எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1005 தேதி—-27th April 2014.
கம்பன் காலத்தில் பிராமணர்கள் புகழ் ஓங்கியிருந்தது என்பதை அவன் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. வால்மீகி, போதாயனர், வஷிஷ்டர் ஆகிய மூவர் எழுதிய ராமாயணங்களில் தேவபாஷையில் எழுதப்பட்ட வால்மீகி முனிவரின் கவிதைகளையே—காவியத்தையே அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக அவனே ஒரு பாடலில் கூறிகிறான். ஆக வால்மீகி முனிவன் பிராமணர்கள் பற்றிச் சொன்னதைத் தானே அவனும் சொல்லியிருப்பான் என்று சிலர் எண்ணலாம். அது சரியல்ல. எவ்வளவோ இடங்களில் அவன் வால்மீகி ராமாயணத்தில் சொன்னதை எழுதாமல் விட்டிருக்கிறான். இன்னும் பல இடங்களிலும் மாற்றியும் எழுதி இருக்கிறான். ஆக கம்பன் கூறுவதை அவன் நம்பிய ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பன் என்ன சொன்னான்?
வசிட்ட முனிவன் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்
அயோத்தியா காண்டம்—மந்தரை சூழ்ச்சிப் படலம்
பாடல் 99
என்று பின்னும் இராமனை நோக்கிநான்
ஒன்று கூறுவது உண்டு உறுதிப்பொருள்
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்
பொருள்: நான் உனக்குச் சொல்ல வேண்டிய உறுதிப்பொருள்
ஒன்று இருக்கிறது. அதை நீ நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாலை அணிந்த ராமனுக்குச் சொல்லத் தொடங்கினான்
பாடல் 100
கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரைமேல் உறைவானினும்
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரிய அந்தணர் பேணுதி உள்ளத்தால்
அந்தணர்களை மனமார ஆதரிக்கவேண்டும். ஏன் தெரியுமா? அவர்கள்
பிரம்மா (தாமரைமேல் உறைவான்), விஷ்ணு (கரிய மால்), சிவன் (கண்ணுதலான்) ஆகிய மூவரைக் காட்டிலும், ஐந்து பூதங்களையும், சத்தியத்தைக் காட்டிலும் பெரியவர்கள்.
பாடல் 101
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள்
நொந்து உளாரையும் நொய்து உயர்ந்தாரையும்
மைந்த எண்ண வரம்பும் உண்டாம் கொலோ
மகனே! அந்தணர்கள் கோபித்தபோது எத்தனை தேவர்கள் கஷ்டப் பட்டார்கள் என்று சொல்லி மாளாது; கணக்கே இல்லை. அது போல அவர்கள் மகிழ்ந்தபோது எத்தனை தேவர்கள் இன்பம் அடைந்தார்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க இயலாது. இல்லையா?
பாடல் 102
அனையர் ஆதலின் ஐய இவ் வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்
மகனே! அந்தணர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது புரிகிறதல்லவா? கொடிய பாவங்களில் இருந்து விலகி நிற்கும் மேன்மை உடையவர்கள் அந்தணர்கள் .ஆகவே அவர்கள் திருவடிகளை உன் முடிமேல் தாங்கி, இனிய சொற்களைக் கூறி அவர்களை வாழ்த்து. அவர்கள் ஏவும் செயல்களை உடனே முடிப்பாயாக.
பாடல் 103
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவநிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்தே
ஒருவனை உச்சாணிக் கொம்பில் வைப்பதும், அதள பாதாளத்தில் வீழ்த்துவதும் ஒருவனுடைய தலைவிதி ஆகும். அந்த விதிகூட, அந்தணர் ஏவலின் படி நடக்கும் என்றால் பார். அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் உண்டா? எதுவுமே இல்லை. ஆகவே இப்பிறவியிலும் மறு பிறவியிலும் பூலோக தேவர்களாகத் திகழும் அவர்களைப் போற்றுவதே சிறப்புடைய செயல்.
இதைத் தொடர்ந்து நல்லாட்சி, அமைச்சர் சொல் கேட்டல், அன்புடன் இருத்தல் ஆகியவற்றையும் வசிஷ்டர் உபதேசிக்கிறார்.
இங்கு ஒரு கேள்வி எழும். அந்தணர்கள் என்பது பிராமணர்களா? அல்லது முனிவர்களா என்று. புறநானூற்றிலும் ஏனைய சங்க நூல்களிலும், அதற்குப்பின் வந்த சிலப்பதிககரத்திலும் ‘நான்மறை அந்தணர்கள்’, ‘முத்தீ வழிபடும் அந்தணர்கள்’ என்று வருவதை நோக்குங்கால் இது பிராமணர்களையே குறிக்கும் என்பது வெள்ளிடை மலையென விளங்கும். வள்ளுவனும் (543) குறளில் அந்தணர் என்பவரை வேதத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவதைக் கண்கிறோம்.
பிராமணர்களை பூவுலக தேவர்கள் (பூசுரர்) என்றும் அழைப்பர். பாடல் 103–ல் பூலோக தேவர்கள் என்ற சொல்லைக் குறிக்கும் விளக்கம் வருகிறது. உரைகாரர்களும் பூலோக தேவர் என்றே உரை செய்கின்றனர். ஆக இந்தப் பாடல்களில் கம்பன் குறிப்பது பிராமணர்களைத் தான் என்பதில் ஐயமில்லை.
பாலகாண்டத்தில்
“அருந்தவ முனிவரும் அந்தணாளரும்” (பாடல் 183) என்று பிராமணர்களையும் முனிவர்களையும் கம்பன் வேறுபடுத்திப் பாடி இருப்பதையும் காண்கிறோம்.
மற்றொரு பாடலில்
மாதவத்து ஒழுகலம்; மறைகள் யாவையும்
ஓதலம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலம்;
மூதெரி வளர்க்கிலம்; முறையும் நீங்கினேம்;
ஆதலின் அந்தணரேயும் அல்லாமால் (பாடல் 2644)
மா தவம் செய்தல், வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், முத் தீ வளர்த்து யாகம் செய்தல் ஆகியன் அந்தணர் பணியாக மேல் கூறிய பாடலும் கூறுகிறது.
ஒரு காலத்தில் பிராமணர்களும் துறவியரும் சத்தியம், ஒழுக்கம் என்பனவற்றில் சம நிலையில் இருந்தனர். ஆகவே இரண்டு பொருள்களிலும் சில நூல்களில், இச் சொல் பயன்படுதப்பட்டது என்பதும் உண்மையே.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.