற்புதங்கள் பகுதி-1 ஏப்ரல்-22, பகுதி-2 ஏப்ரல் 23 தேதிகளில் வெளியிடப்பட்டன. அவைகளையும் படிக்க வேண்டுகிறேன்.

Contact :— swami_48 @ Yahoo.com

To be continued……………………………………….

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: